நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அனுமதி மீறி நள்ளிரவில் ஒலி-ஒளி அமைப்புடன் பரப்புரை நடத்தியதாக, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இருவருக்கு எதிராக அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரும் ஜனவரி 7-ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.
இதற்காக சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜனிடம் அவருடைய அலுவலகத்தில் பரப்புரைக்கான அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் அனுமதியில் குறிப்பிடப்பட்ட நேரத்தை மீறி, சாத்தூர் அருகே காளப்பெருமாள்பட்டி மற்றும் அ. புதுப்பெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் ஒலி-ஒளி அமைப்புடன் கிருஷ்ணசாமி பரப்புரை நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. காசிராஜன் புகார் அளித்ததின் பேரில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் (கிழக்கு) குணம் மற்றும் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்குமுன்னர், இதேபோன்று ஆமத்தூர் பகுதியில் நள்ளிரவில் பரப்புரை மேற்கொண்டதாக கிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருவருக்கு எதிராக அங்குள்ள போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.