அடுத்தடுத்து அம்பலமாகும் நியோமேக்ஸ் தில்லாலங்கடி மோசடி சம்பவங்கள் ! தலைமறைவான நியோமேக்ஸ் சரவணகுமார் !
வீடியோவை காண
அடுத்தடுத்து அம்பலமாகும் நியோமேக்ஸ் தில்லாலங்கடி மோசடி சம்பவங்கள் ! – நியோமேக்ஸ் என்றாலே மோசடியும் பித்தலாட்டமும்தான் போல. நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி மூன்று இலட்சத்தை முதலீடு செய்து ஏமாந்து நிற்பதோடு, நியோமேக்ஸில் முதலீடு செய்யுமாறு தன்னை நிர்ப்பந்தித்த நீண்ட கால நண்பரை நம்பி தனிப்பட்ட முறையில் கொடுத்த ஆறு இலட்சத்தையும் இழந்து நிற்கிறார் மதுரையைச் சேர்ந்த நவீன்குமார்.
ஏழுவருடம் நெருங்கிப் பழகிய நண்பனே தன்னை ஏமாற்றிய கதையை விவரிக்கிறார் நவீன்குமார். “நானும் மதுரையைச் சேர்ந்த சரவணக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கு ஏழு வருட பழக்கம். நியோமேக்ஸில் சென்டர் ஹெட் ஆக இருக்கிறார். அவரை நம்பி நான் தனிப்பட்ட முறையில் மூன்று இலட்சம் முதலீடு செய்திருக்கிறேன். அதற்கான வட்டியெல்லாம் கொடுத்து வந்தார்கள்.
நியோமேக்ஸ் வழக்கில் சிக்கி பிரச்சினை ஆரம்பமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சரவணக்குமார் என்னிடம் வந்தார். அவரது நெருங்கிய ரத்த உறவான பவுன் என்பவர் நியோமேக்ஸில் ஆறு இலட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாகவும்; தற்போது பவுன் வீடு கட்டி வருவதாகவும் சொல்லி உடனடியாக அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றார். அவருக்கு பணம் இப்போதைக்கு வேண்டும். சரியாக மூன்று மாதத்தில் நியோமேக்ஸ் கம்பெனியிலிருந்து அவருடைய பணத்தை பெற்று தந்துவிடலாம் என்றார்.
எல்லோருமே குடும்ப நண்பர்களாக பழகிய பழக்கத்தின் அடிப்படையில் இருந்து, நானும் எனது பெயரில் பெர்சனல் லோன் எடுத்து ஆறு லட்சம் ரூபாயை சரவணக்குமாரிடம் கொடுத்தேன். பதிலாக, அவரும் பவுன் என்பவர் நியோமேக்ஸில் முதலீடு செய்த பத்திரத்தை எனக்கு கொடுத்திருந்தார். மாதங்கள் மூன்று ஓடியது. நினைவூட்டினேன்.
இதோ, அதோ என்று சில மாதங்களை ஓட்டினார். நெருக்கிப்பிடித்துக் கேட்டபோது, நியோமேக்ஸ் கம்பெனி சிக்கலில் இருக்கிறது. இப்போதைக்கு முடியாது. கொஞ்சம் நாள் ஆகும் என்றார். ஒரு கட்டத்தில், எனது போனை எடுத்துப் பேசாமல் புறக்கணித்தார். பின்னர் நம்பரையே மாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார். ஆளையே பிடிக்க முடியவில்லை.
வேறு வழியின்றி மதுரை கமிஷனர் ஆபீசில் இதுபற்றி புகார் தெரிவித்தேன். மதுரை ஆணையூர் ஏசி ஜமாலுக்கு என் புகாரை பார்வர்டு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்கள். அவரும் அழைத்து பேசினார். ஒழுங்கா பதில் சொல்லனும். ஓடி ஒளியக்கூடாது என்று எச்சரித்தார். வேறொருவர் பெயரில் உள்ள பாண்டு சட்டப்படி செல்லாது. செக் எழுதிக் கொடு என்று வாங்கிக் கொடுத்தார். மூன்று இலட்ச ரூபாய் வீதம் இரண்டு செக் கொடுத்தார் சரவணக்குமார்.
நானும் அவர்கள் சொன்ன தேதியில் செக்கை போட்டேன். வங்கிக்கணக்கில் பணமும் இல்லை, செக்கில் பதிவான கையெழுத்தும் மேட்ச் ஆகவில்லை என்று செக் ரிட்டர்ன் ஆனது.
மீண்டும் போலீசிடம் முறையிட்டேன். கடுப்பான போலீசார் நான் கொடுத்த புகாரில் எஃப்.ஐ.ஆர். பதிவு (டிச 15, 2023) செய்தார்கள். சரவணக்குமாரை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். இந்தமுறை அழகுராஜா என்ற வழக்கறிஞரை உடன் கூட்டி வந்தார் சரவணக்குமார். கூடவே, நியோமேக்ஸில் முதலீடு செய்த வகையில் பழக்கமான விருதுநகரைச் சேர்ந்த லேடி எஸ்.ஐ. ஒருவரையும் ரெகமெண்டுக்கு கூட்டி வந்திருந்தார்.
