வைதீக சாமிகள் வேறு, எங்கள் சாமிகளுக்குச் சுருட்டு, சாராயம் படைப்போம் ! அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு. ஆறுமுகத் தமிழன்
திருமூலர்தான் சைவ சமயத்தை நிறுவனமயமாக்கியவர். அவர்தான் சைவர்கள் சொல்லி மகிழ்கிற நமச்சிவயம் என்ற சொல்லை புழக்கத்தில் விட்டவர். திருமூலர்தான் சைவத்திற்கு எதிரான கருத்துகளையும் ஆங்காங்கே வெடிகளாக விதைத்தும் வைத்துள்ளார். சைவம் நிறுவனமயத்தைத் தொடர்ந்து ஆதரித்தவர் சங்கராச்சாரியார். அவர் அத்துவைதம் என்ற ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். அத்துவைதம் என்றால் ஒன்று, அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

ஒன்றுதான் இருக்கின்றது என்பதுதான் சங்கரச்சாரியார் கொள்கை. வேதம் என்ற ஒன்று இருக்கிறது. வேறு எதுவும் கிடையாது. பிரம்மம் இருக்கிறது. மற்ற எதுவும் இல்லை. கடவுள், இறைவன் போன்ற சொற்களை அவர்கள் பயன்படுத்த முடியாது. கடவுள் என்றால் கடவுதல் என்ற சொல்லிலிருந்து வருகின்றது. கடவுதல் என்பதற்கு இயக்குதல் என்ற பொருள். இயக்குபவன் ஒருவன் இருக்கிறான் என்றால் இயங்குகிறவன் என்ற ஒருவன் இருக்கவேண்டும். அத்துவைத கொள்கைப்படி இயங்குகிறவன் என்ற ஒருவன் இல்லை என்பதால் அவனை ஏன் இயங்குகிறவன் என்று ஏன் சொல்லவேண்டும்?
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இறைவன் என்றால் தலைவன். தலைவன் என்றால் தொண்டன் இருக்கவேண்டும். ஒற்றை ஆள் இருக்கும் இடத்தில் எதற்குத் தலைவன். ஒன்றுதான் உள்ளது என்பவர்கள் கடவுள், இறைவன், பதி என்றெல்லாம் கூறமுடியாது. அதற்குத்தான் பிரம்மம் என்றார்கள். சைவ சித்தாந்தம் என்பது பிரம்மத்தில் கிடையாது. அதனால்தான் சைவ சித்தாந்தம் என்பது நாத்திகக் கோட்பாடுடையதாகும். சைவ சித்தாந்தம் ஒருமை என்ற கோட்பாட்டை ஏற்றிருந்தால் அது வைதீகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். சேர்க்கப்படவில்லை என்பதே அது நாத்திகமுடையது என்பதாகும்.
சங்காரச்சாரியார்
ஒருமை என்பவர்கள் தங்களுக்கு எதிரான பௌத்தம், சமணத்தை எதிர்நிலையில் வைத்தார்கள். எதிர்நிலையிலும் சைவ சிந்தாந்தத்தை வைக்கவில்லை. அப்படியென்றால் நாங்கள் யார்? என்ற கேள்வியை எழுப்பினர். வேதம்தான் மையம் என்றார்கள். அறுமத நிறுவனர் என்று சங்கரச்சாரியருக்குச் சிறப்பு பெயர் உண்டு. சைவம், வைணவம், காணபத்தியம், கௌமராம், சாத்தம், சௌரம் என சமயங்களை ஆறாகப் பிரிக்கும் பணியையும் சங்காரச்சாரியார் செய்தார்.
சிவனை, விஷ்ணுவை, சக்தியை, குமரனை, கணபதியை, சூரியனை வழிபடுகிற மதம் என்பதே அந்த ஆறு மதம். எந்தக் கணக்கில் இந்த மதங்கள் பிரிக்கப்பட்டன. நாங்கள் சுடலைமாடனைக் கும்பிடுகிறோம், வழிபடுகிறோம். இந்த சாமி எந்த மதத்தில் வரும். வேதத்தைப் பற்றி பேசுபவர்களுக்கு, சமஸ்கிருதத்திற்குப் பண்பாட்டு வேர் கிடையாது. சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் மொழி. எந்த மக்களால் பேசப்பட்ட மொழி. பண்பாட்டுக்கும் அந்த மொழிக்கும் என்ன தொடர்பு. அதுதான் பண்பாட்டு மொழி என்கிறார்கள். பண்பாட்டுக்கும் அந்த மொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
பொங்கல் வைத்தும் சாமி குடும்பிடுவோம். கெடா வெட்டியும் சாமி கும்பிடுவோம். பன்றி கறி வைத்தும் சாமி கும்பிடுவோம். சுருட்டு, சாராயம் வைத்தும் சாமி கும்பிடுவோம். இப்பிடி கும்பிடு, அப்படி கும்பிடு என்று எங்களைக் கட்டாயப்படுத்த நீங்கள் யார்? எங்கள் சாமியை எங்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என்றவர்கள்தான் தமிழர்கள்.
ஆக்கம் – பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்
அர்த்தமுள்ள ஆன்மீகம் முந்தைய தொடரை படிக்க
👇👇👇