பொதுக்குழு முதல் முதல்வர் சந்திப்பு வரை – மதிமுக அரசியல் டிராக் !
மதிமுகவின் உள்கட்சி அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மார்ச் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறிய மூன்று மாவட்ட செயலாளர் மற்றும் இதர நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
அதோடு திருப்பூர் துரைசாமியும் பொதுக்குழுவை புறக்கணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பரபரப்பான சூழலில் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய பொதுக்குழு கூட்டம் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துரை வைகோ இன்னும் கட்சியில் சில களைகள் இருக்கிறது, அதை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
மல்லை சத்தியாவோ சில பேரங்களுக்கா வேறு அரசியலுக்குப் போக மாட்டேன். உங்களோடு இணைந்து பயணிப்பேன் என்று தன்னுடைய பேச்சை முடித்தார்.
இறுதியில் பேசிய வைகோ, 2023 புத்தாண்டில் கிளை முதல் மாவட்டம் வரை ஜனநாயக முறையில் நிர்வாகிகளை தேர்வு செய்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவோம், மதிமுகவின் அரசியல் நகர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
பிறகு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டார் வைகோ, பிறகு அனைவரையும் முதல்வரிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வருடன் சிறிது நிமிடம் தனியாக உரையாற்றி இருக்கிறார் வைகோ. அந்தத் தனி சந்திப்பில் வைகோ முதல்வரிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் மேலும் துரை வைகோவை பற்றி இருவரும் பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதல்வரும் துரை வைகோவை சிறப்பாக கட்சிப் பணி ஆற்றச் சொல்லுங்கள் என்று கூறி வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைத்தாராம்.