அவரும் பணத்துக்கு நான் பொறுப்பு சமாதானமாக பேசி முடித்து கொடுங்கள் என்று ஏ.சி.யிடம் பேசினார். எஃப்.ஐ.ஆர். ஆகிவிட்டது என்பதாலும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதாலும், அப்போதைக்கு 1.5 இலட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 4.5 இலட்சத்துக்கு மீண்டும் 2.25 இலட்சம் வீதம் இரண்டு செக் கொடுத்தார். அப்போது, ரொம்பவே திமிராக, உங்களுக்கு காக்கிச் சட்டை பேசுச்சுன்னா எங்களுக்கு கருப்பு சட்டை பேசும் என்று டயலாக் பேசினார் சரவணக்குமார்.
திரும்பவும் அந்த செக்குகளை கிளீயரன்ஸ்சுக்கு போட்டேன். முதலில் நடந்த அதே கதைதான் இப்போதும். வங்கிக்கணக்கில் பணமும் இல்லை. அவர் போட்டுக் கொடுத்த கையெழுத்தும் வங்கி பதிவில் உள்ள கையெழுத்தோடு மேட்ச் ஆகவில்லை. வங்கியில் நான் ஏதோ, பிராடு செய்வதைப் போல என்னை பேசினார்கள்.
வேறு வழியின்றி, திரும்பவும் போலீசிடம் முறையிட்டேன். அவர்கள் இனி அவர்களை அழைத்துப் பேசுவதில் பலனில்லை. சார்ஜ்சீட்டு போட்டுவிடுகிறோம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதன்படி, கூடல்புதூர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த எப்ஐஆர். முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார். கூடல்புதூர் போலீஸ் ஸ்டேஷன். 14.05.2024இல் சார்ஜ்ஷீட் போட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
இதற்கிடையிலும், நான் எவ்வளவோ முயன்றும் சரவணக்குமாரை பிடிக்க முடியவில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் நண்பர்களை அணுகி முறையிட்டதற்கு, “அதுதான் கோர்ட் கேசு வரைக்கும் போயிருச்சில்ல. இப்ப எதுக்கு பணம் தரனும். கோர்ட்ல வாங்கிக்க சொல்லுங்கன்னு” திமிராக பேசி அனுப்பிவிட்டார்.
நியோமேக்ஸில் போட்ட பணமும் போச்சு. ஏழு வருஷ நண்பனை நம்பி கொடுத்த ஆறு லட்சமும் போச்சு. கூட பழகின நட்புக்கு பெர்சனல் லோன் எடுத்துக் கொடுத்து, அதற்கு மாதம் தவணை கட்டிக்கொண்டு வருகிறேன்.” என்கிறார், தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக. சரவணக்குமாரின் கருத்தையறிய அவர் பயன்படுத்தி வந்த இரண்டு கைப்பேசி எண்களுக்கும் தொடர்புகொண்டோம். அவை இரண்டும் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
போலீசாரும் இரண்டு முறை முயற்சி எடுத்தும் பலனில்லாது போகவே, சட்டப்படி வழக்கை நீதிமன்றத்திற்கு தள்ளிவிட்டார்கள். அவர்களின் சட்டவரம்பை நாம் குறை சொல்வதற்கில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, வாய்தாவை கடந்து நவீனுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்பதற்கும் இப்போது வரையில் எந்த உத்தரவாதமும் இல்லை. பயன்படுத்தி வந்த கைப்பேசி எண்களையெல்லாம் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு சரவணக்குமாரும் தலைமறைவாகிவிட்டார். பாவம், நண்பனை நம்பி அவசரத்திற்கு செய்த உதவிக்கு பரிகாரம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்.
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தது ஒரு பக்கம் இருக்க; ”எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம்” என்ற கதையாக பலரும் பலவிதமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நவீன் ஒரு வகைமாதிரி உதாரணமாகிவிட்டார்.
லாஸ்ட் புல்லட் :
”நியோமேக்ஸுக்கு எதிராக கேஸ் போடுகிறேன் என்று சொல்லி போடாத கேசுக்கு பல பேரிடம் பணத்தை வசூலித்து பெரும் தொகை பார்த்துவிட்டார், பிரபலமான வக்கீல் ஒருவர்” என்ற தகவல் நம் கவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. அங்குசம் புலனாய்வுக்குழுவினரின் முதற்கட்ட விசாரணையில், அத்தகைய மோசடி நடந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான தகவல்களோடு விரைவில் விரிவான செய்தி உங்கள் ( angusam.com ) அங்குசம் இணையத்தில் வெளியாகும். இதுபோன்ற மோசடி தொடர்பான தகவல்களை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எங்களோடு பகிர்ந்து கொள்ள அழையுங்கள் : 9488842025
– அங்குசம் புலனாய்வுக்குழு.
வீடியோவை காண
இந்த சரவண குமார் போன்று பலர் இருப்பார்கள். அவையும் இது போன்ற கட்டுரை படிப்பவர்கள் மூலம் வெளிவரும். வழக்குரைஞர் தொழிலில் பலரும் பலவகையான மோசடி செய்கிறார்கள். அங்குசம் கட்டுரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நன்றி.