மக்கள் வழக்கறிஞர் கோ. போஜகுமார் – 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் ! – யாவரும்… கேளீா்…(தமிழியல் பொதுமேடை)-34
அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 34 ஆம் நிகழ்வு, கடந்த 22.11.2025 சனிக்கிழமை அன்று “மனித உரிமைக்கான வழக்கறிஞர் கோ.போஜகுமார்” 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்குக் கீழைக்காற்று நூல் விற்பனையாளர் தோழர் இராஜா சிறப்புரையாற்றினார். சிறப்புரையாளரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தோழர் இராஜா அவர்களுக்குப் பேராசிரியர் நல்லமுத்து பயனடை அணிவித்துச் சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.
”நினைவேந்தல் நூல் வெளியீடு தொடர்பான பணியின்போது, எனக்குக் கொஞ்சம்கூட அறிமுகம் இல்லாத வழக்கறிஞர் போஜகுமார் அவர்களின் செயல்பாடுகள் வழக்கமான வழக்கறிஞர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை நான் உணர்ந்தேன். அந் நூலில், போஜகுமார் தன் அறையில், “இலஞ்சம், திருட்டு, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டேன் என அலுவலகத்தின் முகப்பில் பலகை வைத்திருந்தார் என்பது எனக்குப் பெரும் வியப்பைத் தந்தது.

வழக்கறிஞர் போஜக்குமார் குறித்து உரையாற்றவிருக்கும் தோழர் இராஜா இடதுசாரி சிந்தனையாளர், களப் போராட்ட வீரர், கீழைக்காற்று நூல் விற்பனையகத்தின் பொறுப்பாளர். அலுவலக வடிவமைப்பாளர். மேலும் பெரியாரியச் சிந்தனையாளர்” என்பதாக அறிமுக உரை நிகழ்த்தினார், பேரா. தி.நெடுஞ்செழியன்.
தொடர்ந்து சிறப்புரையாற்றித் தோழர் இராஜா, “திருச்சியில் வைர வியாபாரியான திரு. T.V.கோபாலன், திருமதி சரோஜா தம்பதிகளின் இரண்டாவது மகனாக 30.9.1956 அன்று போஜகுமார் பிறந்தார். தோழரின் மனைவி குடும்பம் இரு குழந்தைகள் மீதும் குடும்பத்தினர் அனைவரின் அன்பையும் பாசத்தையும் பெற்றவர். குழந்தைகள் பேச்சை இரசிப்பவர். தாய் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். படித்து வளர்ந்ததும் திருச்சியில்தான். சட்டக்கல்விக்காக (L.L.B) பெங்களூரில் உறவினர் இல்லத்தில் தங்கிப்படித்தார். 1988 முதலாக, திருச்சியில் வழக்கறிஞராகச் செயல்பட்டார்.
இளமையிலேயே துடிப்பும் சுயமரியாதை உணர்வும் கொண்டவர். துணிச்சல்காரர். எளிய மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர். எளிமையாக வாழப் பழகிக் கொண்டவர். வழக்கறிஞர்களுக் கெல்லாம் முன்மாதிரியாக மக்கள் விரோதிகளுக்கு ஆஜராக மறுத்த மூத்த வழக்கறிஞர். காவலர்களோ, அரசு ஊழியர்களோ அரசால் பாதிக்கப்பட்டாலும் நீதிக்காகக் குரல்கொடுத்தவர்.
