நேரம் காலம் பார்த்தா நாய் கடிக்கிறது? நாய்க்கடி ஊசிக்கு நேரம் காலம் பார்க்கலாமா ?
நேரம் காலம் பார்த்தா நாய் கடிக்கிறது? நாய்க்கடி ஊசிக்கு நேரம் காலம் பார்க்கலாமா?
நாய் கடிக்கு மூன்றாவது முறையாக ஊசி போட்டுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளி ஒருவருக்கு, நேரத்திற்குள் வரவில்லை என்பதற்காக ஊசி போட மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தை வடமாநிலத் தொழிலாளி ஆசாத் அலி (22). தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஆசாத் அலி, வழக்கம்போல பணிக்கும் செல்லும் வழியில் நாய் கடித்துள்ளது. உடனடியாக, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றவர், தொடர்ச்சியாக இரண்டு ஊசிகளை செலுத்திக்கொண்டார். மூன்றாவது தவணை ஊசி, ஜனவரி – 01 அன்று செலுத்திக்கொள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
“12 மணிக்கு மேல வந்தா ஊசி எல்லாம் போட முடியாது. நாளைக்கு வந்து போட்டுக்கொள்” என்பதாக, ஆசாத் அலியை திருப்பி அனுப்பியிருக்கிறார், பணியில் இருந்த பெண் மருத்துவர் புவனேஸ்வரி.
அவருடன் வந்த நண்பர், தாமதமாக வந்ததை காரணம் காட்டி ஊசி போட மறுக்கக்கூடாது என மருத்துவரிடம் வாதிட்டிருக்கிறார். அரசு மருத்துவரோ, காலதாமதமாக வந்தது குறித்தேதான் தொடர்ந்து பேசியிருக்கிறார்.
“12 மணிக்குள் வந்தால்தான் நாய்க்கடிக்கு ஊசி போட முடியும் என்று மருந்து சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறீர்களா? தகவல் பலகை வைத்திருக்கிறீர்களா?” என்றெல்லாம், மடக்கி கேள்வி கேட்கவே, போனால் போகிறது இந்த முறை போடுகிறேன். அடுத்தமுறை நேரத்துக்கு வரவேண்டும் என்பதாக பேசியிருக்கிறார்.
”முதல்முறை நாய்க்கடிக்கு உடனே ஊசி போடுகிறார்கள். ஆனால், அடுத்த தவணைகளில் ஊசி போடுவதற்கு மட்டும் நேரத்திற்குள் வர வேண்டும் என்கிறார்கள். இதற்காக ஒவ்வொருமுறையும் லீவு எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போக முடியுமா? காசு பணம் இருக்கிறவர்கள் பேசாமல் தனியார் மருத்துவமனைக்கு போய்விடுவார்கள்.
அதுக்கு வழியில்லாதவன் அரசாங்க ஆஸ்பத்திரிக்குத்தான் ஓடியாக வேண்டும். அப்படி இருக்கையில், குறிப்பிட்ட நாளில் எப்போது மருத்துவமனைக்கு வந்தாலும் ஊசி போட வேண்டும். இல்லையெனில், சாதாரண ஜனங்கள் ரொம்பவே கஷ்டத்துக்கு ஆளாக நேரிடும்.” என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
நாய்கள் எந்த நேரம் யாரை எப்போது எங்கே கடித்து தொலைக்கிறது என்பது அதனிடம் கடி வாங்குவதற்கு முன்வரை யாருக்கும் தெரியாது. ஆனால், நாய்க்கடியை வாங்கிய நபர் மட்டும் நேரம் காலம் பார்த்துதான் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது எந்த விதத்தில் நியாயம் ஆபிசர்ஸ்?
மாரீஸ்வரன், சாத்தூர்.
ஆமாண்டா! உன்னுடைய உடம்பை நீ தான்
பார்த்துக்கொள்ள வேண்டும்! வேலை முக்கியமா? உடம்பு முக்கியமா? முதலில் மட்டுமே அவசர சிகிச்சை!