அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் வழக்கில் எதிர்பாராத திருப்பம் ! ஏற்கெனவே விசாரித்த நீதிபதிக்கே வழக்கு மாற்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நியோமேக்ஸ் வழக்கில் எதிர்பாராத திருப்பம் ! ஏற்கெனவே விசாரித்த நீதிபதிக்கே வழக்கு மாற்றம் !

நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில், பெருமளவிலான முதலீட்டாளர்கள் தொடர்புடைய விவகாரம் என்பதாலும், தொடர் கண்காணிப்பும் வழிகாட்டுதலும் அவசியமானது என்பதாலும், ஏற்கெனவே இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பாகவே தொடர வேண்டும் என்பதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவித்திருப்பது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முன்னணி இயக்குநர்களுக்கு வழங்கிய நிபந்தனை பிணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்த நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி கடந்த அக்-19 அன்று சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். மிக முக்கியமாக, நியோமேக்ஸ் நிறுவனமும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் சமர்ப்பித்திருந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் குழப்பமும் சர்ச்சையும் எழுந்த நிலையில், இதுவரை புகார் அளிக்காதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியும் அதில் எழும் ஆட்சேபனைகளையும் பரிசீலிக்க அவகாசம் வழங்கியும் விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதன்படி, நவ-05 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு; நவ-15 ஆம் தேதி வரையில் புகார் அளிக்க அவகாசம் வழங்கி; நவ-16 முதல் டிச-05 வரையில் அந்த புகார் மனுக்களை பரிசீலனை செய்து; டிச-06 அன்று EOW போலீசாரின் இணையதளத்தில் வெளியிட்டு; அதில் எழும் ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாக பெற்று; டிச-16 அன்று நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; டிச-18 அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்பதாக அறிவித்திருந்தார்.

வீடியோ லிங்

இந்த வழிகாட்டுதலின்படி டிச-06 அன்று வெளியாகியிருக்க வேண்டிய புகார்தாரர்களின் விவரம் ஒரு நாள் தாமதமாக டிச-07 அன்றுதான் வெளியானது. அடுத்து, அவ்வாறு முதலில் வெளியான அறிவிப்பில் ஒரே முதலீட்டாளர்களின் அனைத்து பாண்டுகளும் இடம்பெறாமல் ஒரே ஒரு பாண்டு மட்டுமே பார்க்கும் வகையில் இருந்தது. பின்னர் இந்த தொழில்நுட்ப சிக்கல் சரி செய்யப்பட்டு, டிச-09 அன்றுதான் முதலீட்டாளர்களின் முழுமையான விவரங்களும் அறியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதில் உள்ள ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பதால் பலரும் மதுரைக்கு நேரில் சென்று பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் பதிவு செய்தனர். மதுரைக்கு நேரில் செல்ல முடியாத பலர், தங்களது ஆட்சேபனைகளை தபாலில் அனுப்பியிருந்தனர்.

அவ்வாறு அனுப்பபட்ட தபால்கள் பெரும்பாலும் திருப்பியனுப்பப்பட்டிருக்கின்றன. அதாவது, நீதிமன்ற உத்தரவின்படி டிச-10 ஆம் தேதி வரையில்தான் ஆட்சேபணையை பெறுவதற்கான கால அவகாசம் என்பதை கணக்கில் எடுத்து, டிச-10 ஆம் தேதிக்கு பிறகு வந்த தபால்களை திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பலரிடம் பதிவு செய்யப்படாத பத்திரங்களில் எழுதி வாங்கி பணம் பெற்றிருக்கிறது, நியோமேக்ஸ் குரூப். வெறும் நூறு ரூபாய் பத்திரத்தில், மூன்று ஆண்டுகள் ஆறு ஆண்டுகள் என்று அவர்கள் இஷ்டத்திற்கு பத்திரங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

நடிகை சன்னிலியோ - படப்பிடிப்பு தளத்தில் நியோமேக்ஸ் வீரசக்தி
நடிகை சன்னிலியோ – படப்பிடிப்பு தளத்தில் நியோமேக்ஸ் வீரசக்தி

அதுவும் அதில் முதலீட்டுத்தொகை குறித்த தெளிவான விவரங்கள் இல்லாமல், வெறுமனே மூன்றாண்டு முடிவில், ஆறாண்டு முடிவில் திருப்பித்தர வேண்டிய தொகை என்பதாகவே பதிவு செய்திருக்கிறார்கள். இதுபோன்ற பத்திரங்களை EOW போலீசார் ஏற்க மறுத்துவிட்டதும், முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் இத்தகையை அணுகுமுறை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மிகமிக குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரம் புகார்களையும் பரிசீலித்து அவற்றை ஆவணப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை நாம் இங்கே குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஆக மிகக்குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால் டி.எஸ்.பி. மனிஷாவும் தனிப்பட்ட முறையில் நாள் ஒன்றுக்கு 50-க்கும் குறைவில்லாத மனுக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார் என்ற தகவலும் இந்த வழக்கில் EOW போலீசார் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதேசமயம், நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களையும் மீறி, புகார் அளிக்க முன்வருவதே பெரிய விசயமாக இருக்கும் நிலையில், வந்த புகார்களையும் திருப்பி அனுப்புவது நியாயமா ? டிச-09 ஆம் தேதிதான் முழுமையான விவரங்களே இணையத்தில் வெளியான நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின்படி டிச-10 ஆம் தேதிதான் கெடு என்று கறார் காட்டுவதும் சரியா? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் எழுப்புகிறார்கள்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்

