“நீரில் பிரதிபலித்த நினைவுகள் , மேட்டூர் அனுபவம்” – அனுபவங்கள் ஆயிரம் (7)
நாங்கள் மேட்டூர் அணையின் 16ஆம் கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும், அடுத்த நாள் அந்த அழகிய காட்சியை பார்க்கச் சென்றோம். அந்த ஒலி, அந்த காட்சி, அந்த ஆற்றின் அதிர்வு எல்லாம் மனதை பறித்தது. நீர் திறந்து வரும் வேகமும் சத்தமும் அந்த காவிரி உயிர் பெற்றது போல தோன்றியது. வெள்ளை நீர் பரவலாகப் பாய்ந்தபோது, அதன் முழக்கம் மலைக்கே பதிலளித்தது.
அந்த காட்சியைப் பார்க்க நாங்கள் அனைவரும் நின்ற போது உண்மையில் “அதைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை” என்பதே உண்மை. நீர் பாயும் ஒவ்வொரு வழியிலும் விவசாயிகளின் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அணையின் மேல் நின்று அந்த பொழுதை பார்த்தபோது, நான் ஒரு ஆற்றை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் இதயத் துடிப்பை பார்த்தேன். அந்த பெருமைமிகு காட்சியை ரசித்துவிட்டு நாங்கள் கீழே இறங்கினோம். அங்கே வந்திருக்கும் மக்களுக்கு உணவு ஒரு பிரச்சனையே இல்லை. சுற்றிலும் பல சிறிய உணவுக்கடைகள், குடும்பம் போல் பேசும் வியாபாரிகள் யாரிடம் சென்றாலும் ஒரு புன்னகை.

அங்கு ஒரே சொல் சொன்னால் போதும் “எத்தனை பேருக்கு சாப்பாடு வேணும், என்ன சமைக்கணும்?” என்று கேட்டுவிடுவார்கள். நாங்கள் எதை வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டு சுற்றிப் பார்ப்பதற்குச் சென்றோம். அங்கே மீன் குழம்பு, மீன் வறுவல், நாட்டுக்கோழி குழம்பு ஸ்பெஷல் பட்டியலில். சில நேரத்தில் அவர்களே போன் செய்து, “சார், சாப்பாடு ரெடியாச்சு!” என்று அழைப்பார்கள். அவர்கள் சமைத்து கொடுத்ததற்கான கட்டணத்தை வழங்கிவிட்டு, அந்த சூடான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பார்க்கில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து, இயற்கை காற்றில் சாப்பிட்ட அனுபவம் மறக்க முடியாதது. உணவின் ருசியிலும் அந்த இடத்தின் இயற்கையிலும் ஒன்றே ஒன்று கலந்து இருந்தது . அதுதான் மேட்டூரின் உண்மையான சுவை.
தமிழ்நாட்டின் பெருமைமிக்க மேட்டூர் அணையின் வரலாறு பற்றிய எனக்கு தெரிந்த தகவல் உங்களுக்காக…..
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் ஊரில் காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாக திகழ்கிறது. 1925ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி, 1934ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இவ்வணை, மாநிலத்தின் பாசனம், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

அணையின் நீளம் சுமார் 1,700 மீட்டர், நீர் சேமிப்பு உயரம் 120 அடி, கொள்ளளவு 93.4 டிஎம்சி. அணையின் மூலம் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் எனப்படுகிறது. இது காவிரி ஆற்றின் நீரைச் சேமித்து, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக அனுப்புகிறது. அணை கட்டுமானத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொறியாளர் ஸ்டேன்லி தலைமையேற்று பணியாற்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஒன்பது ஆண்டுகள் நீண்ட உழைப்பின் பலனாக உருவான இத்திட்டம், தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அணையைக் சுற்றி அமைந்துள்ள மேட்டூர் அணை பூங்கா, சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பிடமாகும். இங்கு மீன் காட்சியகம், பாம்புப் பண்ணை, சிறுவர் விளையாட்டு மைதானம் மற்றும் ஓய்வெடுக்கும் இடங்கள் போன்றவை உள்ளன. குடும்பத்துடன் வருபவர்களுக்கு அமைதியான சூழலை வழங்கும் இந்தப் பூங்கா, மேட்டூர் அணையின் இயற்கை அழகை மேலும் உயர்த்துகிறது. தமிழகத்தின் விவசாயமும், மக்களின் நாளாந்த வாழ்வும் சார்ந்திருக்கும் இந்த மேட்டூர் அணை, காவிரி நதியின் உயிர்த் துடிப்பாக தொடர்ந்து நிற்கிறது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.