அவமதிக்கப்பட்டாரா அரூர் கோட்டாட்சியர் ? பொறுப்பு அமைச்சரின் பொறுப்பில்லாத்தனம் சமூக ஆர்வலர்கள் சாடல் !
அவமதிக்கப்பட்டாரா அரூர் கோட்டாட்சியர் ? பொறுப்பு அமைச்சரின் பொறுப்பு பொறுப்பில்லாத்தனம் , சமூக ஆர்வலர்கள் சாடல் !
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை 9-ந்தேதி கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சரும் தர்மபுரி பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் அவர்கள் அன்று 3 மணிக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி, அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் , உள்பட அரசு அதிகாரிகள் கல்லூரி மாணவர்கள் தொண்டர்கள் என மாலை 3 மணியிலிருந்து காத்துக் கிடந்தனர்.
ஒரு வழியாக 5.30 மணிக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதரவாளர்களுடன் பொறுப்புடன் புடைசூழ மேடை ஏறினார் , மேடையின் இருக்கைகளில் ஒன்றியம் , வட்டம் , மாவட்டம் கிளைச் செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்கள் சேரில் இடம் பிடித்து கம்பீரமாக அமர்ந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 68 கல்லூரிகளில் படிக்கும் 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-க்கான பற்று அட்டைகளை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி, திமுக எம்பி ஆ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அரூர் கோட்டாட்சியர் “வில்சன் ராஜசேகரனுக்கு” இடம் ஒதுக்காததால் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும் வரை சுமார் 1.15 மணி நேரம் கால் கடுக்க நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிகாரிகளும், கல்லூரி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
ஒரு உயர் அதிகாரி மணிக்கணக்கில் அரசு நிகழ்ச்சியில் அமர்வதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதும், அரசியல்வாதிகள் கட்சி நிர்வாகிகள் என பலர் இருக்கையை பட்டா போட்டுக் கொண்டது நாகரீகமற்ற அரசியல் நோக்கத்தை உணர்த்துகிறது.
ஆட்சியரை விட அதிகாரம் மிக்கது கட்சி பதவி தான், என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கும் வகையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் இந்த அநாகரீக செயல் ஆணவத்தின் உச்சத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்த நிகழ்வால் திமுகவினரின் மேடை நாகரிகம் ? குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
– மணிகண்டன்