இந்த பின்னணியில்தான், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், “ 23,750 பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தொடர்புடைய இந்த வழக்கில் தொடர் கண்காணிப்பும் அதனை தொடர்ந்த அவசியமான வழிகாட்டுதல்களும் அவசியம் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிரந்தர நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் மாற்றம் செய்வதுதான் பொருத்தமானது.” என்பதாக கருத்தை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும், முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களுள் சிலரும், இந்த வழக்குகளை நீதிபதி பரதசக்ரவர்த்தியே தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று ஏற்கெனவே நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை விடுத்திருக்கும் தகவலை நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

டிச-19 அன்று மதுரைக்கு வருகை தரவிருக்கும் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இந்த விசயத்தை எடுத்துச் சென்று உரிய வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளுமாறும்; வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிப்பது மற்றும் நீதிபதி பரதசக்ரவர்த்தியே தொடர்ந்து விசாரிப்பது என்பது போன்ற கோரிக்கைகளை பதிவாளரிடம் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளும்படியும் அறிவுறுத்தி விசாரணையை நிறைவு செய்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்.

நிறைவாக, இணையத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கான அவகாசமும் மீண்டும் ஒரு வாய்ப்பும் வழங்கப்படுமா? பாண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட நிலையில், பத்திரங்கள் மற்றும் ப்ரோ நோட்டுகள் மற்றும் வெள்ளை பேப்பரில் எழுதி கொடுத்த உத்திரவாத பத்திரங்களை முதலீட்டாளர்களின் நிலை என்ன? அவர்களது புகாரை ஏற்பார்களா? இது EOW போலீசார் தரப்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விவகாரங்களாக அமைந்திருக்கின்றன.

நியோமேக்ஸ் எம்.டி. பாலா
நியோமேக்ஸ் எம்.டி. பாலா

அடுத்து, ஏற்கெனவே நீதிபதி பரதசக்ரவர்த்தியின் விசாரணைக்கு முன்பாக இருந்த வழக்குகள் மட்டுமே, மீண்டும் அவர் வசம் செல்கிறதா? இல்லை, நியோமேக்ஸ் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அவரே விசாரிப்பாரா? ஒருவேளை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிரந்தர நீதிபதி ஒருவரிடத்தில்தான் இந்த வழக்குகள் மாற்றம் செய்யப்படுகின்றன என்றால், அவரிடம் ஏற்கெனவே நீதிபதி பரதசக்ரவர்த்தியின் விசாரணைக்கு முன்பாக இருந்த வழக்குகள் மட்டுமே மாற்றம் செய்யப்படுமா, இல்லை அனைத்து வழக்குகளும் மாற்றம் செய்யப்படுமா? நீதிபதி பரதசக்ரவர்த்தி தான் தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிப்பார் என்று முடிவானால், மொத்த வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுமா? இல்லை, இங்கிருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் முறையில் வழக்கு தொடரும் வகையில் மாற்றம் பெறுமா? என்பதெல்லாம் நீதிமன்றத்தின் தரப்பில் தெளிவுபடுத்த வேண்டிய விவகாரங்களாக நீடிக்கின்றன. எப்படியும், இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

எதுவாயினும், எந்தவிதமான இழுத்தடிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், நியோமேக்ஸ் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதியே தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பித்து வழக்கை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும்.

நியோமேக்ஸ் கூட்டம்
நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் கூட்டம்

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுள் கணிசமானோர் ஓய்வூதியதாரர்கள்; மூத்தகுடிமக்கள்; பல்வேறு உடல் உபாதைகளுடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். நியோமேக்ஸின் வசிய பேச்சில் மயங்கி, வாழ்நாள் சேமிப்பு அத்தனையையும் வழித்து துடைத்து எடுத்து அவர்களிடம் பறிகொடுத்து பரிதவித்து நிற்பவர்கள். நேற்றுவரை ஏதோ ஒரு உயர்பதவியில், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் வாழ்ந்து வந்தவர்கள் பலர். ”எங்களையெல்லாம் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது நியோமேக்ஸ்” என்று அவர்கள் மனம் நொந்து பேசும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் சொந்தக்கதைகள் ஒவ்வொன்றும், வலி மிகுந்தவை; மனதை ரணமாக்குபவை. அவற்றை செவிமடுத்து கேட்பதற்கே நிச்சயம் மனவலிமையை நிபந்தனையாக்குபவை. கேட்ட மாத்திரத்தில் கண்களில் நீர் கசிந்துருக செய்பவை. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் தரப்பிலிருந்து, அவர்கள் அன்றாடம் அனுபவித்துவரும் வேதனைகளிலிருந்து, குறைந்தபட்சம் அவர்கள் இழந்த தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகித்தையாவது முதற்கட்ட நிவாரணமாக வழங்க நீதிமன்றமும் EOW போலீசாரும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த வழக்கை அவதானித்து வரும் அங்குசத்தின் எதிர்பார்ப்புமாக அமைந்திருக்கிறது.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.