நியோமேக்ஸ் : திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி தீர்ப்பு ! இதுவரை புகார் கொடுக்காதவர்களுக்கு புகார் அளிக்க நீதிமன்றம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு !
நியோமேக்ஸ் : திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி தீர்ப்பு ! இதுவரை புகாரே கொடுக்காதவர்கள் புகார் அளிக்க இறுதி வாய்ப்பு ! நியோமேக்ஸ் வழக்கு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை புகார் கொடுக்காதவர்களுக்கும் புகார் கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கியிருப்பது உள்ளிட்டு தற்போதைய விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மனிஷாவே தொடர்ந்து செயல்பட வேண்டும்; பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு போதிய ஆள் பலத்தை வழங்க வேண்டும் என்பது வரையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது, மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
நியோமேக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களான சார்லஸ், இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நியோமேக்ஸின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ரொபோகோ பிராப்பர்டீஸ் இன்வெஸ்டார்ஸ் வெல்ஃபேர் சொசைட்டியின் சார்பில், அதன் தலைவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில்தான் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறார். நீதிபதி பரதசக்ரவர்த்தி.
Neomax வழக்கு கடந்து வந்த பாதை :
மனுதாரர் எஸ்.நடராஜன் தரப்பில் வழக்கறிஞர் டி.லெனின்குமார், 172 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக சார்லஸ், இளையராஜா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை பிணையில் விடுவித்ததால் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த முதலீட்டாளர்களை அணுகி புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டி வருகிறார்கள் என்பதாக, ஆகஸ்டு – 11 அன்று முதன் முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது வாதங்களை முன்வைத்திருந்தார். ஆகஸ்டு-25 அன்று அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்டு-25 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வக்குமார், அவர்கள் அரசு வழிகாட்டி மதிப்பைத்தான் சொல்லியிருக்கிறார்கள். சந்தை மதிப்பில் கணக்கிட்டால், புகார்தாரர்கள் அனைவருக்கும் செட்டில்மெண்ட் செய்வதற்குரிய போதுமான அளவு நிலங்கள் கைவசமிருக்கின்றன. நிறுவனமும் செட்டில்மெண்ட் செய்ய தயாராகவே இருக்கிறது என்பதாக வாதிட்டார்.
எவ்வாறு செட்டில் செய்யப்போகிறோம் என்பதாக நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ள விசயங்கள் குறித்தும், வழக்கின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் வழக்கை அக்டோபர்-03 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அக்டோபர் -03, 11, ஆகிய தேதிகளில் தொடர்ந்த நீதிமன்ற நடைமுறைகளையடுத்து, அக்டோபர்-14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அக்டோபர் – 14 அன்று நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கின் எதிர்தரப்பினராக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாக, உள்துறை செயலர், மற்றும் பொருளாதாரக்குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ஆகியோரை இணைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்ற வழக்குகளிலிருந்து நியோமேக்ஸ் விவகாரம் முற்றிலும் வேறுபட்டிருப்பதையும், பெரிய அளவில் பலரும் பணத்தை இழந்திருக்கின்றனர் என்பதையும் பதிவு செய்த நீதிபதி, விசாரணை அதிகாரியின் செயல்பாடுகளால் வழக்கு முன்னேற்றம் கண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
டி.எஸ்.பி. மனிஷாவே விசாரணை அதிகாரியாக தொடர வேண்டும் :
இந்த வழக்கில் 43 துணை நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்து, , அதன் இயக்குநர்களாக செயல்பட்ட 119 பேர் அடையாளம் காணப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள், 44 பேர் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். 32 பேர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். 41 பேர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
இதுவரை பரிசீலிக்கப்பட்ட 5866 புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களின் விவரங்களை சம்பந்தபட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு, சொத்துக்களை இணைப்பற்குரிய பணியில் விசாரணை அதிகாரி ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டி, அரசு தரப்பில் மாநில அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் வீரகதிரவன் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி.மனிஷாவே தொடர வேண்டும் என்றும் இந்த பணியை அவர் விரைந்து முடிக்க அவருக்குத் தேவையான ஆள் பலத்தை வழங்குவதை உள்துறை செயலர், மற்றும் பொருளாதாரக்குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்றைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் நீதிபதி பரதசக்ரவர்த்தி.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில், மூன்றில் ஒருபங்கு புகார்தாரர்கள் நிலமாகவே பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதால் அவர்கள் கோரியபடியே நிலமாக வழங்க நிறுவனம் முன்வருவதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
உள்துறை செயலர், மற்றும் பொருளாதாரக்குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ஆகியோரை வழக்கில் இணைத்ததும்; டி.எஸ்.பி. மனிஷாவே வழக்கின் விசாரணை அதிகாரியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னதோடு, அவருக்குத் தேவையான உதவிகளையும் அரசு தரப்பில் வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அக்டோபர் – 14 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் சாரம்சமாக அமைந்திருந்தது.
