பொன்முடி மீது வீசப்படட சேறு – பின்னணியில் யாா்?
விழுப்புரம் அருகேயுள்ள இருவைப்பட்டு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது ஒரு பெண் உட்பட இருவர் சேற்றை வாரி வீசியது. பெரும் சர்ச்சையானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி “அரசியல் செய்வதற்காக எனக்குப் பின்புறம் சேற்றை வீசி அடித்துள்ளனர். இது குறித்து சமூகவலை தளத்தில் யார் பதிவிட்டாரோ அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். எனினும் நாங்கள் இதனைப் பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” என்று சாந்தமாகச் சொன்னார். பொன்முடி அப்படி சுட்டிக்காட்டியது பாஜகவினரைத்தான்.
இந்நிலையில், 4ம் தேதியும் திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியிலும், சின்ன செவலை கிராமத்தில் மழவராயநல்லூர் கிராம மக்களும், அரகண்டநல்லூரிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று மட்டும் நான்கு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 3 இடங்கள் அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்குட்பட்டவை.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகள் திமுக வசம் உள்ள நிலையில் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் மட்டும் ஏன் இத்தனை போராட்டங்கள்? இது தொடர்பாக கடந்த தேர்தலில் பொன்முடியை எதிர்த்துப் போட்டியிட்ட விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவரான வி.ஏ.டி.கலிவரதனிடம் கேட்ட போது, “முன்பு விழுப்புரம் தொகுதியில் பொன்முடி வென்றபோது ஆட்சியர் பெருந் திட்ட வளாகம், மருத்துவக்கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார். ஆனால், திருக்கோவிலூர் தொகுதியில் 2 முறை வென்றும் இங்கு சொல்லிக்கொள்ளும்படி அவர் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர் மீது தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும், மாவட்ட திமுக பொறுப்பாளராக தனது மகன் கவுதமசிகாமணியை அவர் கொண்டு வந்ததை திமுகவினரே ரசிக்கவில்லை.
எப்போதுமே அமைச்சர் பொன்முடி சர்ச்சைகளில் சிக்குவதற்கு அவரது முன் கோபம் தான் காரணம். இதுவே அவருக்கு பகையாக மாறி வருகிறது. சேற்றை வீசிய பெண்மணி விஜயராணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந் தார். தற்போது கட்சியில் அவர் ஆக்டிவாக இல்லை. தற்போது சென்னையில் உள்ள அவர் ஏன் இங்கு வந்தார் எனத் தெரிய வில்லை. மற்றொருவரான ராமர் என்கிற ராமகிருஷ்ணன் பாஜககாரரா என்றே தெரியவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அமைச்சர் பொன்முடி வந்தபோது அந்த நபர் அவரை நெருங்கி குறைகளைச் சொல்ல முயன்றுள்ளார். அப்போது பொன்முடியின் நேர்முக உதவியாளர் அவரை தள்ளிவிட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் அந்த நபர் அள்ளி வீசிய சேறு, அமைச்சர் மீது தெறித்ததாகக் கூறுகிறார்கள். ஆக, இது திட்டமிட்டு நடக்க வில்லை. இருந்தபோதும் தன்னை எதிர்த்து போட்டியிட்டது பாஜக என்பதால் பொன்முடி இப்படி எங்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறார்” என்றார்.
இதனிடையே, தன் மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தை அரசியலாக்க விரும்ப வில்லை என்று பொன்முடி கூறினாலும், ஆட்சியர் மற்றும் திருவாரூர் எஸ்பி-யான ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீதும் சேறு தெறித்திருப்பதால் விஏஓ மூலம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்யும் முடிவில் போலீஸ் இருப்பதாகத் தெரிகிறது!