நியோமேக்ஸ் மோசடி ஜூன்-05 க்குள் புகார் கொடுக்காவிட்டால் பணம் கிடைக்காதா ?
நியோமேக்ஸ் விவகாரம் : நீதிமன்றம் விதித்த கெடு ஜூன்-05 க்குள் புகார் கொடுக்காவிட்டால் பணம் கிடைக்காதா ?நியோமேக்ஸ் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, முதற்கட்டமாக 5ஏ விதியின்படி செட்டில்மெண்ட் செய்வது தொடர்பாக ஒரு முடிவை எட்டும் விதமாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவிக்க ஜூன்-05 அன்று கெடு விதித்திருந்தது.
அது தொடர்பான பத்திரிக்கையிலும் அறிவிப்பு வெளியானது. (அது யாருடைய கண்ணிலும் பட்டு விடாதபடி, வரி விளம்பரமாகவே வெளியானது என்பது தனிக்கதை) ஆனாலும், புகார் கொடுப்பது இலாபமா? புகார் கொடுக்காமல் காத்திருப்பது இலாபமா? என்ற ஊசலாட்டம் பெரும்பாலோனரிடம் நிலவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து விளக்கமளித்துவரும் சிவகாசி ராமமூர்த்தி தனது தரப்பு வாதங்களை முன்வைத்திருக்கிறார். அதில், “ மோசடி நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தவர்களுக்கும் மற்றும் புகார் கொடுக்காதவர்களுக்கும் ஏற்பட்டுள்ள மனக் கஷ்டங்களைப் பற்றிய விவரங்களை காண்போம். தினமும் நிறைய பேர் கைப் பேசி மூலம் கேட்பதால் அனைவருக்கும் பதில் கூற இயலாத காரணத்தால் இந்த பதிவு.
1. புகார் கொடுத்தவர்களுக்கு அரசு வழி காட்டு மதிப்பில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நிலம் அல்லது செட்டில்மென்ட் வரை ஊக்கத் தொகையுடன் பணம் என்ற முறையில் செட்டில்மென்ட் வேண்டும் என உரிய ஆவணங்களை ஆதாரப் பூர்வமாக காட்டி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இருக்கிறது. அதனால் சட்ட திட்டங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படும். நீதி மன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி நியாயமான செட்டில்மென்ட் பெற்றுத்தர பலர் முயற்சி செய்வார்கள்.
புகார் கொடுக்காதவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக நிறுவனத்திடமிருந்து செட்டில்மென்ட் எவ்வாறு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா? வியாபார நோக்கில் அவர்கள் கொடுக்கும் விலைக்கு அவர்கள் கொடுக்கும் இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். பணமாக செட்டில்மென்ட் பெற இயலுமா? ஊக்கத்தொகை வாங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள ஆவணங்களில் அது சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளதா? மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தானே அவர்களின் ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் இருப்பதனால் வழக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து விடுபடுவதற்கு தானே மீண்டும் இந்த நூதன முறையில் நிலம் விற்பனை ஜாலங்கள். விரைவில் பாண்டுகளை ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி பெற்றுக் கொண்டு அதன் பின் அவர்களுக்கு இயன்ற குற்றச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது பல ஏஜெண்டுகள் மற்றும் நிர்வாகிகள் எப்படி பணம் கேட்பவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்ற விசயங்களை கூர்ந்து கவனித்து செயல்படவும். (புகார் கொடுத்தவர்களை மிரட்ட இயலாது). 14/07/2024 வரை சற்று அனுசரித்து போவார்கள் அதன் பின் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதை அறிய முடியும்.
முக்கிய இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக போராட உங்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கான கூட்டம் தான் இந்த 14/07/2024.
2. புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க காலதாமதம் ஆகும். அது பல வருடங்கள் ஆகலாம் என்று தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். சுயநலத்திற்காக உள் நோக்கத்துடன் மோசடி நிறுவனத்தினரால் செயல்படுத்தப்படும் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு புகார் கொடுத்தவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப் பட்டால் விரைவில் நல்ல தீர்வு காண இயலும். அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. நிச்சயம் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை சம்பந்தப்பட்டவர்களிடம் உள்ளது.
புகார் கொடுக்காதவர்களுக்கு எழுத்து பூர்வமாக செட்டில்மென்ட் செய்து முடிக்கும் விவரங்கள் அடங்கிய அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி மொழியாக கொடுக்கப்பட்டுள்ளதா?
எதை வைத்து மோசடி மன்னர்களின் கைக் கூலிகள் சொல்வதை நம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுவரை அவர்கள் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் செயல் எதையாவது செய்திருக்கிறார்களா? புகார்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகத்தான் புகார் கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள். அதில் உள் நோக்கம் மற்றும் சுய நலம் உள்ளது. (புகார் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக செட்டில்மென்ட் செய்து கொடுக்க வேண்டும் அதற்கு போதுமான சொத்துக்களை அவர்கள் மறைத்து வைத்திருக்கும் தரமான சொத்துக்கள் உள்பட அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு முறையாக செட்டில்மென்ட் நீதி மன்ற உத்தரவு படி அந்த கால அவகாசத்திற்குள் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நீதி மன்ற அவமதிப்பு பாயும் அதன் பின் சிறிய காலஅளவை நீடித்து செட்டில்மென்டிற்கு ஏற்பாடு செய்வார்கள்). நல்ல சொத்துக்கள் பறிமுதலாகிவிடக் கூடாது அதை வைத்து ராஜ வாழ்க்கை வாழ திட்டம் தீட்டி புகார் கொடுக்காதவர்களை திசை திரும்புகிறார்கள்.
3. புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் செய்யப்படும் பொழுது வரி மற்றும் வேறு பிடித்தங்கள் செய்யப்படும் எனக் கூறுவது எல்லாம் திசை திருப்பும் செயல். வட்டியாக கொடுத்தார்கள் என அனைவரும் ஒன்றாக உள்ளதைச் சொல்லி நிதி நிறுவனம் போல் செயல்பட்டதை நிரூபித்து விட்டால் அப்பொழுது இவர்கள் சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க இயலாது. அதற்காக அவர்களுக்கு சாதகமான விசயங்களைப் பரப்பி மக்களை திசை திருப்புகிறார்கள்.
4. முக்கிய இயக்குனர்கள் உள்பட பெரும்பாலோர் விதி மீறல்களை செய்துள்ளனர் என்று நீதி மன்றம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை விரைவில் ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது நடந்து விட்டால் அதன் பின் புகார் கொடுக்காதவர்களுக்கு யார் செட்டில்மென்ட் செய்து கொடுப்பார்கள்? (புகார் கொடுத்தவர்களுக்கு சட்டப்படி முறையாக செட்டில்மென்ட் நடக்கும் அதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்).
5. புகார் கொடுக்காதவர்களுக்குமோசடிக் காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட நிலம் எனில் அதில் அனைத்தும் மோசடி தானே இருக்கும். பத்திரப்பதிவு செலவு யாருடையது?. அவர்கள் கொடுக்க இருக்கும் தனியார் நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால் அது எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
6. சில ஆயிரம் புகார் கொடுத்தவர்களுக்கே செட்டில்மென்ட் செய்ய போதுமான சொத்துக்களை இதுவரை கைப்பற்றப்பட வில்லை. நிறுவனம் தானாக கொடுக்கும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். முடக்கப்பட்ட பணம் புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய பயண்படுத்தப்படும். சொத்துக்களை கொடுக்காமல் மற்றும் செட்டில்மென்ட்டிற்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும் குற்றம்.
