இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்கக்கூடாதா?

தோழமை பிரிந்தது…

என்ன எழுதுவது?

எல்லா மொழிகளும்

ஆறுதல் தேடி அலைகிறது…

101 வயதில்

நீ மறைந்தாலும்

சின்னதாய் ஓர் ஆசை

இன்னும்

ஒரு நூற்றாண்டு

வாழ்ந்திருக்கக்கூடாதா?

மூன்று இந்தியாவை

நீ மட்டும்தான்

பார்த்திருக்கிறாய்

காந்தி இந்தியா

நேரு இந்தியா

கோட்சே இந்தியா

போரில் தொடங்கிய

வாழ்வைப்

போராட்டமாகவே முடித்துக் கொண்டாய்…

எளிய மனிதர்களுக்கான

வாழ்வை

வாழ்தலை

உன் வாழ்நாள்

வலிமைபடுத்தியிருந்தது…

இந்தியா

தன்

நல்லகண்ணையே

இழந்துவிட்டது…

அந்நிய ஆதிக்கத்தின்

விலா எலும்புடைத்த

உன் போராட்டம்

தோழர்களின் தோள் எலும்பாகிப் போனது…

வாகை சூடிக்கொள்ளமுடியாத

தொடர் போரையல்லவா எங்களுக்குக்காகச் செய்தாய்…

பாரி

கையில் இருந்ததைத்தான்

கொடுத்தான்

நீ கையில் வந்ததை எல்லாம்

எங்களுக்குக் கொடுத்தாய் வாரி…

செங்கொடி

தோழர் நல்லகண்ணு

போராட்டம்

உழைக்கும் மக்களின்

மன நாற்றாங்களில்

இவைகள்  தூவப்பட்டுக் கொண்டே இருக்கும்…

தேசத்தில் தேர்லை விதைத்து

இலாபத்தை அறுவடை செய்தவர்கள் மத்தியில்

புழுதிநிலத்தில்

போராடும் மக்களுக்கு

புரட்சிவிதைநெல்லை

கையளித்துக் கொண்டிருந்தாய்

தோழனே…

சனநாயகம்

மண்டியிட்டுப்

படிக்க வேண்டிய

பொதுவுடைமை

புத்தகம் நீ

வாசிக்க தெரியாததால்

அது

கோட்சேக்களை எல்லாம்

சகத் குருவாக்கிக் கொண்டது…

பாவம் சனநாயம்

நல்லகண்ணை

இழந்துவிட்டு

ஊனக் கண்ணால்

ஞானம் தேடி தோற்கிறது…

எங்களின் தேவை அறிந்து

எங்களோடு நடந்தே

வந்த

உன்னைவிட

அழகிய தேவதை

ஆண்முகத்தோடு

இருக்கவே முடியாது…

தோழரே

101

எளிமை

தொண்டு

நேர்மை

போராட்டம்

புரட்சி

இத்தனை உயரத்தையும்

எதிர்காலத்தில்

யார் எட்டிப்பார்த்தாலும்

தோழர் நல்லகண்ணு என்றுதான்

வாசித்துத் திரும்புவார்கள்…

எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்

செங்கொடி அசைக்கிறோம்

அத்தனை அபாயத்தில்

இருக்கிறது

இந்தியா

திரும்பிப்பாருங்கள் தோழரே…

கண்ணீரோடு…

 

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கா தமிழ் பயிற்றுநர்,

இயக்குநர், செம்மொழி தமிழ்க்கூடம்,

சீர்காழி.

Comments are closed, but trackbacks and pingbacks are open.