இதனை தொடர்ந்து, அக்டோபர் – 19 ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் விசாரணையில், உள்துறை செயலர், மற்றும் பொருளாதாரக்குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ஆகியோருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.
நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முரண்பட்ட தகவல் :
முக்கியமாக, அரசு தரப்பில் இதுவரை 8667 பேரிடமிருந்து புகார்கள் வரப்பெற்றிருப்பதாகவும்; அதன் மதிப்பு 1106 கோடி ரூபாய் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் தரப்பில், 13500 பேரிடமிருந்து 563 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே முதலீடாகப் பெற்றிருப்பதாக வாதிடப்பட்டது. இதிலிருந்து, நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? அவர்களிடமிருந்து எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது? என்பதில் முரண்பட்ட தகவல் இருப்பதால், ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறியும்பொருட்டு பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அக்டோபர்-23 ஆம் தேதிக்குள்ளாக, ஆங்கிலத்தில் தி இந்து, தமிழில் தினத்தந்தி ஆகிய செய்திதாளில் தமிழகம் முழுவதும் அறிவிப்பை பிரசுரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வெளியாகும் இந்த அறிவிப்பில், இதுவரை புகார் அளிக்காதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், உரிய மாதிரி படிவத்தில் புகார் தாரர்கள் பற்றிய விவரம், அவர்கள் முதலீடு செய்த தொகை, அவர்கள் எதிர்பார்க்கும் முதிர்வுத்தொகை, பணமாக பெற விருப்பமா? பணமாக பெற விருப்பமா? என்பதை பதிவு செய்யும் வகையிலும் வங்கி கணக்கு விவரங்களோடு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அக்டோபர் – 23 ஆம் தேதி முதல் அக்டோபர் – 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையில், நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி புகார் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. புகாரை தனிநபராகவும் பதிவு செய்யலாம்; நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் செயல்படும் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் வழியாகவும் பதிவு செய்யலாம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி. அக்டோபர் – 30 ஆம் தேதி வரையில் பெறப்பட்ட புகார்களை ஆவணப்படுத்தி, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நவம்பர் – 26 ஆம் தேதி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் இணையதளத்தில் அவற்றை வெளியிட வேண்டும்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வெளியிடும் மேற்படி அறிவிப்பில் புகார்தாரர் தரப்பிலோ, நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பிலோ ஆட்சேபனை ஏதும் இருப்பின், நவம்பர் – 26 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் – 02 ஆம் தேதிக்குள்ளாக முறையீடு செய்வதற்கும் அவகாசம் வழங்கியிருக்கிறார்கள். நிறைவாக, டிசம்பர் -03 அன்று இறுதி அறிக்கையை மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனடிப்படையில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்பதாகவும் நீதிபதி பரதசக்ரவர்த்தி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவற்றெயெல்லாம்விட மிக முக்கியமாக, நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த வழிகாட்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, தற்போதைய விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.மனிஷாவுக்கு போதுமான ஆள்பலத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதன்படி, தற்போதைய நிலையில் டி.எஸ்.பி.யின் கீழ் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் மூன்று இன்ஸ்பெக்டர்களை நியமிக்க வேண்டும் என்றும்; புகார்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் பொருட்டு தணிக்கைத்துறையில் அனுபவம் பெற்ற 20 பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் உள்துறை செயலர், மற்றும் பொருளாதாரக்குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.
