நாக்பூர் முதல் நம்ம ஊர் வரை….
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகள், கல்வி, சுகாதாரம், குடிநீர் இவையெல்லாம் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அதைவிட முக்கியமான ஆட்சித்திறன் என்பது மக்கள் மனதில் நிம்மதியும் நம்பிக்கையும்தான். சட்டம் தன் கடமையை செய்யாவிட்டால் அங்கே அமைதி குலைந்துவிடும். அமைதி இல்லாவிட்டால் மக்களிடம் அச்சம் ஏற்படும். அதுவே அவர்களின் நிம்மதியையும் நம்பிக்கையையும் கெடுத்துவிடும்.

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த நிலையில், வகஃபு சொத்து தொடர்பான விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலைக்கு காரணமானவர்கள் பிடிபட்டிருப்பதும், அதில் ஒருவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், காவல் நிலைய அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் தொடர் நடவடிக்கைகளாக அமைந்திருக்கின்றன.
சட்டமன்றத்தில் இந்தப் படுகொலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உத்தரவாதமளித்த நிலையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், காவல்துறையும் உளவுத்துறையும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் வீடியோவை எப்படி கவனிக்கத் தவறினர் என்பதும், இப்படிப்பட்ட அலட்சியங்கள் தொடர்வதற்கு எது காரணமாக இருக்கிறது, அதை சீர்படுத்த என்ன வழி என்பதை கண்டறிந்து, துணிந்து செயல்படுத்தாத வரை இத்தகைய கொலைகளை நிறுத்த முடியாது.
ஈரோட்டில் ஒரு ரவுடி தன் மனைவியுடன் காரில் சென்றபோது, ரவுடியை பழிக்குப்பழி வாங்கும் வகையில் எதிர்த்தரப்பு துரத்தி வந்து, காருக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்த சம்பவம் வீடியோவாகப் பரவி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அந்த ரவுடி, தண்டனை பெறாமல் எஸ்கேப் ஆகிவந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பு இந்தப் பழி வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. கொலையாளிகளை போலீசார் சுட்டுப் பிடித்த செய்தியும் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு அருகே மாநகராட்சி முன்னாள் ஊழியரும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருமான ஒருவரை நிலம் தொடர்பான விவகாரத்தில், காரில் கடத்திச் சென்று கொலை செய்து, செஞ்சி அருகே மலையடிவாரத்தில் புதைத்த விவகாரம் வெளியாகி, உடலைத் தோண்டி எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்டவருக்கு 71 வயது. நிலப் பிரச்சினை தொடர்பாக தன்னை ஒரு கும்பல் மிரட்டுவது குறித்து, அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விசாரணையைத் தொடங்கினால், கொலை வரை இந்த விவகாரம் சென்றதற்கான காரணம் புரிந்துவிடும்.
சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய அதிகாரமும் கடமையும் கொண்டவர்கள் அதனை அலட்சியப்படுத்தும்போதும், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போதும் மக்கள் அச்சத்திற்குள்ளாகிறார்கள். நிம்மதியையும் நம்பிக்கையையும் இழக்கிறார்கள்.
மராட்டியத்தின் முக்கிய நகரான நாக்பூர் கடந்த சில நாட்களாகப் பற்றி எரிகிறது. மொகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கலவரத்தில் ஈடுபட, புனித நூலைக் கொளுத்திவிட்டார்கள் என இன்னொரு தரப்பு பதிலுக்கு களமிறங்க, அரசு இயந்திரம் நடப்பது நடக்கட்டும் என்றிருந்த நிலையில், கடைகள் உள்ளிட்ட பல இடங்களும் தீக்கிரையாகியுள்ளன.
17ஆம் நூற்றாண்டில் மொகலாய மன்னன் ஔரங்கசீப்புக்கும் மராட்டிய மன்னன் சிவாஜியின் மகன் சாம்பாஜிக்குமான சண்டைகள், அதில் நடந்த சித்திரவதைகள் என்ற கதையை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம், வசூலை வாரிக்குவித்ததுடன், மதரீதியான உணர்வுகளைக் கிளறிவிட்டதன் விளைவாக, ஒரு நகரம் பற்றி எரியக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோதே இன்றைய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ஔரங்கசீப்பை மையமாக வைத்து மதரீதியான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்ததால், ஒரு திரைப்படம் வெளியானவுடன் நெருப்பு பற்றிக் கொள்வது எளிதாகிவிட்டது. நாக்பூர் துண்டிக்கப்பட்ட நகரமாகியிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்புக்கிடையே பிரச்சினையை உருவாக்கிய அரசு நிர்வாகத்தால் அந்த மாநிலத்தில் எழுந்த நெருப்பு இன்னும் அடங்கவில்லை. கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் எந்த நிலைக்குள்ளானார்கள் என்பதை நாடறியும். பெண்களும் குழந்தைகளும் அச்சத்துடன் வாழும் நிலைமை உருவாகிவிட்டால் அது நாடல்ல, சுடுகாடு. இது நாக்பூர் முதல் நம் ஊர் வரை பொருந்தும்.
– Spark news