அங்குசம் பார்வையில் ‘நாங்கள்’
தயாரிப்பு : ‘கலா பவாஸ்ரீ கிரியேஷன்ஸ்’ ஜி.வி.எஸ்.ராஜு. ஒளிப்பதிவு, எடிட்டிங் & டைரக்ஷன் : அவினாஷ் பிரகாஷ். நடிகர்-நடிகைகள் : அப்துல் ரஃபே, பிரார்த்தனா ஸ்ரீகாந்த், சிறுவர்கள் மிதுன், ராஜ்குமார், நித்தின், சாப் ஜான் எடத்தட்டில், ராக்ஸி [ நாய் ] , இசை: வேத் சங்கர் சுகவனம், புரொடக்ஷன் டிசைனர் : விராஜ்பாலா, சவுண்ட் டிசைன்: சச்சின் சுதாகரன், சவுண்ட் மிக்ஸிங் : அரவிந்த் மேனன், புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ் ; கிருஷ்ண சேகர், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
அழகிய மலைவாசஸ்தலம். மனதை மயிலிறகால் வருடும் வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசையுடன், ஒளிப்பதிவாளர் & இயக்குனர் அவினாஷ் பிரகாஷின் அழகிய கேமரா கோணங்களுடன் அடுத்தடுத்த வயதுள்ள மூன்று சிறுவர்கள் திரையில் தோன்றுகிறார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை மார்க்கெட்டில் வாங்குகிறார்கள். கரண்ட் இல்லாத பெரிய வீடு என்பதால், ரோட்டோரம் இருக்கும் பைப்பில் பெரிய கேனில் தண்ணீர் பிடித்து எடுத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் நம்பியிருக்கும் நாய் ராக்ஸிக்கு உணவு போடுகிறார்கள்.
ஹரிகேன் லைட் வெளிச்சத்தில் படிக்கிறார்கள். ஒரு மழை இரவில் வீட்டில் திடீரென வினோத சத்தம் கேட்டு போய்ப்பார்த்தால் அங்கே அவர்களின் அப்பா அப்துல்ரஃபே இருக்கிறார். படம் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் வரை இந்தக் காட்சிகள் நீடித்ததால், நமக்கும் ஒரு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவது இயற்கை தானே. ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மூன்று மகன்கள் பிறந்த பிறகு பணக்கஷ்டத்தால் தனது மனைவி பிரார்த்தனா ஸ்ரீகாந்த்தை அவரது அப்பா வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் மகாத்மா காந்தி பெயரில் பள்ளி ஒன்றை நடத்தும் அப்துல். மகன்களிடம் மிக கண்டிப்புகாட்டுகிறார். ஒரு கட்டத்தில் தனது அம்மாவைத் தேடிப் போகிறார்கள் மகன்கள். அங்கேயும் தாத்தாவுக்கு பணப் பிரச்சனை என்பதால், ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாததால், மீண்டு அப்பாவிடமே வருகிறார்கள். சில மாதங்களிலேயே கணவனைத் தேடி வருகிறார் பிரார்த்தனா. தாயைப் பார்த்ததும் மகன்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ஆனால் அப்துலோ திருந்தியபாடில்லை. மீண்டும் அப்பா வீட்டுக்கே போய்விடுகிறார் பிரார்த்தனா.
இதான் ‘நாங்கள்’. இதைப் பார்ப்பதற்கு நாமெல்லாம் ரொம்பவும் பொறுமைசாலிகளாக இருக்க வேண்டும். எந்த ’கேட்டகிரி’யில் கொண்டு வருவது என வகை பிரிக்க முடியாமல் சில சினிமாக்கள் அவ்வப்போது வருவதுண்டு. விருதுக்காக மட்டுமே எடுத்து, அங்கே சிலரின் கைதட்டல்களும் பாராட்டுகளும் கிடைத்தால், வெகுஜனங்களின் பார்வைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். அதில் ஒன்றிரண்டு தான் ஜெயிக்கும். மற்றவை… ? அதில் இந்த ‘நாங்கள்’ எந்த வகை என்பது நமக்குப் புரியவில்லை.
ஒரே இடத்தில் பல நிமிடங்கள் நிற்கும் கேமரா ஆங்கிள், ரொம்பவும் மெதுவாக நகரும் காட்சிகள், இதல்லாம் நல்ல சினிமாவுக்குத் தகுதியானவை என யாரோ அவினாஷிடம் சொல்லியிருப்பார்கள் போல. அதை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருக்கிறார். மூன்று மகன்களும் அப்பாவுடன் இருக்கும் காட்சிகளை மட்டும் பிளாக் & ஒயிட்டில் காண்பித்த வகையில் அவினாஷின் புரிதலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அந்த அப்பாவான அப்துல், கண்டிப்பானவரா? சைக்கோவா? கொடூரமானவரா? என்பது தான் நமக்குப் புரியவில்லை. கையில் காசு இல்லை என்பதற்காக எந்தப் புருஷனாவது பொண்டாட்டியை விரட்டியடிப்பானா? க்ளைமாக்ஸ்ல நாய் ராக்ஸி செத்துப் போச்சுங்கிறதுக்காக கதறிக்கதறி அழுறவன் பொண்டாட்டி அருமை தெரியலைன்னா என்ன மனுஷன் அவன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மகன்களாக நடித்துள்ள மிதுன், ராஜ்குமார், நித்தின் ஆகிய மூன்று சிறுவர்களுமே கேமரா பயமே இல்லாமல் அனாயசமாக நடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி சினிமாக்கள் ஒன்றரை மணி நேரம் ஓடினாலே பார்ப்பதற்கு நமக்கு பொறுமை வேண்டும். ஆனால் இந்த ‘நாங்கள்’ இரண்டரை மணி நேரம் நமது பொறுமைக்கு ரொம்பவே சோதனை வைத்துவிட்டது.
— மதுரை மாறன்.