திருச்சி காவிரி கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு !
திருச்சி காவிரி கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு!
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்திருக்கும் நிலையில், இந்த குவாரி தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) வெளியிடப்பட்டிருக்கிறது.
132 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழில் வழங்கினால் மட்டுமே அதனை படித்து புரிந்து கொண்டு பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும். மேற்படி அறிக்கையை தமிழில் வழங்கும் வரையில் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர்.
கட்டுமானத்தேவைக்கு மணல் தட்டுப்பாடு என்ற காரணத்தைக்கூறி, சட்டவிரோதமான முறையில் மணல் குவாரிகளைத் திறப்பதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவை அதிகரிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள அணைகளை முறையாக தூர்வாரினாலோ போதுமானது என்ற மாற்றையும் முன்வைத்திருக்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ”45 ஆறுகள், ஆண்டு முழுக்க தண்ணீரோடு ஓடும் கேரளாவில் கடந்த 1992 முதல் 38 ஆண்டுகளாக மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி மணலை கூட ஆறுகளில் அள்ள விடாமல் கேரள அரசு இயற்கை வளத்தைப் கண் போல் பாதுகாத்து பேணி வருகிறது.
ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், அறிவியல் முறைப்படி – இயற்கை மீண்டும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆற்றில் மணலை அள்ளாமல் எந்த விதியும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப் பட்டதால், 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது.
காவிரி கொள்ளிடத்தில் அளவுக்கு மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டு அள்ளப்பட்டதால், கட்டுமானம் வலுவிழந்து முக்கொம்பு அணையும், திருச்சி ஸ்ரீரங்கம் பாலமும் உடைந்தது. ஆனால் இதை அப்படியே திசை திருப்பி அணைக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று அன்று கேலி செய்து திசை திருப்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஆறுகள், ஆறு என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல், நீர் தாவரங்களும் நுண்ணுயிர்களும் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இன்றி தனது இயல்பு நிலையை இழந்து விட்டது.
ஆற்றின் மட்டம் வரை மணல் சுரண்டப்பட்டு அள்ளப்பட்டு விட்டதால், ஆறுகளில் மணல் இல்லாததால், ஆறு முழுக்க படிந்துள்ள வண்டல் மண்ணில் சீமை கருவேலமரம் ஆக முளைத்துக் கிடக்கிறது.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் பல்வேறு அடக்குமுறைகளை – வழக்குகளை – மணல் கொள்ளையர்களால் தாக்குதலை எதிர்கொண்டு உறுதியாக நின்று, 2015 முதல் நடத்திய கரூர் மாவட்டம், திருச்சி கூகூர், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் – களத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த வீரமிக்க தொடர் போராட்டங்களின் விளைவாக, 2017 செப்டம்பர் முதல் உயர் நீதிமன்றம் ஆறுகளில் மணல் அள்ள தடை விதித்தது.
அன்றைய ஆட்சியிலிருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, உயர் நீதிமன்றம் உத்தரவினால் ஆற்று மணல் அள்ள தடை ஏற்பட்டதால், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மாநிலங்கள் போல், இயற்கை ஆற்றுமணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி செய்ய அரசாணை வெளியிட்டது.
இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2017-ல், ஆற்றுமணலுக்கு மாற்றாக தெரிவிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்றுமணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி செய்ய உத்திரவிட்ட அரசாணை, ஜூன்- 2022 வரை நடைமுறையில் இருந்தது.
வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்றுமணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டாலும், தமிழக அரசு அதை முறையாகச் செய்யாமல், பல்வேறு நபர்களின் சட்ட விரோத கொள்ளைக்காகவே செயற்கை மணல் எம் சாண்ட் (கல் குவாரிகள் மூலம்) உற்பத்தியை மட்டுமே ஊக்குவித்தது.
இதனால் தமிழகம் முழுவதும், பல்வேறு மலைகள் அழிக்கப்படும், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட சுரங்கத் திட்டத்தில் கொடுத்த அளவிற்கு மேல் நிலத்திற்கு அடியில் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததால், எண்ணற்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் என்பது போய், காவிரி நொய்யல் அமராவதி குடகனாறு என நான்கு ஆறுகள் ஓடும் கரூர் மாவட்டத்தில்தான் இன்று கல்குவாரி அதிகமாகி கரூர் மாவட்டம் பரமத்தி தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பம் நிலவுகின்ற பகுதியாக மாறிவிட்டது.
கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் திண்டுக்கல்லில் கீரனூர் பகுதியில் 1.50 ரிக்டர் அளவு நிலநடுக்கம், கரூர் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம், வேலூரில் நிலநடுக்கம், நெல்லையில் நிலநடுக்கம், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மூன்று முறை நிலநடுக்கம்,: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நிலநடுக்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
எனவே காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து தமிழக ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மணல் குவாரி அமைக்க, எம் சாண்ட் க்கு எதிர்ப்பு தெரிவித்தால் வீடு கட்ட மணலுக்கு என்ன செய்வது என்ற கேள்வி இயற்கையாக அனைவர் முன் எழும். ஒரு இயற்கை அழிவை தடுத்து நிறுத்த கோரிக்கை முன் வைக்கும் பொழுது, அதற்கான மாற்று சொல்லாமல் எப்போதும் அந்த கோரிக்கையை நாங்கள் முன்வைப்பது இல்லை.
ஆறுகளில் மணல் குவாரி அமைப்பதற்கு மாற்றாக, இதற்கு ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து நடைமுறையில் தற்போது 2022 வரை இருந்த, வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்று மணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி என்பதை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவாக உயர்த்தி இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த இரண்டாண்டாக அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.
இவ்வாறு மாதம் ஒன்றுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதன் மூலம், தமிழகத்தின் தேவையான தினசரி சுமார் 21,000 லாரி லோடுகள் தமிழகம் முழுக்க கட்டுமானப் பணிகளுக்கு கொடுக்க முடியும்.
வெளிநாட்டு இயற்கை ஆற்று மணல் டன் ஒன்றுக்கு சுமார் 1,000/= க்கு இறக்குமதி செய்து கொடுக்க, நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தயாராக உள்ளது.
எனவே தமிழக அரசு கொள்கை ரீதியாகவே, ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதை தீவிரப்படுத்த வேண்டும்.” என்ற மாற்று திட்டத்தையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, ”காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை முறையாக அறிவியல் அடிப்படையில் தூர்வாரினாலே, தமிழகத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான மணல் கிடைக்கும் என தெரிவித்து வருகிறது. இதே கருத்தை தமிழக மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கமும் அதன் தலைவர் மதிப்பிற்குரிய பொறியாளர் வீரப்பன் அவர்களும் அரசுக்கு தெரிவித்து வருகிறார். ” என்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப் பிரிவு.