நெருக்கடியில் மோடி அரசு – 7 திட்டங்களில் மெகா – முறைகேடுகள் !

0

மோடி அரசு – 7 திட்டங்களில் முறைகேடுகள் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மோடிக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்துமா?

இந்தியாவின் 77ஆவது விடுதலை நாள் விழாவின் போது தலைநகர் தில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய தலைமை அமைச்சர் மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஊழல் ஒரு தடையாக உள்ளது. இந்த ஊழலை ஒழிப்பதில் அரசு முன்னுரிமை வழங்குகின்றது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி ஊழலுக்கு ஆதரவான கூட்டணி. ஊழல்வாதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணி” என்று கடுமையாகச் சாடினார். தற்போது இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 7 திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கை மோடி அரசுக்கு அரசியல் ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிஏஜி என்றால் என்ன
சிஏஜி 

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொதுக் கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது வி.கிரீஷ் சந்திர முர்மு பதவியில் உள்ளார். 2008-13ஆம் ஆண்டுகளில் வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது. அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்- பொதுப் பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.

7 திட்டங்களில் முறைகேடுகள்.

பாரத்மாலா பரியோஜனா-திட்டம்
பாரத்மாலா பரியோஜனா-திட்டம்

1. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு நடந்திருப்பதாக மத்தியக் கணக்குத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளை இணைக்கும் பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

துவாரகா விரைவு பாதை
துவாரகா விரைவு பாதை

2.துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்குத் திட்டச்செலவான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன் என்பது கணக்கு தணிக்கைக்குழுவின் கேள்வியாக உள்ளது.

நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையைச் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டத் திட்டமிடப்பட்டது. ஹரியாணாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி

3.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறிப் பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது அவை ரூ.154 கோடி அளவிற்கு அதிகத் தொகையை வசூல் செய்திருப்பது தெரியவந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்

4. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளதைச் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகச் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்குப் புதிதாகச் சிகிச்சை பார்த்ததாகக் காப்பீடு பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அயோத்யா மேம்பாட்டு திட்டம்
அயோத்யா மேம்பாட்டு திட்டம்

5. அயோத்யா மேம்பாட்டு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பதாரர்களுக்குப் பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையைச் செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாதத் தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒப்பந்ததாரர்கள் 19.73 கோடி ரூபாய் அளவிற்கு அதிக லாபம் அடைந்திருப்பதாகவும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் சுமார் 8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்

6. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், மத்திய அரசின் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்தத் தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதியத் திட்டநிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது.

 

எச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில்
எச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில்

7. எச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்தியக் கணக்கு தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், தவறான திட்ட வடிவமைப்பு கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் 159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-ஆதவன்

Leave A Reply

Your email address will not be published.