முன்னேற்றப் பாதையில் முரசொலி எம்.பி.! முட்டுக்கட்டைப் போடுகிறதா, கழகம் ?
தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தலில் இளம் உறுப்பினராக தேர்வானவர் முரசொலி எம்.பி. தான் தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை, பல மத்திய அமைச்சர்களை நேரில் சென்று வாதாடி பெற்றுத் தருவதில் முனைப்பு காட்டி வருகிறார்.
மிக முக்கியமாக, தஞ்சாவூர் – விழுப்புரம் இருவழிப்பாதை; அரியலூர் – தஞ்சாவூர் புதிய ரயில்பாதை வழித்தடங்கள் நீட்டிப்பு உள்ளிட்டு ரயில்வே துறை சார்ந்த பல்வேறு தொலை நோக்கு திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்காகவே, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும், ரயில்வே போர்டு சேர்மனையும் தொடர்ந்து நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, தன்னை தேடி வந்து கோரிக்கை மனு அளிக்கும் ஒவ்வொரு கோரிக்கைகள் மீதும் கவனம் செலுத்தி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தானே தொலைபேசியில் அழைத்து பேசி அதற்கான தீர்வை காண மெனக்கெடுகிறார்.
இதுவே, அதிகாரிகளை எம்.பி. விரட்டுகிறார் என்றும் கேள்வி கேட்கிறார் என்றும் அதிகாரிகளிடத்தில் கறார் காட்டுகிறார் என்றும் புகாராகி, சி.ஐ.டி. பிரிவு போலீசார் எம்.பி.யிடமே இது தொடர்பாக விசாரிக்கும் அளவுக்கு போயிருக்கிறது என்கிறார்கள். இவரது வேகம், லோக்கல் கட்சி நிர்வாகிகளிடத்திலும் சில சங்கடங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமீபத்தில் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கழக தொண்டர்களிடத்தில் தொய்வு இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார். அப்போது, சீனியர் எம்.பி. ஒருவர் இவரிடம் மற்றவர்கள் யாரும் பேசாத நிலையில், நீ ஏன் துடுக்காக பேசுகிறாய் என்று கேட்டிருக்கிறார். காய்க்கின்ற மரம்தான் கல்லடி படும் போல !
— அய்யனாபுரம் க.நடராசன்.