ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்… திருச்சியில் வெளியாகும் அறிவிப்பு ! .
பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில்… திருச்சியில் என்ன அறிவிப்பு ! .. திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையைத்தை அமைத்துள்ளது.
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று 02.01.2024 நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்க உள்ளார்.
இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி, திருச்சியை சுற்றி உள்ள 5 மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர்கள் மிக நீண்ட காலமாக பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெறாமல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் முதலில் கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 33 பேருக்கு பட்டம் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நண்பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கு 15 நிமிடம் புதிய முனையத்தை சுற்றி பார்த்துவிட்டு, முன்புறம் 10,000 பேர் அமர்ந்து உள்ள பிரமாண்ட மேடையில் புதிய முனைமத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழா முடிந்ததும் பிற்பகல் 1.05 மணிக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி விமானநிலைய பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவும் கட்சியினர் 20,000 பேர் திரண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து 10 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு தயார் செய்துள்ளனர்.
அதே போல பாரதிதாசன் பல்கலைகழக பகுதியில்… திருச்சி மாவட்ட திமுகவினர்… சார்பில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள். செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.
திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக் கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.