அங்குசம் பார்வையில் ‘நீ ஃபார் எவெர்’
தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் புகழ் & ஈடன். டைரக்டர்: அசோக் க்குமார் கலைவாணி, ஆர்டிஸ்ட்: சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, டாக்டர் வித்யா, பிரதோஷ், நோபிள் ஜேம்ஸ், ரித்திகா ஸ்ரீனிவாஸ். ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்ஜி, இசை: அஸ்வின் ஹேமந்த், எடிட்டிங்: எஸ்.ஏ.நாகார்ஜுன், பிஆர்ஓ: சதீஷ் & சிவா ( எய்ம்)
சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் நம்ம ஹீரோ சுதர்சன் கோவிந்த் ‘நீ ஃபார் எவெர்’ [ ஒருவனுக்கு ஒருத்தி] என்ற ஆப்-ஐ உருவாக்குகிறார். ”இதெல்லாம் சரிப்பட்டு வராது. செட்டானவ நைட்டுக்கு, செட்டாகலைன்னா பகலுக்கு” என நண்பர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதனால் டென்ஷனாகி பல பெண்களிடம் புரபோஸ் பண்ணும் அட்டெம்ப்ட்டில் இறங்குகிறார் ஹீரோ. ஆனால் எதுவும் செட்டாகதால், டேட்டிங் ஆப் மூலம் ஹீரோயின் அர்ச்சனா ரவியை சந்தித்து லவ் புரபோஸ் பண்ணுகிறார். அந்த அர்ச்சனாவோ, சினிமா கம்பெனி ஒன்றில் லவ் ஸ்டோரியை சொல்லி டைரக்டராக கமிட்டாகிறார். இந்த லவ் ஸ்டோரியின் ரியலிஸ்ட்டிக்கிற்காக ஹீரோவை லவ் பண்ணுவது போல நடிக்கிறார்.
பொள்ளாச்சியில் வசிக்கும் தனது தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனுக்கு காதல்னாலே வேப்பங்காய் எனத் தெரிந்தும் உண்மையாகவே அர்ச்சனாவை லவ் பண்ணுகிறார். ஏன்னா தனது அம்மாவைக் காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்டவனால் கொந்தளிப்பில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு தான் பார்க்கும் பெண்ணைத் தான் பேரன் கட்டவேண்டும் என்ற பிடிவாதம். அதனால் பெண் வீட்டார் ஒய்.ஜி.மகேந்திரன் வீட்டுக்கு வந்திருக்கும் நேரம் பார்த்து ஐஸ்வர்யா என்ற டூப்ளிகேட் பெயருடன் அந்த வீட்டுக்குள் எண்ட்ரியாகிறார் அர்ச்சனா ரவி. அதன் பின் நடக்கும் ஃபேமிலி ஃபீலிங், லவ் ஆட்டம் தான் இந்த ‘நீ ஃபார் எவெர்’.
முதல் படம் எனத் தெரியாத அளவுக்கு நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார் அறிமுக ஹீரோ சுதர்சன் கோவிந்த். “நம்ம குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசியதே இல்லை. இதெல்லாமே உங்களால தான் தாத்தா” என ஒய்.ஜி.எம்.மிடம் கலங்கும் சீனில் சபாஷ் வாங்குகிறார். அதே போல் அர்ச்சனா ரவி போலியாக லவ் பண்ணுவது தெரியாமல் உண்மையிலேயே அவரை லவ் பண்ணி, அவரிடம் தனது அம்மாவின் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்வது, அம்மாவைவிட்டு ஓடிப்போன அப்பா நிழல்கள் ரவியைச் சந்தித்து குமுறுவது என சில சீன்களில் சபாஷ் வாங்குகிறார் சுதர்சன் கோவிந்த்.
இன்றைய ஜென் ஸீ யுவதிகளை பிரதிபலித்திருக்கிறார் அர்ச்சனா ரவி. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததால் ஃபேமிலி அட்டாச்மெண்ட் இல்லாமல் எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸியுடன் இருப்பதும் சுதர்சனின் குடும்பத்திற்குள் எண்ட்ரியானதும் பாசம்னா என்னன்னு தெரிந்து கலங்குவதும் என அர்ச்சனா ரவியின் நடிப்பு டபுள் ஓகே. அனாதை ஆசிரமத் தலைவி ஸ்ரீஜா ரவி, அர்ச்சனாவின் ஃபோர்ஜரி லவ்வைக் கண்டித்து சீறும் சீனில் அவரின் ஃப்ரண்டான சினேகாவிடம் “எல்லாத்துக்கும் காரணம் நீ தான். உன்னை கட்டிக்கப்போறவன் செத்தான்” என போட்டுத்தாக்கும் சீன் செம ஜோர்.
சுதர்சனின் அம்மாவாக டாக்டர் வித்யாவுக்கு இனிமேல் நல்ல அம்மா கேரக்டர்கள் தேடி வரலாம். தாத்தாவாக ஒய்.ஜி.மகேந்திரனும் தனது அனுபவ நடிப்பை சில சீன்களில் கண்களாலேயே வழங்கியிருக்கார். பாடல்களைவிட பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் மியூசிக் டைரக்டர் அஸ்வின் ஹேமந்த். பொள்ளாச்சியின் பசுமை அழகை கண்குளிரக் காட்டியிருக்கார் கேமராமேன் ராஜா பட்டாச்சார்ஜி.
இடைவேளை வரை எல்லா கேரக்டர்களும் பேசிக் கொண்டே இருப்பதால் கொஞ்சம் சலிப்பாக இருக்கு. ஆனால் இடைவேளைக்குப் பிறகு, என்னதான் ஏ.ஐ., சாட் ஜிபிடி, டெக்னாலஜி நமது வாழ்க்கையை ஆக்கிரமித்தாலும் குடும்ப உறவுகளும் பாசமும் தான் நிலையானது என்பதைத் தெரிந்து புரிந்து க்ளைமாக்ஸ் வைத்த டைரக்டர் அசோக்குமார் கலைவாணியைப் பாராட்டலாம்.
அங்குசம் பார்வையில் ‘ நீ ஃபார் எவெர்’ 42/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.