“அர்த்தமுள்ள ஆன்மீகம்” தமிழர்களின் அறம் – முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்- பாகம் 1
தமிழர்களின் அறம் (பாகம் -01)
வெற்றியை தாங்கள் கையில் எடுத்திருக்கும் வேல் தரும் என்று கருதுகிறார்கள். நீ ஏற்கனவே கையில் வைத்து ஆண்டு கொண்டிருக்கிறாயே ஒரு கோல் அதுதான் உனக்கு வெற்றியைத் தரும். ஆள்கிற முறைமை, நெறி பிறழாத ஆட்சி, ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாரையும் சமமாக கருதுகிற போக்கு இவையெல்லாம் ஆளுகிற மன்னனுக்கு அல்லது ஆட்சி பரப்பை விரிக்க நினைக்கிறவர்களுக்கு இருக்கும் என்றால் அந்த கோல் போதுமானது. அந்த வெற்றியை தருவதற்கு வேலை கையில் தூக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிவவாக்கியார் சொல்லுகிறார்.
எதை செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று உங்களுடைய மனச்சான்றின் அடிப்படையில் முடிவெடுப்பீர்கள். அது மனச்சான்று நிலை என்று சொல்லப்படுகிறது. அஃது ஒரு சின்ன ஒழுங்குமுறைதான். ஒரு பொருளை வாங்குறதுக்கு ஒரு 50 பேர் போகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் எல்லாரும் போய் மொய்க்க மாட்டார்கள்.
ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பார்கள். இந்த ஒழுங்குதான் அதனுடைய தொடக்கம். தங்களை தாங்களே ஒழுங்கு செய்து கொண்டு ஒரு வரிசையை ஏற்படுத்தி, அதில் நின்று கொண்டு எல்லாருக்கும் உரியவை எல்லாரும் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அறம். இதில் இன்னொரு கேள்வி வரும். அந்த வரிசையில் நின்று அதை பெறமுடியாத வலுவில்லாத பலவீனர் ஒருத்தர் வந்தார் என்றால் அவருக்கு அந்த வரிசை முறைமையை உடைத்து அவருக்கான இடஒதுக்கீட்டை கொடுத்து அவரை முன்னால் செல்வதற்குச் சொல்வதும் அறம்தான்.
வரிசையில்தான் நிக்கணும். வரிசையில் நின்றுதான் எல்லாரும் வரவேண்டும் என்று சொல்வதும் அறம்தான். அந்த வரிசையை உடைத்து நிற்க இயலாத ஒருவர் வருகிறபோது இயலாதவருக்கு முன்னிலை கொடுத்து நீங்க முதலில் வாங்கிக்கொள்ளுங்கள். அதுக்கு அப்புறம் நாங்க எல்லாம் வாங்கிக் கொள்கின்றோம் என்றும்; அதற்காக ஓர் இடஒதுக்கீடு செய்வதும் அறம்தான். அப்போது அறத்துக்கு இதுதான் வரையறை. அதுதான் வரையறை என்று வரையறுக்க முடியாது.
உண்மையை சொல்வதும் அறம். பொய் சொல்வதும் அறம்தான். எப்ப அப்படின்னா அந்த பொய், உண்மை விளைவிக்கக்கூடிய பயனை விளைவிக்கும் என்றால் பொய் சொல்வதும் அறம்தான். “பொய் நன்மை பயக்கும் எனில் பொய்யும் அறம்தான். அவர்கள் சொல்லுகிற அறங்கள் எல்லாம் எப்படி அமையும் அப்படின்னா கட்டளை நூல்களாக அமையும். அது உத்தரவு போடும். நீ இதைத்தான் செய்யலாம், இதை செய்யக்கூடாது, இப்படித்தான் செய்யணும், இதைத் தாண்டி வேற எதுவும் செய்யக்கூடாது அப்படின்னு அது கட்டளை இட்டுக் கொண்டே இருக்கும்.
(தொடரும்)
ஆக்கம் – முனைவர் தி.நெடுஞ்செழியன்.