இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’
அந்த நாவல் எழுதப்பட்டு 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. தாசிக் குலம் என அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கை அவலத்தையும், அதைக் கடவுளின் பெயரில் கணக்கெழுதி, கோவில் திருத்தொண்டுகளில் அதுவும் ஒன்று என ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றியதையும் அம்பலப்படுத்தியதுடன், தேவதாசிகள் வாழ்க்கை நிலையையும், அவர்களைப் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கும் ஆண்களின் குடும்பங்களில் ஏற்படும் நிலைமைகளையும் விளக்கி எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர், தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர். எழுதியவர், ஒரு பெண்மணி. பெயர், மூவலூர் இராமாமிர்தம்.
தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல். ஆடல், பாடல், தெலுங்கு கீர்த்தனைகள் எனக் கற்பிக்கப்பட்ட ஒரு பெண், தாய்மொழியானத் தமிழை முனைந்து கற்று உருவாக்கிய படைப்பு. சொந்த சமூகத்திற்கு எதிராகவும், புரட்சிகரமாகவும் பொதுவெளியில் செயல்படுகிறார் என்பதால் ஒரு மேடையில் அவருடைய நீண்ட தலைமுடியை வெட்டி எறிந்து அவமானப்படுத்தினர். அவமானத்தை வெகுமானமாகக் கருதி, கிராப் தலையுடன் கடைசி வரை வாழ்ந்து, பொதுவாழ்வுத் தொண்டறம் புரிந்தவர் அம்மையார்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் பங்காற்றியவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து, பெரியாருடன் காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்றார்.
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்திற்குத் துணையாக இருந்தவர் மூவலூர் அம்மையார். ‘இது கடவுளுக்கு செய்யும் தொண்டு’ என்று காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் அந்தத் தீர்மானத்தை எதிர்த்ததுடன், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களையும் அம்மையாருக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். தேவதாசி ஒழிப்புத் தீர்மானம் உடனடியாக முழு வெற்றி கிடைக்காவிட்டாலும், அவருடைய தொடர் போராட்டத்தால் காலம் கனிந்து, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழ்நாட்டில் அது சட்டமானது.
1938ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக (பிரீமியர்) இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகத் திணிக்க முயன்றபோது, அதனை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து சென்னை வரை தமிழர் பெரும்படை ஒன்றே நடந்தே வந்தது. பட்டுக்கோட்டை அழகிரிசாமி முன்னெடுத்த அந்த நடைப்பயணத்தில் 42 நாட்கள் தொடர்ச்சியாக 577 மைல்கள் நடந்து வந்து, 87 பொதுக்கூட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து முழங்கியவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். பெரியார் தலைமையில் சென்னையில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறை சென்றார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினார். அவருடையத் தொண்டினைப் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்தார் அண்ணா.
1962ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மறைந்த நிலையில், 1989ல் மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், அம்மையாரின் பெயரில் ஏழைப் பெண்களுக்கானத் திருமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டம் தற்போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில், அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூவலூர் அமைந்துள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் என்பதால் மயிலாடுதுறை நகரத்தில் உள்ள பூங்காவில் அம்மையாருக்கு சிலை அமைத்து காணொளி வாயிலாகத் திறந்து வைத்துப் பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் வாழ்க்கையை எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி மிகச் சிறப்பான நூலாக எழுதியிருக்கிறார். அதனைத் தமிழ்நாடு அரசின் பாடநூல் மற்றும் கல்வி நிறுவனம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.
(மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்- ஜூன் 27)