முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்த டிவி சேனல் – மூன்றாண்டு கால சட்ட போராட்டம் – மீண்டும் பணியில் சேர்ந்த படத்தொகுப்பாளர் !
முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் – மூன்றாண்டு கால போராட்டம் – மீண்டும் பணியில் சேர்ந்த படத்தொகுப்பாளர் !
புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட படத்தொகுப்பாளர் ஒருவருக்கு ஆதரவாக உறுதியான சட்டப்போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறது, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்.
இது தொடர்பாக, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், ”புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவீன்குமார் படத்தொகுப்பாளராக (Visual Editor) பணியில் சேர்ந்தார். சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய நவீன்குமாரை கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய தலைமுறை நிர்வாகம் திடீரென்று பணிநீக்கம் செய்தது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியிருந்த அந்த சமயத்தில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், எந்தவித காரணத்தையும் கூறாமல், நிவாரணமும் வழங்காமல் நவீன்குமாரை புதிய தலைமுறை நிர்வாகம் சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, நவீன்குமார் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தை அணுகி புகார் அளித்தார். சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணையம் நிர்வாகத்தை பேச்சவார்த்தைக்கு அழைத்தது. அதில் கலந்துகொண்ட நிர்வாகம், நவீன்குமாருக்கு மீண்டும் பணி வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, நவீன்குமார் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றவில்லை என்றும், புதிய தலைமுறை இதழில் பணியாற்றினார் என்றும் நிர்வாகத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
புதிய தலைமுறை இதழ் மூடப்பட்டதால் நவீன்குமார் பணி இழந்ததாகவும் உண்மைக்குப் புறம்பான வாதம் முன்வைக்கப்பட்டது. நமது தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் திரு. ரவி அவர்கள், நிர்வாகத் தரப்பில் வைக்கப்பட்ட இந்த வாதத்தை ஆதாரத்துடன் முறியடித்தார்.
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், 13.08.24 அன்று 2வது கூடுதல் தொழிலாளர் நீதிபதி சஞ்சய் பாபா இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, படத்தொகுப்பாளர் நவீன்குமாரை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்துள்ளதை நீதிபதி உறுதி செய்துள்ளார்.
ஆகவே, அவருக்கு பணி தொடர்ச்சியுடன், மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, நவீன்குமாருக்கு இதுநாள் வரை வழங்க வேண்டிய மொத்த சம்பளத்தில் (சுமார் 3.5 ஆண்டுகள்) 50 சதவீதத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின்பேரில் மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்றுள்ள நவீன்குமாருக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்திற்காக, தொழிலாளர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றியை பெற்றுத்தந்த வழக்கறிஞர்கள் திரு.ரவி மற்றும் திரு.இளங்கோவுக்கு தொழிலாளர் சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏற்கனவே, காவேரி தொலைக்காட்சி, புதிய தலைமுறை, புதுயுகம், விகடன், மாலை முரசு, ஜெயா தொலைக்காட்சி, வேந்தர் நிர்வாகங்களின் பணிநீக்கம் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் நடத்திய களப் போராட்டம் மற்றும் சட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியின் வரிசையில் தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி படத்தொகுப்பாளர் நவீன்குமாரின் வெற்றியும் இணைந்துள்ளது.
சமீபத்தில், வேந்தர் தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், நவீன்குமாருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, பத்திரிகை, ஊடக தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக சங்கமாக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கு ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் உறுதியாக நம்புகிறது.
இதேபோல், நியூஸ் 18 தமிழ்நாடு, விகடன் ஆகிய நிறுவனங்களின் அநியாய பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்திலும், இந்திய பிரஸ் கவுன்சிலிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளிலும் தொழிலாளர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
”பாதிக்கப்பட்ட நவீன்குமாரும்கூட, வேலைநீக்கம் செய்யப்பட்ட உடனேயே எங்களை அணுகிவிடவில்லை. ஃபிரீலேன்ஸாக கிடைக்கும் வேலையை பார்த்துக்கொண்டே இரண்டு ஆண்டுகளை கடத்திவிட்டார். வேந்தன் தொலைக்காட்சியிலும் இதேபோன்று சட்டவிரோத பணிநீக்கத்திற்கு எதிராக எங்களது சங்கம் உறுதியான போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கண்டிருந்தது.
அந்த செய்தியை அறிந்த பிறகே, அவர் எங்களை அணுகினார். அதன்பிறகுதான் நாங்கள் சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டோம். தற்போது மீண்டும் பணி வாய்ப்பை பெற்றிருக்கிறார்.” என்கிறார், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மு.அசீப்
– அங்குசம் செய்திப்பிரிவு.
மாற்றத்திற்கானஊடகவியலாளர்கள்சங்கத்திற்குபாராட்டுகள்புரட்சிபணிதொடரட்டும்