டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பரிதாப சாவு! மயிலாடுதுறை அருகே பரிதாபம்!
டாஸ்மாக் மது குடித்த
2 பேர் பரிதாப சாவு!
மயிலாடுதுறை அருகே பரிதாபம்!
கடந்த மே 20-ம் தேதி தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் சில்லைறையில் விற்கப்பட்ட சயனைடு கலந்த மதுவை குடித்த இரண்டு தொழிலாளர்கள் பலியான நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திங்கள்கிழமை மாலை டாஸ்மாக் மது குடித்த இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனிகுருநாதன் (56). இவர் மங்கைநல்லூர் மெயின் ரோட்டில் கொல்லுப்பட்டறை நடத்தி வந்தார்.
இவரது கொல்லுப்பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்ற தொழிலாளி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பழனிகுருநாதனும் பூராசாமியும் திங்கள்கிழமை மாலை கொல்லுப்பட்டறையில் மர்மமான முறையில் மயங்கி கிடந்தனர்.
இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவ்விருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இவ்விருவரும் டாஸ்மாக் மது குடித்த சிறிது நேரத்தில் இறந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) வேணுகோபால் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு அருகே மானிட்டர் கம்பெனியைச் சேர்ந்த இரண்டு குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன. அதில் ஒரு பாட்டிலில் பாதியவு சரக்கு இருந்துள்ளது. மற்றொரு பாட்டில் இன்னும் பிரிக்காத நிலையில் இருந்துள்ளது.
அவ்விரு பாட்டில்களையும் போலீஸார் கைப்பற்றி அதன் சாம்பிள்களை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவ்விருவரின் உடல்களையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அவ்விருவரும் குடித்த மதுவில் சயனைடு விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.