அங்குசம் பார்வையில் ‘நேசிப்பாயா’
அங்குசம் பார்வையில் ‘நேசிப்பாயா’
தயாரிப்பு : ‘எக்ஸ்பி’ ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ சேவியர் பிரிட்டோ. இணைத் தயாரிப்பு : சினேகா பிரிட்டோ. டைரக்ஷன் : விஷ்ணுவர்த்தன். நடிகர்—நடிகைகள் : ஆகாஷ் முரளி [ அறிமுகம் ], அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு சுந்தர், பிரபு, ராஜா, ஷிவ் பண்டிட், கல்கி கோச்சலின், ஜார்ஜ் கொரா. ஒளிப்பதிவு : கேமரான் எரிக் பிரிஸன், இசை : யுவன்சங்கர் ராஜா, எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத், காஸ்ட்யூம் டிசைனர் ; அனுவர்த்தன். தமிழ்நாடு ரிலீஸ்: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ராகுல். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால குலவழக்கப்படி, ஹீரோ ஆகாஷ் முரளி, ஹீரோயின் அதிதி ஷங்கரை முதன்முதலில் பார்த்ததுமே புரபோஸ் பண்ணுகிறார். முதலில் ரிஜெக்ட் பண்ணும் ஹீரோயின், சிலபல சீன்களுக்குப் பிறகு, ஹீரோவின் லவ்வை அக்செப்ட் பண்ணுகிறார். கம்பெனியின் புராஜெக்ட் விஷயமாக போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்கிறார் அதிதி. போவதற்கு முன்னால் லவ்வுக்கு பிரேக்கப்பும் சொல்லிட்டுப் போறார். அங்கே ஒரு கொலைக் கேஸில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார்.

இங்கே ஹீரோ ஆகாஷ் முரளி, துடிக்கிறார். காரித்துப்பினாலும் கழுவி ஊத்தினாலும் காதலியாச்சே என்ற ஜென் மனநிலையுடன் போர்ச்சுக்கல் நாட்டுக்குப் போகிறார். அதிதி ஷங்கர் நிச்சயம் கொலை செய்திருக்கமாட்டார், கொலைக் கேஸில் சிக்க வைக்கப்பட்டிருப்பார். அதனால் ஹீரோ ஆகாஷ் முரளி நிச்சயம் அவரைக் காப்பாற்றிவிடுவார், க்ளைமாக்ஸில் இருவரும் ஹேப்பியாகிவிடுவார்கள் என்ற மாறாத குலவழக்கப்படியும் முடிகிறது இந்த ‘நேசிப்பாயா’.
அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளியின் தோற்றமும் நடிப்பும் எந்தக் குறையுமில்லாமல் நன்றாகவே இருக்கிறது. தனது காதல் கணவருக்காக, ஒரு காதல் கதையை விஷ்ணுவர்த்தனை வைத்து தயார் பண்ணி, அதை போர்ச்சுக்கல் நாடு வரை போய் ஷூட்டிங் நடத்திய இணைத் தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோவின் தன்னம்பிக்கையும் தைரியமும் பாராட்டுக்குரியது தான். ஆனா எனக்கென்ன போச்சுன்னு திரைக்கதை போய்க் கொண்டிருப்பது தான் பரிதாபமாக இருக்கிறது.
படத்தில் ரொம்பவே நேசிக்க வைப்பவர் என்றால் அதிதி ஷங்கர் தான். “எப்பப்பாரு கால்ல கட்டுன கல்லு மாதிரி என்னோடவே இருக்க” என ஆகாஷ்முரளியை பிரேக்கப் பண்ணும் சீனிலும் போர்ச்சுகல் ஜெயிலில் பெண் தாதாவிடம் [ எல்லா நாட்டு ஜெயிலும் ஒரே மாதிரி தான் போல ] அடிஉதைபட்ட பின் தனது வக்கீல் கல்கி கோச்சலினிடம் உயிர் வலியுடன் பேசும் சீனிலும் மனதை ஆக்கிரமிக்கிறார் அதிதி ஷங்கர். இவருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிய அனுவர்த்தனை ஸ்பெஷலாக பாராட்டலாம்.
போர்ச்சுக்கல் நாட்டுத் தொழிலதிபராக சரத்குமார், அவரது மனைவியாக குஷ்பு சுந்தர், சரத்தின் நண்பனாக ராஜா, போர்ச்சுக்கல் போலீஸ் அதிகாரியாக பிரபு[ அப்படித்தான்னு நினைக்கிறோம் ], சரத்தின் மகனாக ஜார்ஜ் கொரா, லோக்கல் தாதாவாக ஷிவ் பண்டிட் என சில குறிப்பிட்ட கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் அதிதியின் வக்கீலாக வரும் கல்கி கோச்சலின் தான மனதில் நிற்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவின் பாடல் இசையும் பின்னணி இசையும் துள்ளல் ரகம். போர்ச்சுக்கல் அழகை அள்ளிவந்திருக்கிறது கேமரான் எரிக் பிரிஸன்.
ரசிக்க மனமிருந்தால்… இந்த ‘நேசிப்பாயா’ வை நேசிக்கலாம். 40/100
மதுரை மாறன்