முன்னாள் வி.ஏ.ஓ.வை மூன்றாண்டுகளாக அலையவிடும் வருவாய்த்துறை அதிகாரிகள் !
முன்னாள் வி.ஏ.ஓ.வை மூன்றாண்டுகளாக அலையவிடும் வருவாய்த்துறை அதிகாரிகள் !
“இன்னும் எவ்வளவுதான் அலைவது? வட்டாட்சியர் அலுவலகம் அல்லது கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து சாவதைத் தவிர வேறு வழியில்லை” என புலம்புகிறார், 71 வயதான என்.மருதை.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி, கீழ் நங்கவரம், தெற்கு தெருவை சேர்ந்த மருதைக்கு என்னதான் பிரச்சினை? சாமானியர்களின் மொழியில் சொல்வதென்றால், “சப்பை மேட்டர்”!
மருதை தனக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். அந்த இடத்தை அவர் கிரயத்திற்கு வாங்கிய போதே, அவரது மனைவி பெயரில் பத்திரம் செய்துள்ளார். இந்த இடத்திற்கான மூல பத்திரம், பட்டா, சிட்டா என அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துள்ளார்.
அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவணங்கள் வருவாய்த் துறையால் கணினி மயமாக்கப்பட்ட போது 43 சென்ட் என்பதற்கு பதிலாக 12 சென்ட் என தவறாக கணினியில் பதிவு செய்துவிட்டார்கள்.
இந்த விவரம் மருதைக்கு கடந்த 2020 இல்தான் தெரிய வந்திருக்கிறது. அப்போதிலிருந்து, இந்தப் பிழையை சரிசெய்ய சொல்லி தகுந்த ஆதாரங்களோடு வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மூன்றாண்டுகளாக அலையாய் அலைந்து ஓய்ந்துவிட்டார். வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் ஜமாபந்தியில் முறையிட்டும் தீர்வில்லை. உச்சமாக முதலமைச்சர் குறைதீர்க்கும் பிரிவுக்கு மனு கொடுத்தும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
“வி.ஏ.ஓ. வேலை பார்த்த உன்னாலயே உன் பிரச்சினையை தீர்க்க முடியடியலையேனு அடிக்கடி புலம்பி வந்த என் மனைவியும் சமீபத்தில் இறந்துவிட்டார். வயதும் தளர்ந்துவிட்டது. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இவர்களை துரத்திக் கொண்டு ஓடுவது.” என வேதனையோடும் விரக்தியோடும் கேட்கிறார் மருதை.
மருதை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் என்பது மட்டுமல்ல; ஆளும் கட்சியான திமுகவின் தீவிர விசுவாசியும்கூட. கலைஞர் இறந்த போது மொட்டை போட்டுக் கொண்டவர். தேர்தல் வந்துவிட்டால், திமுக கொடியை கையில் ஏந்தி வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.
இத்தகைய பின்புலம் இருந்தும், வருவாய்த்துறை செயல்பாடு பற்றிய போதுமான புரிதல் இருந்தும் அவராலேயே அவரது சொந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியாத அளவுக்குத்தான் வருவாய்த்துறையினரின் அணுகுமுறைகள் இருக்கின்றன என்பது மானக்கேடு! இவர்களிடத்தில், சாமனியர்களின் பாடுகளை தனியே சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை.
நௌஷாத்
அய்யா நீங்க குடுத்த ஃபைல்ல முக்கியமான கவர் இல்லை போல