திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் !
திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் !
சுட்டெரித்த கத்தரி வெயிலையும் சமாளித்து, ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தாச்சு. கோடை விடுமுறையை சுற்றுல, கோவில் திருவிழா, உறவினர்கள் சந்திப்பு என்று வழக்கமான வகையில் கழிக்காமல் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த மாணவர்கள்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளான சிலம்பம், கராத்தே, கிக்பாக்ஸிங், வில் வித்தை, நுஞ்சாக் பயிற்சிகளை பேரார்வத்தோடும் குதூகலத்துடனும் கற்றுத்தேர்ந்திருக்கின்றனர் இந்த மாணவர்கள். திருச்சி வயலூர்ரோடு, வாசன் வேலியில் ஏகலைவன் இலவச தற்காப்புக் கலை பயிற்சி மையத்தை நடத்திவரும் மாஸ்டர் அலெக்ஸ் பாண்டியன், முழுவதும் இலவசமாகவே இந்த பயிற்சிகளை வழங்கியிருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்.
“தற்காப்புக் கலைகள் மனிதனின் உடலையும், மனதையும் கம்பீரத்துடனும், கட்டுப்பாடுடனும் வைத்து மனிதனை நல்வழிப்படுத்தக்கூடியது. இந்த கலைகளை இளஞ்சிறார்கள் தங்களது இளம் பருவத்திலேயே கற்றுத்தேர்வது மிகப்பொருத்தமானது. தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் இருந்தும் பணம் செலவழித்து பயிற்சி மையங்களில் சேர வாய்ப்பில்லாத குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாகவே கற்றுத் தருகிறோம். இந்த ஆண்டு கோடை விடுமுறை பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களக்கு பயிற்சியளித்திருக்கிறேன்.
சிலம்பத்தில் போர்சிலம்பம், தொடு சிலம்பம், தீச்சிலம்பம், அலங்கார சிலம்பம், சுருள்வாள், வாள்வீச்சு, கத்திப்பாடம், குத்துவரிசை, மான்கொம்பு, வேல்கம்பு, கதாயுத்தம், வளரி முறை, என அனைத்து பாரம்பரிய விளையாட்டுக்களையும் முறைப்படி கற்றுத் தருகிறோம். கலைகளை கற்றுக்கொள்வதில் பிடிப்பும் மரியாதையும் ஏற்பட வேண்டும் அவர்கள் உள்ளார்ந்த விருப்பத்தோடு கற்றுத்தேர வேண்டுமென்ற நோக்கில், பெற்றோர்களின் பாதம்தொட்டு வணங்கி தொடங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளை வழுவாமல் கடைபிடித்தே கலைகளை கற்றுத்தருகிறோம்.” என்கிறார், அலெக்ஸ் பாண்டியன்.
கோடை விடுமுறை என்றில்லை, ஆண்டுதோறும் கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே தற்காப்பு பயிற்சியளித்துவருகிறார் மாஸ்டர் அலெக்ஸ் பாண்டியன். ஆர்வமுள்ளவர்கள், ஏகலைவன் இலவச தற்காப்புக் கலை பயிற்சி மையம், வாசன் வேலி வாரச்சந்தை, IOB பேங்க் எதிரில், வயலூர் ரோடு, திருச்சி என்ற முகவரியில் நேரில் சந்திக்கலாம். மேலும், 8220509193 என்ற எண்ணில் மாஸ்டர் அலெக்ஸ் பாண்டியனிடமே விவரங்களை நேரடியாகவும் பெறலாம்.