சொத்துக்களை மறைத்தாலும் மற்றும் விற்றாலும் குற்றம் என்ற நிலை இருக்கும் பொழுது புகார் கொடுக்காதவர்களுக்கு எங்கிருந்து சொத்துக்கள் வரும். சுய நலத்திற்காக முதலீட்டுத் பணத்தை சொந்தம் கொண்டாடுபவர்கள் காவல்துறை மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கைகளை மீறி மறைமுகமாக அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலை இருக்கும் பொழுது புகார் கொடுக்காதவர்களுக்கு உள் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் மோசடி செய்து கொண்டிருப்பவர்கள் தங்களிடம் உள்ள சொத்துக்களை கொடுப்பார்களா?.
15 வருடம் குறுக்கு வழியில் சம்பாதித்த சொத்துக்கள் பெரும்பாலானவற்றை மோசடி செய்து சிக்கிக் கொண்டார்கள். இனிமேல் முறையாக சம்பாதித்து பல லட்சம் புகார் கொடுக்காதவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுக்க இயலுமா? அவர்கள் கூறுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?
7. ஏஜெண்டுகள் நூதன முறையில் புதிய வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள் அவர்கள் சம்பாத்தியத்தை இதுவரை செட்டில்மென்ட்டிற்கு பயண்படுத்தப்பட்டுள்ளதா? அவர்களின் சுயநலத்திற்காக புகார் கொடுக்காதவர்களை வஞ்சிக்கிறார்கள் என்பதை புரியாதவர்களுக்கு அதைப் பற்றிய விசயம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு புரியும் படி எடுத்துரைத்தால் தான் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் துயரத்தில் இருந்து மீட்க முடியும்.
8. சில ஆயிரம் புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய கால தாமதம் ஆகும். ஆனால், பல லட்சம் புகார் கொடுக்காதவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் முழு செட்டில்மென்ட் செய்து கொடுத்து விடுவோம் என மோசடி நிறுவனம் கூறுவது சாத்தியமா? புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுத்து முடிக்காமல் புகார் கொடுக்காதவர்களுக்கு கொடுக்க இயலுமா? மறைமுகமாக அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பினாமி பெயரில் இருந்த சொத்துக்களை ஏதோ ஒரு சிலருக்கு மாற்று வழியில் செட்டில்மென்ட் செய்திருக்கிறார்கள் அது சட்ட சிக்கலுக்கு ஆளாக்கப்படும்.
9. தாமதமாக புகார் கொடுத்தவர்கள், மேல் குறிப்பிட்ட விசயங்களை புரிந்து கொண்ட பின் எடுத்த சரியான முடிவு தான் தங்களின் புகாரை பதிவு செய்தது. புகார் கொடுத்தால் அதை பெற்றுக் கொண்டதற்கான ஆவணம் தறுவதில்லை மற்றும் அலைய வைத்து விடுவார்கள்.
செட்டில்மென்ட் டிற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகும். வட்டி கிடைக்காது. கொடுத்த வட்டி மற்றும் கமிசன் தொகையை கழித்துத் தான் கொடுப்பார்கள். இறுதியில் அவர் அவர்கள் தனியாக வழக்கறிஞர்களை நியமித்து தான் செட்டில்மென்ட் பெற்றுக்கொள்ள இயலும். முதலீட்டிற்கான வருமானம் முறையானது தானா என நிரூபிக்க வேண்டும், வரி பிடித்தம் போக ஒன்றும் பெரிதாக கிடைக்காது போன்ற தவறான கருத்துக்களை அப்பாவி மக்களிடம் கூறி அவர்களை நம்பவைத்து விடுகிறார்கள் மோசடி மன்னர்களின் கைக் கூலிகள். விழிப்புணர்வு இல்லாதவர்கள் பெரும்பாலும் புகார் கொடுக்க வில்லை என்பது கவலைக்குரிய விசயம். விவரம் அறியாத ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்.
