அங்குசம் பார்வையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் திரைவிமர்சனம் ! – தயாரிப்பு : ‘எஸ்.கே.புரொடக்ஷன்’ சிவகார்த்திகேயன், இணைத் தயாரிப்பு : கலையரசு, டைரக்ஷன் : பி.எஸ்.வினோத்ராஜ். நடிகர்—நடிகைகள் : சூரி, அன்னா பென் மற்றும் மதுரைப் பகுதி நடிகர்கள்-நடிகைகள். தொழில்நுட்பக் கலைஞர்கள் : ஒளிப்பதிவு: சக்திவேல், ஒலிப்பதிவு : சுரேன் ஜி., அழகிய கூத்தன், எடிட்டிங் :கணேஷ் சிவா, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : பானுப்ரியா, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா.
கொட்டுக்காளின்னா பிடிவாதக்காரின்னு அர்த்தம். தனது முறைப் பெண் மீனா [ அன்னா பென் ] ப்ளஸ் டூ படித்து முடித்ததும், கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படி தனது தங்கச்சிகள் சொல்லியும் கேட்காமல் கல்லூரிக்கு அனுப்புகிறார் பாண்டி [ சூரி ]. கல்லூரியில் படிக்கும் போது, வேறு சாதியைச் சேர்ந்த மாணவனின் காதலில் விழுந்ததால், பாண்டியைக் கல்யாணம் செய்ய மறுக்கும் மீனா, வீட்டில் யாருடனும் பேசாமல் ஊமைக் கொட்டானாக இருக்கிறார். இதனால் அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்து, பக்கத்தில் உள்ள பாலமேடு கிராமத்தில் இருக்கும் பேய் ஓட்டும் பூசாரியிடம் அழைத்துச் செல்கிறார்கள்.
மீனாவிடமிருந்து பேய் ஓடியதா? பாண்டியை மீனா கல்யாணம் செய்து கொண்டாரா? இல்லை அதே பிடிவாத குணத்துடன் கொட்டுக்காளியாகவே மீனா இருக்கிறாரா? என்பதை 102 நிமிடங்களில் மிக அருமையான, கொண்டாடக் கூடிய சினிமாவாகப் படைத்திருக்கிறார் டைரக்டர் பி.எஸ்.வினோத்ராஜ்.
மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் தான் கதைக்களம். ஒரே ஒரு குண்டு பல்பு எரியும் கிராமத்துக் கோயில் ஒன்றின் முன்பாக மீனாவின் தாய் மண்டியிட்டு வேண்டி, திருநீறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய், மகளின் நெற்றியில் பூசுவது போல் படத்தின் முதல் காட்சி ஆரம்பமாகிறது. அதன் பின் வரும் காட்சிகளெல்லாம், [ க்ளைமாக்ஸ் வரை ] தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவிற்கு நம்பிக்கை தரும் அழுத்தமான சாட்சிகள்.
ஒரு ஷேர் ஆட்டோ, மூன்று டூவீலர்கள், கிராமத்துச் சாலைகளில் போகும் சில வாகனங்களின் சத்தங்கள், ஒரு சடங்கு வீட்டில் குழாய் ரேடியோவில் ஒலிக்கும் “தாய் மாமன் சீர் சுமந்து வராண்டி” பாடல், இவை தான் படத்தின் பின்னணி இசையே தவிர, தனிப்பாடலோ, பின்னணி இசையோ இல்லை. மேற்படி ஒலிகளை ஒருங்கிணைத்த சுரேன் ஜி.யும் அழகிய கூத்தனும் படத்திற்கு பலம்.
அதே போல் ஒளிப்பதிவாளர் சக்திவேலின் அளப்பரிய உழைப்பு, அபாரமான கேமரா கோணம் இதெல்லாம் சர்வதேசத்தரம் என்றால் அது சத்தியமாக மிகை இல்லை.
டைரக்டர் வினோத்ராஜின் இப்படிப்பட்ட சர்வதேசத்தரத்திலான முயற்சிக்கு ஆகப்பெரிய சப்போர்ட்டைக் கொடுத்து, தமிழ் சினிமாவில் தனது தரத்தை, இருப்பை மேலும் மேலும் உயர்த்திவிட்டார் சூரி. படம் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கழித்துத் தான், அன்னா பென்னை பார்க்கிறார் சூரி. ஷேர் ஆட்டோவில் உர்ரென்று அமர்ந்திருக்கும் அன்னா பென்னை சூரி பார்க்கும் அந்தக் காட்சியிலும் சரி, ஒரு காதல் பாட்டை, அன்னா பென் முணுமுணுத்ததும் ஆவேசமாகி, அனைவரையும் அடித்து வெளுக்கும் அந்தக் காட்சியிலும் சரி, குலதெய்வத்தைக் கும்பிட்ட பின் எல்லோரும் வந்த பின், அன்னா பென் மட்டும் அங்கே நிற்பதைப் பார்த்து நிற்கும் காட்சியிலும் சரி, சூரி…. சூப்பர் பெர்ஃபாமென்ஸ் சூரி என வாய்விட்டுச் சொல்ல வைத்துவிட்டார்.
அதே போல் படத்தில் அன்னா பென்னுக்கு, க்ளைமாக்சுக்கு சில நிமிடங்கள் முன்பு இரண்டே வார்த்தைகளைத் தான் வசனமாக கொடுத்திருக்கிறார் டைரக்டர். மற்ற சீன்கள் எல்லாத்திலுமே முகபாவனைகளிலேயே கொட்டுக்காளியாக வாழ்ந்திருக்கிறார் அன்னா பென்.
சூரியின் அப்பாவாக வரும் அந்த மீசைக்காரர், தங்கச்சிகளாக வரும் அந்த இரண்டு பெண்கள், சூரியின் நண்பர்கள், ஷேர் ஆட்டோ டிரைவர், பேய் ஓட்டும் பூசாரி, ஜல்லிகட்டுக் காளையை ஆட்டுக்குட்டி போல கூட்டிச் செல்லும் கிராமத்து சிறுமி என எல்லா கதாபாத்திரங்களையும் நமக்குள் உலவவிட்டிருப்பதில் தான் வினோத்ராஜின் உண்மையான உழைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.
மலையாள சினிமாவைப் பாரு.. எப்படியாப்பட்ட டைரக்டர்கள் இருக்காய்ங்க, எப்படியாங்கொத்த படம் எடுக்குறாய்ங்கன்னு நொட்டை சொல்லிக் கொண்டே இருக்கும் நம்ம ஊர் சினிமா மேதாவிகளுக்கு ‘கொட்டுக்காளி’ என்ற இந்த படைப்பு மூலம் பதில் சொல்லியிருக்கிறார் டைரக்டர் பி.எஸ்.வினோத்ராஜ்.
இந்த படைப்பைத் தயாரித்து சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று இங்கே வெகுஜனங்களிடமும் கொண்டு சேர்த்து, தமிழ் சினிமாவின் தரத்தையும் தளத்தையும் உயர்த்திய வணிக சினிமாவின் கதாநாயகன் சிவகார்த்திகேயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர் சிவகார்த்திகேயன்.
-மதுரை மாறன்