சாத்தூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் !
சாத்தூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் !
சாத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பல்வேறு பயனாளிகளுக்கான கையளிப்புகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 10 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.8.24 இலட்சம் மதிப்பில் விற்பனை வண்டிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் 11 புதிய மின்கல தூய்மை வாகனங்களையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 18, 19 ஆம் தேதியில் பெய்த கனமழையால் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான விளை நிலங்களையும் அதன் உரிமையாளர்களான விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டதோடு, சேதம் மற்றும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் , “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட எந்த விவசாயியும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அனைத்து தரப்பு விவசாய பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 40 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து சேதம் குறித்து உரிய அளவீடு செய்து போதுமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “இது தவிர்த்து விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது சேதாரத்திற்கான ஆதாரத்துடன் சமர்ப்பிக்கும் போது அவர்களுக்கும் சேர்த்து உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் நகராட்சி ஆணையர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாரீஸ்வரன்.