சமையல் குறிப்பு – மட்டன் சுக்கா வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை பிரமாதம்!!
வணக்கம் சமையலறை தோழிகளே! இந்த சண்டே மட்டன் வாங்க போறீங்களா? இந்த மாதிரி மதுரை ஸ்டைல் சுக்கா வறுவல் செஞ்சி பாருங்க. 30 நிமிடத்தில் ஈஸியா செய்யக்கூடிய இந்த சுக்கா சாதத்தோடு மட்டுமல்ல சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் 1/2 கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மல்லித்தூள் 3 ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு 5 பல், கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
அரைக்க
துருவிய தேங்காய் 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு 5, சோம்பு 1 ஸ்பூன்.
தாளிக்க
பட்டை ஒரு துண்டு, கிராம்பு மூன்று, பிரியாணி இலை ஒன்று, கருவேப்பிலை ஒரு கொத்து, சோம்பு ஒரு ஸ்பூன்.
செய்முறை
மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஒரு ஸ்பூன் வெங்காயம் சிறிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்னர் மல்லித்தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் குக்கரை மூடி மட்டன் ஐந்து விசில் வேக விடவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும். அதே சமயம் குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும். மட்டனிலிருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வதக்கவும். கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் மட்டன் சுக்கா வறுவல் ரெடி.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.