தமிழக மக்கள் முன்னணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு !
தமிழக மக்கள் முன்னணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு . தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன் திருச்சி செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாதிவெறி, மதவெறி, சுரண்டல் வெறி, மாநில அடையாளங்களையெல்லாம் அழிக்கும் பார்ப்பனிய வெறி கொண்ட பாசிசப் பார்ப்பனியப் பாஜகவையும், அதனோடான கூட்டணிக் கட்சிகளையும், அதற்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் செயற்பாடுகளையும் வீழ்த்துவோம்!
பாசிசப் பார்ப்பனியப் பாஜகவை எதிர்க்கிற தேர்தல் அரசியல் கட்சிகளை அரசியல் நிபந்தனைகளுடன் மக்கள் ஆதரிக்கலாம் எனக் கேட்டுகக் கொள்கிறோம். அரசியல் நிபந்தனைகளாகக் கீழ்க்காணும் ஐந்து நிபந்தனைகளைத் தமிழக மக்கள் முன்னணி அறிவிக்கிறது.
அ. கல்வி, கனிம வளம், கடல் வளம், வரிகள் பெறுவது, தொழில், உழவு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே உரியவை என்று அறிவிப்பதுடன், தமிழ் வழியிலேயே கல்வி, அரசு அலுவல்கள், வழிபாடு, வழக்கு மன்ற நடவடிக்கைகளை முழுமையாக அமைப்பது போராடுவது. இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகளை எந்த வடிவத்திலும் ஏற்க மறுப்பது.
ஆ. ஆளுநர் உள்ளிட்ட எந்த இந்திய அரசதிகார அமைப்பும் தமிழ்நாட்டில் (பிற மாநிலங்களிலும்) இருக்கக்கூடாது.. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் தமிழ்நாட்டு அரசே உருவாக்கிக் கொள்ளவேண்டும். அனைத்து அதிகாரிகளும் மக்களின் கேள்விகளுக்கு விடை சொல்பவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பது.
இ. அம்பானி அதானி உள்ளிட்ட பன்னாட்டு மூலதனங்கள் எவையும் மாநிலங்களுக்குள் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது. அவற்றின் முதலீடுகளை அந்தந்த மாநில அரசுகளின் முதலீடுகளாக மாற்றுவதுடன் தமிழ்நாட்டின் தேசியத் தொழில்துறையை வலிமைப்படுத்தி, தமிழ்நாட்டின் தேசியத் தொழில் நிலைக்கு ஏற்ற வரிக்கொள்கையைத் தமிழ்நாடு அரசே தீர்மானிக்கிற வகையை உருவாக்குவது.
ஈ. நடுத்தர, சிறு உழவு நிலைகள் புதிய வகையில் மேம்படுத்தப்படுவதுடன், உழவு விளை பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொள்ளை அடிக்கும் முற்றாதிக்கக் ‘கார்ப்பரேட்’ முதலாளிகளின் பிடியிலிருந்து வேளாண்மையை மீட்பதுடன், புதிய கூட்டுறவுப் பண்ணைகளாக்கித் துணைத் தொழில்களை உருவாக்கி வேளாண்மையைப் பன்மடங்கு உயர்த்துவது.
உ. சாதியக் குடியிருப்புகளை அகற்றி, சாதியக் குலங்களாக வாழும் அடிமை நிலைகளை மாற்றிப் பரந்த அறிவியல் வழிபட்ட பொதுமை வாழ்க்கை முறைக்கான சூழ்நிலையை உருவாக்குவது. சனநாயகமற்ற இன்றைய தேர்தல் முறையில் தமிழக மக்கள் முன்னணிக்கு நம்பிக்கை இல்லாதபோதும் இன்றைய காலச் சூழலில் மக்கள் விரோதப், இன விரோத பாசிசப் பார்ப்பனியப் பாஜகவை வீழ்த்த வேண்டிய தேவை இருப்பதினால் மேற்கண்ட – ஐந்து நிபந்தனைகளை ஏற்றுகக் கொண்டு பரப்பல் செய்கிற நடைமுறைப்படுத்தப் போராடுகிறவர்களை மக்கள் ஆதரிக்கலாம் என இம்முடிவை இக்காலச் சூழலில் தமிழக மக்கள் முன்னணி எடுத்திருக்கிறது.
இச் செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் த.செயராமன், தங்கக் குமாரவேலு, பாவெல், நிலவழகன், நிலவன், தஞ்சாவூர் குணசேகரன், மயிலாடுதுறை சுப்பு மகேஷ், வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-ஆதவன்