Neomax வழக்கில் முக்கியமான தேதிகள் :
அக்டோபர் – 23 : பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். அக்டோபர் – 23 முதல் அக்டோபர் – 30 வரை – பொது அறிவிப்பில் உள்ள பட்டியல் படி புகார்தாரர்கள் புகார் அளிக்க அவகாசம். அக்டோபர் – 31 முதல் நவம்பர் – 26 வரை – பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்வதற்கான அவகாசம். நவம்பர் – 27 – உறுதி செய்யப்பட்ட முதிர்வுத்தொகையுடன்கூடிய முதலீட்டுத் தொகை விவரங்கள் அடங்கிய புகார்தாரர்களின் மொத்தப்பட்டியலை வெளியிடுவது. நவம்பர் – 27 முதல் டிசம்பர் – 02 வரை – பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் முறையீடு செய்வதற்கான அவகாசம். டிசம்பர் -03 – இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல். வழக்கின் இறுதி விசாரணை.
நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இதுவரை புகார் அளித்திருக்கும் 8667 பேர் மத்தியில், பணமாக பெறுவதா? நிலமாக பெறுவதா? என்பதில் பஞ்சாயத்து நீடித்து வருகிறது. தேனிமாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் நிலமாகவே பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். கம்பம் இளங்கோவன், சிவகாசி ராமமூர்த்தி போன்றோர் முதிர்வுத்தொகையுடன்கூடிய பணமாகவே வேண்டும் என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.
நிலமாக பிரித்துக் கொடுப்பதாக இருந்தாலும் சரி, பணமாக கொடுப்பதென்றாலும் சரி, முதலில் எத்தனை பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்? அவர்களிடமிருந்து எவ்வளவு வசூலித்திருக்கிறார்கள்? வசூலித்த பணத்திலிருந்து எவ்வளவு சொத்துக்களை வாங்கிப்போட்டிருக்கிறார்கள்? என்பதில் தெளிவு பெறாமல், இறுதி உத்தரவை பிறப்பிக்க முடியாது என்ற நிலை எடுத்திருக்கிறது, நீதிமன்றம். இதற்கு உதவியாக, நீதிமன்றமும் விசாரணை அதிகாரியும் திருப்தியாகும் வகையில் போதுமான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று நியோமேக்ஸ் நிறுவனத்திற்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது, நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் நிறுவனம் !
தமிழகம் முழுவதும், 13,500 பேரிடமிருந்து வெறும் 563 கோடி ரூபாயை மட்டுமே இதுவரை வசூல் செய்திருப்பதாக, நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் நிறுவனம் வெளிப்படையாக முதலீட்டாளர்கள் பட்டியலையும், தனது சொத்துக்களின் விவரங்களையும் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் தேனொழுகும் பேச்சில் மயங்கி இலட்சங்களைப் போட்டு ஏமாந்து நிற்கும் ஏமாளி முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கியிருக்கிறது, நீதிமன்றம். ”நீதிமன்றத்தை நாடி சென்றால், வழக்கு வாய்தா என்று பல பத்து வருடங்களை கடத்திவிடுவார்கள்” என்று சொல்லியே, இலட்சக்கணக்கான முதலீட்டாளர்களை புகார் கொடுக்க விடாமல் நியோமேக்ஸ் நிறுவனம் தடுத்து வைத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், பணமாக வேண்டுமா? நிலமாக வேண்டுமா? என்ற விருப்பத் தேர்வோடு புகார் கொடுப்பதற்கான இறுதி வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியிருப்பது இந்த வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.