” நிருபர்களுக்கு நன்கொடை இல்லை ” – அரசு அலுவலகத்தில் அதிர்ச்சி நோட்டீஸ் !
” நிருபர்களுக்கு நன்கொடை இல்லை ” – அரசு அலுவலகத்தில் அதிர்ச்சி நோட்டீஸ் !
சமீபத்தில் தேனியில் நிருபர்கள் தங்களுக்குள் பணத்தை பங்குப்போட்டுக் கொள்வதைப்போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக டாஸ்மாக் பார்களில், நிருபர் என்று சொல்லி சிலர் மாமூல் வாங்கிவருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், “பத்திரிக்கை நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்” என்ற தலைப்பில் பத்திரிகைகளுக்கு நன்கொடை அளிக்க இப் பேரூராட்சியில் வழிவகை இல்லை என்பதால் பத்திரிகை நண்பர்கள் பணம் கேட்டு இப் பேரூராட்சி அணுக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்பதாக, திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் முதல் நிலை பேரூராட்சி சார்பில் அதன் அலுவலகத்தின் முகப்பிலேயே நோட்டீஸ் ஒட்டியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அலுவலகத்தில், மாதம் மற்றும் வாரந்தோறும் நிருபர்கள் எனக் கூறி மாத இதழ், வார இதழ், புலனாய்வு இதழ்களிலும் வேலை பார்க்கின்றோம் எனக் கூறி தாங்கள் வந்ததற்கு பணம் தர வேண்டும் எனவும், தீபாவளி போன்ற விசேஷங்களுக்கும் பணம் கேட்டு அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க முடியாத பேரூராட்சி நிர்வாகம் இப்படி வித்தியாசமான முறையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை அலுவலகத்தில் ஒட்டியுள்ளது.
அவர்கள் நோட்டீஸ் ஒட்டியிருப்பதை குறை சொல்வதற்கு எதுவுமில்லை என்ற போதிலும், அதில் இடம்பெற்றிருக்கும் வாசகத்தில் பொதுவில் ” பத்திரிக்கை நிருபர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், ”டுபாக்கூர் பத்திரிகையாளர்களோடு” தங்களையும் சேர்த்தே அவமதித்திருப்பதாக அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
– ஜோஷ்.