அா்த்தமுள்ள ஆன்மீகம் – தமிழா்களுக்கு ஹோமம் என்னும் யாகம் முதன்மை இல்லை! முனைவா் கரு.ஆறுமுகத்தமிழன் (பாகம் 03)
நான் இந்து இல்லை. என்னையும் சேர்த்து இந்து என்கிறார்கள். நான் சைவன். இன்னொருவன் வைணவன். ஒருவன் முருக வழிபாட்டுக்காரன். ஒருவன் கருப்புசாமியைக் கும்பிடுகிறார் இருப்பார். சுடலைமாடனைக் கும்பிடுகிறவர் இருப்பார். நீ பேசுகின்ற வைதிக மதத்திற்கும் அவன் கும்பிடுகின்ற சாமிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா மதமும் வைதிகம்தான் என்றால், அதற்கு எதிராக இங்கே ஏகப்பட்ட மதங்கள் இருக்கின்றன.
ஓகம் என்பது வைதிக மதத்தின் கொள்கை கிடையாது. வைதிக மதத்தின் நோக்கம் வேள்விகள் செய்தல். யாகம் என்னும் தீ வளர்த்து, அதில் கடவுளுக்குக் கொடுக்கவேண்டிய பொருள்களைப் போட்டு, தீக் கடவுள் வானத்தை நோக்கி எழுகிறார். வானத்தில் உள்ள கடவுளர்களுக்கு இந்தப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பார்கள். வானத்தில் உள்ளவர்கள் நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்று நம்புவது அவர்களுடைய முறை. அவர்களுக்குக் கடவுள்கூட இரண்டாம்பட்சம்தான். வேள்வி சடங்குகள்தான் அவர்களுக்கு முதன்மையானது.
தமிழர்களும் வைதிகர்களைப் பார்த்து ஓமம் என்ற வேள்வி நடத்தத் தொடங்கி விட்டனர். புதுமனை புகுவிழா நடைபெற்றால் பசுமாட்டை வீட்டுக்குள் அழைத்துச் செல்வது. கணபதி ஓமத்தோடுதான் புதுமனை புகுவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழர்களின் தாத்தா காலத்தில் புதுமனை புகுவிழாவின்போது ஓமம் நடத்தப்பட்டது.
பால்தானே காய்ச்சப்பட்டது. பால் காய்ச்சுவதுதானே தமிழர்களின் பண்பாடாக இருந்தது. பிள்ளைகள் பிறந்தால் வீட்டைச் சுத்தம் செய்வார்கள். அழுக்கடைந்த துணிகளை அப்புறப்படுத்துவார்கள். இது ஒருவகையில் சுத்தம் செய்யும் பணிதான்.
இப்போது என்ன நடக்கின்றது என்றால் பிள்ளை பிறந்தால் புண்ணியாதானம் என்று வைதிகர்களை அழைத்து ஒமம் வளர்த்து சடங்கு செய்கிறார்கள். கல்யாணத்தையே ஓமம் வளர்த்துதான் நடத்துகின்றார்கள். 60 வயது நிறைவடைந்தால் அதற்கு விழா கொண்டாட ஓமம் வளர்க்கின்றார்கள். தீக்கடவுளை ஏழுமுறை வலம் வந்து தீக்கடவுள் சாட்சியாக இவள் என் மனைவி என்று கூறுகிறார்கள். நமக்கு முதன்மை நீர்தான். தீ அல்ல. வைதிகர்கள் தீ வளர்த்து சடங்கைச் சரியாக செய்தால் அது அவர்களைச் சொர்க்கத்திற்குக்கூட கொண்டு செல்லும்.
ஒரு சேர மன்னன் சொர்க்கத்திற்குச் செல்ல ஓமம் என்னும் யாகம் வளர்த்தார் என்பதற்குப் பதிற்றுப்பத்தில் பாடல் உள்ளது. அரசன், பணக்காரர்கள் போன்றவர்கள் யாகம் வளர்த்தனர். பின்னர் எளிய மக்களும் யாகம் வளர்க்கத் தொடங்கினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வைதிக மரபில் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவது என்பது அவர்களின் மரபு கிடையாது. கோயிலைக் கட்டியது தமிழர்கள். கோயிலுக்கும் வைதிர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஓகம் என்பது யோகா என்னும் உடற்பயிற்சியா என்ற கேள்வி எழுகிறது. தமிழர்கள் கடவுளை வணங்குவதையே ஒரு பயிற்சியாகக் கொண்டுள்ளனர்.
திருமந்திரத்தில், ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்டபை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே…’ என்று கூறப்பட்டுள்ளது. உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உடல் ஒழுங்காக இருக்கவேண்டும். தண்ணீரைப் பாதுகாக்கவேண்டும் என்றால் அதை வைக்கும் பானை ஒழுங்காக இருக்கவேண்டும் அல்லவா? உடம்பைக் காப்பது உயிரைக் காக்கத்தான்.
— முனைவா் கரு.ஆறுமுகத்தமிழன்.