அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும் – எங்கள் கல்வியும் !  

திருச்சியில் அடகு நகையை விற்க

எங்கள் ஊருக்கு மிக அருகில் இருந்த ஒரே அரசு மேல்நிலைப் பள்ளி மீன்சுருட்டியில்தான் இருந்தது. எங்கள் பகுதியிலிருந்து மீன்சுருட்டிக்கு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.வசதியானவர்கள் அரசு வேலையில் இருந்தவர்கள் வெளியூர்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து படிக்கவைத்தனர். என் தந்தையார் ஒரு கூலித்தொழிலாளி என்னை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்துவிட்டார். என்னுடன் நிறைய மாணவர்கள் பயின்றனர். சில மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.எங்கள் ஊருக்கும் பள்ளிக்கும் 10 கி.மீ தொலைவு இருக்கும். பள்ளியில் இலவச பேருந்து பயண அட்டை கொடுக்கும் வரையில் பள்ளிக்கு தினமும் காலில் செருப்புக்கூட இல்லாமல் நடந்தே செல்வதும், திரும்ப நடந்தே வருவதும் தான் எங்கள்பயணம். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் பேருந்திலும்,மிதிவண்டியிலும் போவார்கள்.

இலவச பயண அட்டைவந்ததும் வீட்டில் பழைய கஞ்சி, கம்மங்கூழ் இருக்கும் சாப்பிட்டு விட்டு  அருகில் உள்ள குறுக்கு ரோடு பேருந்து நிலையத்திற்கு தினமும் 3 கி.மீ நடந்து சென்றுகுறுக்கு ரோடு பேருந்துநிலையத்தில் காத்து நிற்போம். மீன்சுருட்டி செல்வதற்கு நகரப் பேருந்தில் தான் போக வேண்டும். இலவச பயண அட்டையை வைத்து நகரப் பேருந்தில் மட்டுமே தான் செல்ல முடியும். அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் நிறைய மாணவர்கள்அந்தப் பேருந்தில் தான் வருவார்கள், கூட்டம் அதிக அளவில் இருக்கும். சில நேரங்களில் பேருந்தில் ஏறமுடியாமல் போகும். வேறு வழியில்லாமல் மிதிவண்டியில் வரும் மாணவர்களிடம் கேட்டு அவர்களை வைத்து மிதித்துச் செல்ல வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அவர்கள் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதும் உண்டு.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அரசு மேல்நிலைப் பள்ளிகுறுக்கு ரோட்டில் புறப்படும் எங்கள் மிதிவண்டிப் பயணம் சுண்டிப்பள்ளம், காட்டுக்கொல்லை,நெல்லித்தோப்பு, வழியாக மீன்சுருட்டி சென்றடையும். திரும்பும் பொழுதும் இதே நிலைமைதான்.பேருந்திலும், மிதிவண்டியிலும் செல்வது இயல்பாகிவிட்டது. இரண்டும் இல்லாதபொழுது 10 கி,மீ தொலைவும் குறுக்கே நடந்துபோனதும் உண்டு. திரும்பி வந்ததும் உண்டு.

பள்ளியின் நுழைவு வாயில் இரண்டு வயதானவர்கள் ஒரு அக்கா மூவரும் மண் தரையில் கடை போட்டு இருப்பார்கள் அதில் ஒருவர் சினிமா பாடல் புத்தகம், நடிகர்களின் புகைப்படங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் வைத்து விற்பனை செய்வார். வயதான பாட்டியும் அக்காவும் சோளம், மரவள்ளி கிழங்கு, இலந்தைப்பழம், கமர்கட் மிட்டாய் உள்ளிட்ட பொருட்களைவிற்பனை செய்வார்கள். ஒருவர் தள்ளு வண்டியில் சிம்லா கேக் விற்பார் இவைகள் தான் எங்கள் திண்பண்டங்கள். பள்ளியில் வழங்கும் மதிய உணவு தான் எங்களுக்கான உணவு. அந்த உணவை வாங்குவதற்கு சுட்டெரிக்கும் வெய்யலில் காலில் செருப்புக்கூட இல்லாமல் நீண்ட வரிசையில் நின்று மதிய உணவை வாங்கி சாப்பிடுவதற்குள் மதிய வகுப்பிற்கு மணி அடித்து விடும். அவசரத்தில் பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் வகுப்பிற்கு சென்றுவிடுவோம். ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை முட்டை போடுவார்கள் அதுவும் முன் வரிசையில் நிற்பவர்களுக்கு தான் கிடைக்கும் கடைசி வரிசையில் நிற்பவர்களுக்கு கிடைக்காது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

விளையாட்டு பாடவேளை வந்ததும் மீன்சுருட்டி கடைத்தெருவிற்கு வந்து மதுரை முனியாண்டி என்று ஒரு உணவுக்கடை இருக்கும் அந்தக் கடையில் பரோட்டோ சுவையாக இருக்கும். கையில் காசு இருக்கும் போது அந்தக் கடையில் பரோட்டாக்களை வாங்கி சாப்பிடுவேன்.அதன் பிறகு எட்டாம் வகுப்பு விடுதியில் சேர்த்து விட்டேன். பனிரெண்டாம் வகுப்பு வரையில் விடுதியில் தங்கி படித்தேன்.

