செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மென்பொருள் வளர்ச்சி துறை (சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் துறை) மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையே தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச, தலைமை தாங்கினார். வணிகவியல் பள்ளி புல முதன்மையர் முனைவர் எம். ஜூலியஸ் சீசர் ஒருங்கிணைத்தார்.
மென்பொருள் வளர்ச்சி துறை சார்பாக துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜார்ஜ் கேப்ரியல் ரிச்சர்ட் ராய், துணை ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஜினோ சிந்தியா, திருமிகு. லட்சுமண் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மீடியா வேவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எஸ். சந்திரு கையெழுத்திட்டார். தங்கள் நிறுவனத்தின் செயல்களைப் பட்டியலிட்ட அவர், கடந்த 15 ஆண்டு காலமாக மாணவர்களுக்குப் பல வகையில் புதிய மென்பொருள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். செயின்ட் ஜோசப் கல்லூரி கல்லூரி மாணவர்கள் புதிய மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பேரு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார். மதன் பாபு மற்றும் கவின் ஜேவ் ஆகியோர் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி, படிப்பிடைப்பயிற்சி, தொழில்நுட்ப செயல்முறை பயிற்சிகள் மற்றும் நேரடி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. மாணவர்கள் தொழில்துறை அனுபவம் பெறுவதுடன், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்களைத் தயாரித்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.