இல்ல மாமா, விடுங்க நான் பாத்துக்குறேன் உறவு மோதலில் தலையெடுக்க துடிக்கும் மாப்பிள்ளை
‘‘விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும், சிகிச்சைக்காக அமெரிக்கா போனதும் தெரிந்த விஷயம்தான். விஜயகாந்த் அமெரிக்கா கிளம்பும் முன்பாக அவரது வீட்டில் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் நடந்திருக்கிறது. ‘நான் ஒருபக்கம் ஹாஸ்பிட்டல்னு அலைஞ்சிட்டு இருக்கேன். இப்படியே போய்ட்டு இருந்தால், கட்சியை யாரு கவனிக்கிறது?’’ என்று கவலையோடு தட்டுத் தடுமாறி கேட்டிருக்கிறார் விஜயகாந்த். இதுவரை அரசியல் பற்றி பேசாமல் இருந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், ‘நீங்க போய்ட்டு வாங்கப்பா… நான் பார்த்துக்குறேன்.
தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் நாம பூத் கமிட்டி அமைக்கணும். அதுக்கான வேலைகளை உடனே தொடங்கச் சொல்லிடுறேன். அதை நானே உடன் இருந்து கவனிச்சுக்குறேன்.’ என்று சொல்ல…மகனை ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறார் விஜயகாந்த். அப்போது, சுதீஷ், குறுக்கிட்டு, ‘நானும் அதை கவனிக்கிறேன்..’ என்று சொல்ல… ‘இல்ல மாமா… இதை என்கிட்ட விடுங்க… நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லியிருக்கிறார் பிரபாகரன். விஜய்காந்த்தும், ‘அவன் ஏதோ பண்றேன்னு சொல்றான்… பண்ணட்டும் விடுங்க…’ என்று சொல்லிவிட்டாராம். அத்துடன் சுதீஷ் அமைதியாகிவிட்டாராம்.
சொன்னதுடன், விறு விறுவென அடுத்த கட்ட வேலைகளிலும் இறங்கிவிட்டாராம் பிரபாகரன். தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் எல்லோருக்கும் பிரபாகரனே போன் போட்டிருக்கிறார். ‘நான் விஜய பிரபாகரன் பேசுறேன்… பூத் கமிட்டி அமைக்கிற வேலையை உடனே தொடங்கணும். அதற்கான வேலைகளை இன்னைக்கே ஆரம்பிங்க. இது சம்பந்தமாக எனக்கு நீங்க தினமும் ரிப்போர்ட் பண்ணணும்…’ என்று சொல்லி இருக்கிறார். தினமும் போன் செய்து ரிப்போர்ட் செய்யாத மாவட்ட செயலாளர்களுக்கு அவரே போன் போட்டு, ‘ இனி நீங்க இப்படி இருந்தால் உங்களையே மாற்ற வேண்டி இருக்கும்..’ என எச்சரிக்கும் தொனியிலும் பேசுகிறாராம். ஆடிப்போயிருக்கிறார்கள் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள்.
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க பிரேமலதா போன போதே பிரபாகரனும் உடன் சென்றிருந்தார். அங்கேயும் சுதீஷை பின்னுக்குத் தள்ளிவிட்டு அத்தனை இடங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார் பிரபாகரன்.
கடந்த 13-ம் தேதி பிரபாகரனுக்கு பிறந்தநாள் அன்று விஜயகாந்த் வீட்டுக்கு முன்பாக தேமுதிக நிர்வாகிகள் பலரும் கூடி, ‘சின்ன கேப்டன் வாழ்க…’ என்றெல்லாம் கோஷமும் போட்டு வைத்திருக்கிறார்கள். கோஷம் போட வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்து அசத்தி இருக்கிறார் பிரபாகரன்.
இளைஞர் அணி பொறுப்பு தற்போது முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பியிடம் இருக்கிறது. அந்தப் பொறுப்பை பிரபாகரனிடம் வழங்க வேண்டும் என்ற குரல் இப்போது தேமுதிகவில் உள்ள சில நிர்வாகிகள் மத்தியில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. சுதீஷை ஓரங்கட்டவே பிரபாகரனை முன்னுக்கு கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தேமுதிகவில் இருந்து கேட்கும் குரல்!”