பாடல் புத்தகம்மழைக்காலங்களில் மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும். குடை வைத்து இருப்பதற்கு வசதி இருக்காது. சாக்குப் பைகள் தான் குடையாக இருக்கும். அதை முக்கோண வடிவில் தலையில் போட்டுக்கொண்டு பள்ளிக்குச்செல்வேன். புத்தகங்கள் நனையாமல் இருக்க சவுதால் பையில் வைத்து பள்ளிக்கு செல்வதும் உண்டு. வசதியுள்ளவர்கள் தோளில் மாட்டக்ககூடியப் பையும், ஒயர் பையும் வைத்து இருப்பார்கள். வசதியில்லாத என்னைப் போன்றவர்கள் நரம்பு பை வைத்து இருப்பார்கள். இதில் தான் புத்தகங்களை வைத்து சுமந்து செல்வேன்.பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் மரத்தடியில் மண் தரையிலும், சிமெண்ட் தரையிலும் உட்கார்ந்துபடித்தோம்.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு வந்தேன். பத்தாம் வகுப்பில் எப்படியாவது தேறிவிட வேண்டும் என்று கடினமாகப் படித்தேன். தேர்வு எழுதினேன் கணக்குப் பாடம் மட்டும் சரியாக எழுதவில்லை. இந்த முறை தேர்வில் கணக்குப் பாடத்தில் நாம் தேர்வது கடினம் தான் என்று மனதில் பட்டது.  பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது நான் நினைத்து போல் கணக்குப் பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தேன். தேர்வில் தோல்வி என்றதால்என் தந்தையார் திட்டித் தீர்த்துவிட்டார். குடும்பஉறவினர்கள், நண்பர்கள் யாரும் ஆறுதல்கூட சொல்லவில்லை.குடும்ப சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க வைக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று அறியாமல் தவித்து நின்றேன்.

ஓராண்டு வீட்டில் இருந்தக் காலத்தில் என் தந்தையார் கூலி வேலைக்குச் செல்லும் போது என்னையும் அழைத்துச் சென்று வயல்களில் நெல் அறுப்பது நெல் கட்டுகளை தூக்குவது என்று என் தலையில் குடும்பப் பொறுப்புகளை சுமக்க வைத்தார். தேர்வில் தோல்வி அடைந்ததற்குத் தண்டனையாக வயல்வெளிகளில் உழன்றேன். தந்தையின் கஷ்டத்தை உணர்ந்தேன். வறுமையின் வலிகளை அனுபவித்தேன்.வயல்வெளி எனக்கு நிறையக் கற்றுத் தந்தது. உற்றார் உறவுகளைப் பற்றி அறிந்தேன். இயற்கை நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. வயல்வெளியை என்னால் மறக்கமுடியாது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விதைப்பது தொடங்கி அறுப்பது வரை வேளாண்மையின் அனைத்துக் கூறுகளையும் கற்றேன். உழைக்கும் மக்களிடம் பழகினேன். உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட வாய்மொழி வழக்காறுகளையும் தமிழ்ச்சொற்களையும் அவர்களிடமிருந்து அறிந்தேன். வயல்வெளிகளில் என் தாய்மார்களின் நடவுப் பாடல்களையும் ஒப்பாரிப் பாடல்களையும் கேட்டேன். அவர்களின் கஷ்டங்களையும் வலிகளையும் உணர்ந்தேன். எப்படியாவது நாம் கஷ்டப்பட்டு படிக்கவேண்டும் என்றுஉடனே மறு தேர்வுக்கு விண்ணப்பித்து தனித்தேர்வு எழுதினேன். ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றேன். மேல்நிலைக்கல்வி எனக்குத் தடைக்கல்லாக இருக்கும் என்று இருந்தேன் அதிலிருந்து மீண்டு மீண்டும் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன்.

எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பாடம் பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாக கற்றுக் கொடுத்தார். தமிழ் மீதான ஆர்வம் வளர்ந்தது. வரலாறு பாடம் பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு.சிதம்பரம் அவர்கள் (கே.என்.சி) இந்திய வரலாறு, தமிழக வரலாறு அரசியல் உள்ளிட்ட பல வரலாறுகளை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும்சரளமாகப் பேசுவார். அவர் நடத்திய வரலாற்றுப் பாடங்கள் இன்றும் நினைவில் உள்ளது.வணிகவியல் பாடத்தை பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு. பாண்டியன் (கே.பி) ஆவார். மாணவர்களிடம் மிகவும் எளிமையாக பழக கூடியவர்.ஆங்கிலம் பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு. காமராஜ் (கே.கே) அவர்கள். கடும் சினம் கொண்டவர். அவர் உருவத்தைக் கண்டால் அனைவரும் அஞ்சி நடுங்குவோம்.வகுப்பிற்கு வந்ததும் ஆங்கிலதில் தான் பேசுவார் கேள்வி கேட்பார். எங்களுக்கு ஆங்கில உச்சரிப்பு சரியாக வராது என்பதால் பயந்து இருப்போம்.

