பல்கலைக்கழக மானியக் குழு –வா ? பாஜகவின் கொள்கை பரப்பும் குழுவா ?

இத்தாலியில் பாசிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு தலைமை வகித்த முசோலினியும், ஜெர்மனியில் நாஜி கட்சி ஆட்சிக்கு தலைமை வகித்த ஹிட்லரும் பல்கலைக்கழகங்களை, ஆய்வாளர்களை......

0

பல்கலைக்கழக மானியக் குழு –வா? பாஜகவின் கொள்கை பரப்பும் குழுவா?

Modi_self
Modi_self

பல்கலைக்கழக வளாகங்களில் மோடியின் உருவப்படம் தாங்கிய செல்ஃபி பாயிண்டுகளை ஏற்படுத்துமாறு அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவும், தனி நபர் துதிபாடவும் பல்கலைக்கழக வளாகங்கள் பயன்படக் கூடாது என கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார், கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.

https://businesstrichy.com/the-royal-mahal/

இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “டிசம்பர் 1, 2023 தேதியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை பல்கலைக்கழக வளாகங்களில் சுய புகைப்படம் (Selfie Point) எடுத்துக் கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தக் கோரியுள்ளது. இந்தியாவின் சமீபத்திய சாதனைகளை (achievements in the recent past) விளக்கி, ஏற்பு அளிக்கப்பட்ட வடிவங்களில் (as per approved designs) மட்டுமே இந்த “செல்ஃபி பாயிண்ட்” அமைக்க வேண்டும் என்ற “கட்டளை” உள்ளடக்கியதாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அமைந்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தும் ஏற்பாட்டை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரம் எந்த சட்டத்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வழங்கப்படவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய பல்கலைக்கழக மானியக் குழு, சட்டத்திற்கு புறம்பாக, தனது எல்லைகளைக் கடந்து, ஒன்றிய அரசின் ஆட்சி பொறுப்பில் உள்ள கட்சியின் பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக செயல்படுவது மிகவும் ஆபத்தானது. சமூக மாற்றத்திற்கான, நாட்டின் பன்முக வளர்ச்சிக்கான, மனித குல மேம்பாட்டிற்கான, பூமியையும், பிரபஞ்சத்தையும் பாதுகாப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்விச் செயல்பாட்டிற்கான வளாகமே பல்கலைக்கழகம். அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, பகுத்தும், தொகுத்தும் ஆய்வேடுளை வெளியிடும் தன்னாட்சி அமைப்புதான் பல்கலைக்கழகம். அத்தகையப் பல்கலைக்கழங்களை ஒன்றிய அரசின் சாதனைகளை பரப்புகின்ற பணியினைச் செய்யும் அமைப்புகளாக மாற்ற முற்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

UGC
UGC

அரசின் சாதனைகளை விளக்குவதாக கூறிக் கொண்டு, பிரதமராக இருப்பவருக்கு விளம்பரம் தேடித் தரும் “செல்ஃபி பாயிண்ட்”யை வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பல்கலைக்கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும்.

பல்கலைக்கழகங்களின் கல்வியியல் சுதந்திரம், தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் சூழ்ச்சிகரமான திட்டம்தான் “செல்ஃபி பாயிண்ட்” வைக்கக் கோரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை. 2014 முதல் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக மானியங்களை நிறுத்தியும், குறைத்தும் வந்துள்ளதைக் குறித்தும், ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத்தொகை குறித்த தகவல்கள் குறித்தும் புள்ளி விவரங்களை பல்கலைக்கழகந்தோறும் மாணவர்கள் வைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாக தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரி வருகின்றனர். அரசின் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று மாணவர்களும், மாணவர் அமைப்பினரும் கோரி வருகின்றனர். அரசின் கொள்கைகளை விமர்சிக்க வாய்ப்புகளை மறுப்பது மட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தையே ஒன்றிய அரசின் சாதனைகளை விளம்பரம் செய்யும் மையங்களாக மாற்றுவது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

இத்தாலியில் பாசிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு தலைமை வகித்த முசோலினியும், ஜெர்மனியில் நாஜி கட்சி ஆட்சிக்கு தலைமை வகித்த ஹிட்லரும் பல்கலைக்கழகங்களை, ஆய்வாளர்களை தங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அத்தகைய கொடுங்கோன்மைக்கு அடிபணிய மறுத்து ஜெர்மனியில் இருந்து வெளியேறினார்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள். இந்தியாவில் அத்தகைய போக்கு மேலோங்குவதை அனுமதிக்க இயலாது.

ஒன்றிய அரசின் சாதனைகள் என்ற பெயரில் கட்சி அரசியல் செய்யவும், “மோடி” புகழ் பரப்பவும் பல்கலைக்கழக வளாகங்கள் பயன்படுத்தப்பட அனுமதிக்க இயலாது. ஒரு தனி நபரை, சர்வ வல்லமை படைத்த இரட்சகராக வழிபடும் மக்கள் திரளை (cult) உருவாக்கும் முயற்சியே “செல்ஃபி பாயிண்ட்”. “நாட்டிற்கு வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய பெருமக்களுக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை. ஆனால் நன்றியுணர்வுக்கு வரம்புகள் உள்ளன.

“(There is nothing wrong in being grateful to great men who have rendered life-long services to the country. But there are limits to gratefulness.) ….”இந்தியாவில், பக்தி அல்லது நாயக (hero worship) வழிபாட்டின் பாதை என்று அழைக்கப்படுவது, அதன் அரசியலில் உலகின் வேறு எந்த நாட்டின் அரசியலிலும் வகிக்கும் பங்கிற்கு நிகரற்ற பங்கை வகிக்கிறது. மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் இரட்சிப்புக்கான பாதையாக இருக்கலாம்.

ஆனால் அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவிற்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் ஒரு உறுதியான பாதையாகும்” (..in India, Bhakti or what may be called the path of devotion or hero-worship, plays a part in its politics unequalled in magnitude by the part it plays in the politics of any other country in the world. Bhakti in religion may be a road to the salvation of the soul. But in politics, Bhakti or hero-worship is a sure road to degradation and to eventual dictatorship) என்று அரசியல் சாசன நிர்ணய சபை உரையில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

டிசம்பர் 1, 2023 தேதியிட்ட “செல்ஃபி பாயிண்ட்” குறித்த பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்கள் நிராகரிக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பல்கலைக்கழகங்களை கோருகிறது.

சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து, மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாட்டைக் கொண்ட சமயச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இந்தியா இருக்கும் என்பதை அனைவருக்கும் உணர்ந்திடும் வகையில் பல்கலைக்கழக செயல்பாடுகள் அமைவது மட்டுமே பல்கலைக்கழக அமைப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேற உதவும். “ என அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார், கல்வியாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.

-அங்குசம் செய்திப் பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.