10. ஜுலை 5 ஆம் தேதிக்கு பின் புகார் கொடுப்பவர்களுக்கு செட்டில்மென்ட் கிடைப்பதில் கால தாமதம் ஆகக் கூடும். இருப்பினும் அவர்களுக்கும் முறையாக செட்டில்மென்ட் செய்து கொடுக்காமல் மோசடிக் காரர்கள் தப்பித்து விட இயலாது. இப்பொழுது பல குழுக்கள் போராடுவது போல் அப்பொழுது போராட முன் வருபவர்கள் இருப்பார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். செட்டில்மென்ட் டிற்கு போதுமான சொத்துக்களை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்படலாம். நிர்வாகிகளின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.
பிற்சேர்க்கை
என்னுடைய பதிவில் ஜுலை 5 ஆம் தேதிக்குப் பின் புகார் வாங்க மாட்டார்கள் என்று கூறவில்லை. ஜுலை 5 ஆம் தேதிக்கு பின் வரும் புகார்களை இரண்டாவதாக செய்யவிருக்கும் செட்டில்மென்ட் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். முதல் பட்டியலில் உள்ளவர்களுக்கே செட்டில்மென்ட் செய்து முடிக்க (சொத்துக்களை கண்டறிந்து அதற்குப் பின் செய்ய வேண்டிய செயல்களில்) பெரும் சிரமம் இருக்கும் பொழுது அதை முடித்த பின் இரண்டாவது பட்டியலில் உள்ளவர்களுக்கு என்ன சொத்துக்கள் மிஞ்சும் என்று தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தரமான சொத்துக்களை பைனான்சியர்களிடம் கடன் வாங்கியது போல் ஆவணங்களைக் காட்டி தங்கள் சுயநலத்திற்காக முக்கிய இயக்குனர்கள் தங்களின் பினாமிகள் மூலமாக விற்று வருகிறார்கள் என்பது பெரும்பாலோருக்கு தெரிந்த விசயம்.. அதனால் எஞ்சிய சில சொத்துக்களையும் பல்வேறு நூதன முறையில் விற்ற பின் இரண்டாவது பட்டியலில் உள்ளவர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் இருக்காது.
அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள். புகார் கொடுக்க தாமதம் ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தது போல் ஆகி விடும் என எச்சரிக்கிறோம். கண்டிப்பாக புகார் கொடுக்காத பல லட்சம் பேர்களில் பெரும்பாலோருக்கு செட்டில்மென்ட் கிடைக்கப் போவதில்லை. புகார் கொடுக்காத அனைவருக்கும் செட்டில்மென்ட் நிறுவனம் மூலமாக கிடைக்கும் என்பதற்கு சாத்தியமே இல்லை. இதுவரை அதற்கான முழு விவரங்களை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.
சாத்தியக் கூறுகள் பற்றிய விரிவான ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. சிலருக்கு கிடைக்கும் அதற்கும் கால தாமதம் ஆகும். ஆனால் அது திருப்திகரமானதாக இருக்காது. ஏனோ தானோ என்று அதிக விலை நிர்ணயம் செய்து ஒன்றுக்கு கால் கூட தேராத செட்டில்மென்ட் ஆகத் தான் இருக்கும்
.
புகார் கொடுக்காதவர்களுக்கு நிறுவனம் மூலம் முறையான செட்டில்மென்ட் முதலில் கிடைத்து விடும் என்பதெல்லாம் கட்டுக்கதை அதை நம்பி மோசம் போய் விட வேண்டாம். பெரும்பாலான புகார் கொடுக்காதவர்களை கண்டிப்பாக ஏமாற்றி விடுவார்கள் அதன் பின் புகார் கொடுத்து எப்பொழுது செட்டில்மென்ட் கிடைப்பது. பல லட்சம் பேர் ஏமாந்த பின் புகார் கொடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள் என்பதை மோசடி மன்னர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் பல வகைகளில் சிரமம் ஏற்படும். மோசடி மன்னர்களின் கைக் கூலிகள் சொல்வதை நம்ப வேண்டாம். நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
Really true
மகிழ்ச்சி சார்..