குபேரரின் குமாரர்கள் வழிபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்! ஆன்மீகப் பயணம் தொடர் 9
திருச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது. இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இக்கோவிலின் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. திருவாண்ணாமலையார் அருள்வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன் வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது. கோவிலை சுற்றிலும் தோப்புகளும், வயல் வெளிகளும் உள்ள சூழலில் அமைதி தழுவ அமைந்துள்ளது.
இவ்வாலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பை கடந்ததும் நீண்ட நடைபாதையில் அடுத்து இன்னொரு முனையும் உள்ளது. அகன்ற பிரகாசமும், மகா மண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகா மண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள இடத்தில் அர்த்தமண்டபம் காணப்படுகிறது.

கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது. அர்ச்சகர் கற்பூர தீபாராதனை காட்டும் போது அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு இறைவன் திருமேனி பளப் பளவென ஜொலிக்கும் இந்த அழகை கண்டு நம் மனம் வியந்து பக்தி பரவசப்படுவதை தவிர்க்க இயலாது. அந்த கரும்பச்சை மரகத மேனியாள் ஆன மரகத லிங்கத்தின் முன் நின்று நாம் தரிசனம் செய்யும்போது மெல்லிய அதிர்வலைகள் நம் மனதிற்குள் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும். மகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சிலை உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட மறுக்கையில் மலர் கொண்டு கால் கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் அன்னை மீனாட்சி.
மகா மண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் நாம் ஒருசேர தரிசனம் செய்யலாம். மேலும், ஆலயத்திற்கு என்று தனி வரலாறு ஒன்று உள்ளது. பொன்னால் ஆகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவ லோகத்திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து “ஓம் நமச்சிவாயா” என்று ஓதி ஒருமுறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காக பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தை தரும் அற்புதம் உடையது. யோக தவஜப சக்திகளை பெற்றிருப்பவர்களை தவிர இந்த பொன் வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகுபன் இருவரிடமும் அளித்து பூலோகம் எங்கும் உள்ள சுயம்புலிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.

சுயம்புலிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள் சிறந்த சிவ சேவலர்கள் எனவே, அவர்கள் கண்களில் பொன் வில்வசாரம் தென்பட்டது. அவர்கள் கரங்களில் நிலைத்து நின்றது. இதைக்கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி மணிக்ரீவன், நளகுபன் இருவரும் புறப்பட்டனர். பொன் வில்வசாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே என்று எண்ணி பூலோகம் எங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்புலிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன் வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வத்தலம் போல காட்சி தர சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது. பல நூறு ஆண்டுகள் தலை யாத்திரை மேற்கொண்ட அவர்கள் பல நூறு சுயம்புலிங்க முத்திரைகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன் வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து “ஓம் நமச்சிவாய” என்று ஓதினர் இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.

அண்ணாமலையாரிடம் வில்வ தலம் சொர்ணமாக பிரகாசித்தது சென்னி வளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரரியாய் வழிகாட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத் தவத்துறை என பெயர் பெற்ற தற்போதைய வால் குடியில் உள்ள சப்தரிஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர். நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர் தங்கள் கரத்திலிருந்து பொன் வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து வந்து ஆலயத்தின் கருவறை நோக்கி சென்று அங்கே அவர்கள் ஓர் அதிசயத்தை கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்புலிங்க திருமேனியில் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பல மடங்காக பெருகி ஒளி வீச கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ஓம் நமச்சிவாய என ஓதி அர்ச்சிக்க அது மேலும், மேலும் , பொங்கி பன்மடங்கு ஒளி வீச தொடங்கியது.
புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன் வில்வ சாரத்தின் மகிமையையும் தேவ ரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழ நாட்டில் உள்ள சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பௌர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள் சகல நன்மைகளையும் பொருட்களையும் பெற குபேரன் அருள் பாலிக்கிறார். கருவறை தேவ கோட்டத்தில் துர்கா தேவியும் தக்ஷிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கே பெருமாள் ஆலயம் உள்ளது.
லட்சுமி நாராயண பெருமாள் ஒரு சன்னதியிலும் வரதராஜ பெருமாள் ஒரு சன்னதியிலும் ஸ்ரீதேவி – பூதேவியுடன் இன்னொரு சன்னதியிலும் காட்சி தருகிறார். அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும் மேற்கில் செவி சாய்ந்த விநாயகர் சன்னதியும் உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் கொண்டு அதிசயமாக காட்சி தருகிறது. வடக்கு பிரகாரத்தில் உள்ளது இந்த தலவிருட்சம். பௌர்ணமி அன்று தல விருட்சமான பொன் வில்வம் மரத்திற்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி அடி பிரதக்ஷணம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. சிவபெருமானுக்கு சிவக்காம முறைப்படியும், லட்சுமி நாராயணருக்கு வைகாசன ஆகம முறைப்படியும் தினசரி இங்கு இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஏகாதசி, பிரதோஷம், ஆடி, தை வெள்ளி, வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி போன்ற உற்சவங்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
– பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.