பல வழக்குகளில் வெற்றிகண்ட அவரது திறமையை அறிந்ததைப் பார்த்துத் தனக்கு மட்டும் வழக்கறிஞராகச் செயல்பட வாருங்கள் என நடிகர் சரத்குமார் கடிதம் அனுப்பியதை மறுத்து, நான் மக்களுக்காக, இயக்கத்துக்காக வாதாடவேண்டும் எனக் கூறிக் கடிதத்தையே கிழித்துவிட்டார். தன் தாய் தந்தை வணங்கிவந்த பஜனை மடத்தையே மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் அலுவலகமாக மாற்றியவர். இளம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அகாடமியாகவும் அந்த இடம் பயன்பட்டது. தனது தாய், தந்தை இறப்பில் பார்ப்பனச் சடங்கு மரபுநெறிகளை தூக்கியெறிந்து மக்களுக்கு முன்னுதாரணமாகச் சுயமரியாதையோடு அவர்களின் உடல்களை அடக்கம் செய்த நெஞ்சுறுதியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

திருச்சி நீதிமன்றத்தில், பார்ப்பன வக்கீல்கள் நீர் அருந்த ஒரு பானை, பார்ப்பன அல்லாத வக்கீல்கள் நீர் அருந்த ஒரு பானை என்றிருந்ததை உடைத்தெறிந்தவர் என்ற வரலாற்று பெருமை கொண்டவர். ஊதியமின்றி, அடிமைகளைப் போல நடத்தப்பட்ட அவல நிலைக்கு எதிராக இளம் வழக்கறிஞர்கள் நலச் சங்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தினார். நீதிமன்ற அறையில் அதிர்ந்து பேசக்கூடாது. வளாகத்துக்குள் அரசியல் அமைப்புகளின் பிரசுரம் வழங்கப்படக்கூடாது. சுவரொட்டி ஒட்டக்கூடாது போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான முறைகளுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர். வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்த நாளில் வழக்கு விசாரணை நடத்திய நீதிபதியோடு சேர்த்து நீதிமன்றத்திற்குப் பூட்டு போட்டவர். இப்படி இவரின் உரிமை மீட்பு போராட்டங்களின் பட்டியல் மிக நீண்டது.
மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளின், திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், சீர்காழி இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், விழுப்புரம் மாவட்டத்தின் சாதி வெறி பண்ணையாரால் பட்டியல் சாதி மக்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரைவிட்டே விரட்டியடிக்கப்பட்ட கொடுமைகள், தஞ்சை சாராயச் சாம்ராஜ்ய ரவுடிகளால் வீடுகள் சூறைபடப்பட்டு 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டது போன்ற பல்வேறு போராட்டக் களங்களில், சட்ட பாதுகாப்பு அரணாக விளங்கியவர் போஜக்குமார்.
ஜெயலலிதா அரசு கொண்டுவந்த கிடா வெட்டு தடைச் சட்டத்துக்கு எதிராக திருச்சியில் கிடாவெட்டும் போராட்டத்தை நடத்தி தோழர்கள் கைதான நிலையில், அந்த வழக்கில், “வெட்டப்பட்ட ஆட்டிற்கான இறப்பு சான்றிதழ் எங்கே? இறந்த ஆட்டின் அப்பா, அம்மா எங்கே?” என்று கேட்டு நீதிமன்றத்தை அதிரச்செய்தவர். 1997 இல் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் மேடை அமைத்து நடைபெற்ற தோழர் சத்யா திருமணத்தில், மின்சாரம் தடை ஏற்பட்டபோது, ஃபெட்ரமாஸ் விளக்கைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றவர் வழக்கறிஞர் போஜக்குமார்.
தோழர் போஜகுமார் 1995 ஜனவரி 15 தமிழர் திருநாளில் துவங்கிவைத்ததுதான் எனது தாய் ஸ்கிரீன் நிறுவனம். இன்று முற்போக்கு நூல்களின் கீழைக்காற்று கிளையாகவும் அது செயல்பட உதவியவர்.
உடல்நலக்குறைவால், கடந்த 2023 டிசம்பர் 8 அன்று 67 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். பார்ப்பன – சடங்கு மரபுவழக்கங்களை மறுத்து அருமை தோழருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர். தோழர் போஜகுமார் நம் நெஞ்சங்களில் எப்போதும் நிறைந்து வாழ்ந்து கொண்டிருப்பார்” என்று உரையை முடித்தார்.
நிறைவாக, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சதீஷ்குமரன் நன்றி கூறினார். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் இதழ்களைப் பரிசாக வழங்கினார். நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தன் பணியை முடித்துக்கொள்ளாமல், மக்கள் நலன் சார்ந்து இயங்கிய அவரது வாழ்க்கை அனுபவங்கள் பங்கேற்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.