“சினிமாவில் உண்மையைச் சொல்வது பெரும்பாடு” – சென்சாரைப் பொளந்து கட்டிய ஆர்.கே.செல்வமணி!
ஈழத்தில் போர் நடந்த காலகட்டத்தில் ஒரு திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு அந்த திருமண வீட்டார் எதிர்கொள்ளும் பதட்டமும் பயமும் சொல்லிமாளாது. இதை அடிப்படையாக வைத்து இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவர் சோமீதரன் இயக்கியுள்ள படம் ‘நீளிரா’. ‘ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ்’ கார்த்திகேயன் சந்தானம், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் முதல் ப்ரமோ நிகழ்ச்சி, கடந்த 20-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’வும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியான கார்த்திகேயனும் கார்த்திக் சுப்புராஜும் ஏப்ரல் 03-ஆம் தேதி ‘நீளிரா’ ரிலீஸ் ஆவதால், படத்தை மேலும் விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கடந்த 27-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.
கார்த்திக் சுப்புராஜின் அன்பு அழைப்பிற்காக, சிறப்பு விருந்தினர்களாக அகிலா பாலுமகேந்திரா, டைரக்டர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், வசந்தபாலன், ராஜுமுருகன், பொன்ராம், லோகேஷ் அஜ்லிஸ், லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.வினோத்ராஜ், ராம்குமார் பாலகிருஷ்ணன், இயக்குனர்கள் சங்கம் & ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். ஹைதரபாத்திலிருந்து ராணா டகுபதியும் வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
டிரெய்லரை வெளியிட்டு வாழ்த்திப் பேசிய அகிலா பாலுமகேந்திரா, “எனது கணவர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம், நான் பிறந்தது மட்டக்களப்பு. டைரக்டர் சோமீதரன் பிறந்து வளர்ந்தது மட்டக்களப்பில் தான். எங்கள் ஊரைப் பற்றி முழுமையாக ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்பது எனது கணவரின் ஆசை. அதை சோமீதரன் நிறைவேற்றியிருக்கிறார். இந்த ‘நீளிரா’ வெற்றி பெற உள்ளன்புடன் வாழ்த்துகிறேன்” என்றார்.
மற்ற டைரக்டர்கள் அனைவருமே ”ஈழத்தில் போர்ச்சூழல் இருந்த நேரத்தில் கதை இருந்தாலும் படத்தில் ஒரு காட்சியில் கூட குண்டு வெடிப்போ, வன்முறையோ, ரத்தமோ இல்லாமல் எடுத்திருப்பது பெரும் ஆச்சர்யம் “ என்றனர்.
வெற்றிமாறன் பேசும் போது, “சினிமாவில் நம்ம தமிழினத்தின் உணர்வை, பண்பாட்டை நேர்மையுடன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். அதே சமயம் சென்சாரையும் சமாளித்து அதை ரிலீஸ் பண்ணுவது சாமர்த்தியம். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருப்பது தான் ஆச்சர்யம்” என்றார்.
ஆர்.கே.செல்வமணி, “ரிவைசிங் கமிட்டிக்குப் போகாமலேயே இப்படத்தைக் கொண்டு வந்திருப்பது கார்த்திக் சுப்புராஜின் திறமை தான். என்னுடைய ‘குற்றப்பத்திரிகை’ படத்தை ஒன்பது முறை சென்சார் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் படத்தில் புலிகளுக்கு ஆதரவான காட்சிகள் இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்கள். எந்த சீன்லன்னு சொல்லுங்க, கட் பண்றேன்னு சொன்னேன். அது தெரியல, ஆனா புலிகளுக்கு ஆதரவா இருக்கு….புலிகளுக்கு ஆதரவா இருக்குன்னு சொன்னார்கள். இதான் அவர்களின் அறிவு லட்சணம். இப்பெல்லாம் வெறுப்பு அரசியலைப் பரப்பும் சினிமாக்களுக்கு ஈஸியா சென்சார் சர்டிபிகேட் கிடைச்சிருது. உண்மையைச் சொல்லி சினிமா எடுப்பது பெரும்பாடா இருக்கு” என சென்சாரைப் பொளந்து கட்டினார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.