கணக்குப்பதிவியல் பாடத்தை பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு. பாலசண்முகம் (பி.பி) அவர்கள் கடும் சினம் கொண்டவர்.இவரையும் கண்டால் அனைவரும் அஞ்சி நடுங்குவோம். வகுப்பிற்கு உள்ளே வந்ததும் வரிசையாக வாய்ப்பாடு கேட்பார் ஒவ்வொருவரும் சொல்லவேண்டும். தலைகீழாக சொல்ல வேண்டும் என்பார்.பொருளியியல் பாடத்தை பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு. கே.ராமலிங்கம் (கே.ஆர்) அவர்கள் வகுப்பிற்கு உள்ளே வந்ததும் பாடத்திற்கு நேரிடையாக சென்று விடுவார். மதியம் வகுப்பு என்பதால் பாதி பேர் தூக்கத்தில் இருப்போம். இருப்பினும் அவர் பொருளியியல் பாடம் நடத்தினால் அனைவரும் ஆர்வத்துடன் கவனிப்போம். பள்ளியில் இருக்கும் பல ஆசிரியர்கள்எங்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றாலும்நன்கு அறிமுகமானவர்கள் தான். அனைத்து ஆசிரியர்களிடமும்  அன்புடன் பழகினோம்.பள்ளி ஆண்டு விழா என்றாலே ஆடல், பாடல், நடனம், நாடகம், விளையாட்டு இவற்றிற்குப் பஞ்சம் இருக்காது.ஆர்வமுள்ள மாணவர்கள் அனைத்திலும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பள்ளியில் எங்கள் சீருடை நீலம் வெள்ளை தான். சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம். இருப்பினும் ஒரு ஜோடி சீருடை வாங்கி அதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் காலத்தை ஓட்டினோம். எங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டிப்புக்குப் பெயர் போனவர்கள். சீருடை இல்லாமல் வந்தால் வெளியே அனுப்பி விடுவார்கள். விளையாட்டு பாடவேளையில் உடல் ஆரோக்கியத்திற்கான அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தனர். பள்ளியில் மாணவர்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு சீருடை தான் அவசியம் என்றுவிளையாட்டு ஆசிரியர்கள்கடைப்பிடித்தனர்.பின்நாளில் இப்பள்ளி சீருடையில் சாதியின் அடையாளம் புகுத்தப்பட்டது.

மீன்சுருட்டி பாப்பாகுடி, காடுவெட்டிப் பகுதிகள் எப்பொழுதும் சாதியப்பூசல்களுக்கு எளிதில் ஆட்படும் பகுதியாகும். குறிப்பிட்ட சமூக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதிப்பெருமையின் காரணமாக அடிக்கடி கைகலப்பில் இறங்குவர். அரசியல் கட்சியின் தலைவர்கள் கைது என்றால் பந்த் நடத்துவார்கள் அந்நேரங்களில்பேருந்துகளை மறிப்பது, அடித்து நொறுக்குவது, மரத்தை வெட்டி ரோட்டின் நடுவே போடுவது அவ்வப்பொழுது நடக்கும். அந்த நாட்களில்பேருந்துகள் முழுவதும் நிறுத்திவிடுவார்கள். வேறு வழியில்லாமல்பள்ளியில் இருந்து 10 கி,மீ தொலைவும்  நடந்துபோனதும் உண்டு. திரும்பி வந்ததும் உண்டு.

விடுதியில் தங்கிப் படித்த நாங்கள் அருகில் இருக்கும் நல்லையா திரையரங்கத்திற்கு ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல், விஜய் அஜித் படங்கள் வந்தால்   சென்று விடுவோம். பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்குகுடியசு தினம், சுதந்திர தினம் வருகின்ற போது பள்ளியில் கொடி ஏற்றம் முடிந்ததும் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் படம் பார்க்க அனுமதி வழங்கி விடுவார் அந்த இரண்டு தினங்களில்மட்டும் அனைத்து மாணவர்களும் படம் பார்க்கசென்றுவிடுவோம். கடைசியாக மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படம் பார்த்தோம்.

இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மருத்துவர்கள்,பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், காவலர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு நிலைகளில் மேம்பட்டவர்களாக திகழ்கின்றனர். இப்பெருமை வாய்ந்த பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி எங்களின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை செப்டம்பர் 27 ஆம் தேதி மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடுகின்றோம். இவ்விழாவில் எங்களுக்குப் பாடத்தோடு நல்லறிவையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தி எங்கள் பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

 

—    முனைவர் சீமான் இளையராஜா

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.