துணுக்குத் தோரணங்கள் அல்ல… கவிதைகள்…!!!??? குடந்தையில் தெறித்த தீப்பொறி…!!!
துணுக்குத் தோரணங்கள் அல்ல… கவிதைகள்…!!!??? குடந்தையில் தெறித்த தீப்பொறி…!!!
கும்பகோணத்தில் இயங்கி வரும் அமைப்பு, “காவிரி கலை இலக்கியப் பேரவை”. அதன் தலைவர் ஜி.பி. இளங்கோவன். கவிஞர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர். கடந்த 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம், ரோட்டரி ஹாலில் மாபெரும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வினை மிகவும் சிறப்பாக நடத்தியது, காவிரி கலை இலக்கியப் பேரவை அமைப்பு.
பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர்கள் கோணங்கி, கீரனூர் ஜாகிர்ராஜா, சி.எம். முத்து, அசோக்ராஜ், ஜி. சரவணன், விமர்சகர் விஜய் ஆரோக்கியராஜ், நல்வாசகர் நேசன் ஆகியோர். கவிஞர்கள் லக்ஷ்மி மணிவண்ணன், வியாகுலன், டி. கண்ணன், ஜி.பி. இளங்கோவன், மா. செல்வகுமார், ஆடலரசன், தேவரசிகன், மு. அயூப்கான், வலங்கைமான் நூர்தீன், திருநல்லம் சாமிநாதன், இரா. கார்த்திகேயன், இதயராஜா ஆகியோர். கவிஞர்கள் குழலி குமார், குடந்தை அனிதா, குடந்தை பிரேமி, நா. தமிழ்ச்செல்வி ஆகியோரும் மற்றும் பார்வையாளர்கள் பலரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் “வடக்கேமுறி அலிமா” நாவல் குறித்து எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன், விமர்சகர் விஜய் ஆரோக்கியராஜ் ஆகிய இருவரும் விமர்சன உரை ஆற்றினார்கள். கவிஞர் டி. கண்ணனின் “பிறை நிலா முற்றம்” கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் கருத்துரை நல்கினார். நாவல்களின் நவீன மொழி குறித்து எழுத்தாளர் கோணங்கி கட்டுரை எழுதி வந்து வாசித்தார்.
நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், கூத்துப்பட்டறை நடேஷ் முத்துசாமி அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் “வடக்கேமுறி அலிமா” நாவல் குறித்து, “இந்த நாவலில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சியான காட்சிகளும், செயல்பாடுகளும் தற்போதைய சூழலில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. நாவல் எழுதப்பட்ட காலத்தை நினைவில் கொண்டு வாசிக்கப்பட வேண்டிய அதி முக்கியமான நாவல்களில் இது ஒன்றாகும்.” என்றுரைத்தார் எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன். “நாம் அனைவரும் நம்புகின்ற புனிதங்கள் ஒவ்வொன்றையும் உடைத்துப் போட்டு விட்டது இந்த நாவல். சொல்லத் தயங்குகின்ற விசயங்களைத் துணிச்சலுடன் நாவலில் சொல்லிச் சென்றுள்ள கீரனூர் ஜாகிர்ராஜாவின் புனைவு மொழி நாம் கொண்டாடப்பட வேண்டியதாகும்.” என்றார் விமர்சகர் விஜய் ஆரோக்கியராஜ்.
கவிஞர் டி. கண்ணனின் “பிறை நிலா முற்றம்” கவிதைத் தொகுப்பு குறித்து, “கண்ணனின் கவிதைகள் சிற்றிதழ் மரபின் தொடர்ச்சியாகவும், கவிதைகளில் மிகவும் அபூர்வமானப் படிமங்களைத் தமக்குள்ளே உள்ளடக்கியதாகவும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.” என்று விமர்சித்தார் கவிஞர் வியாகுலன்.
“துணுக்குகளின் வடிவத்தில் எழுதப்படுபவை, துணுக்குத் தோரணங்களாகத் தொங்க விடப்படுபவைகள் எல்லாம் கவிதைகள் கிடையாது. வாசகர்களின் எண்ணிக்கையினைக் கூடுதல் படுத்திக் கொள்ளும் அதி சாகசக் கவிதைகளும் கவிதையின் எல்லைக்குள் வராது. இதுபோன்ற துணுக்குத் தோரணங்களைக் கவிதைகளாகத் தொங்க விடுகின்ற வணிக முயற்சிகளில் தான் மனுஷ்யபுத்திரன் மற்றும் இசை போன்றவர்கள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.” எனக் கூறி தீப்பொறியாகத் தெறிக்க விட்டார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்.
நாவல்களின் நவீன மொழி குறித்துக் கட்டுரை எழுதி வந்து வாசித்தார் எழுத்தாளர் கோணங்கி. “கும்பகோணத்தின் செழுமையான நிலமும், திருபுவனத்தின் நண்பர்களுமே எனக்கு மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வருகிறார்கள். கநாசு தொடங்கி நகுலன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், குபரா போன்ற ஆளுமைகள் தனித்ததொரு அடையாளங்கள் ஆவார்கள். ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் போன்ற நாவல்கள் தமிழின் முதல் வரிசையில் இடம் பெறக் கூடியவைகள். அதுபோல பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் புனைவின் உச்சம். ஜி. நாகராஜன் சுற்றித் திரிந்த மதுரையின் நான்கு வீதிகளும், ஆத்மாநாமின் தற்கொலையும் ஆவிகளாக என்னைப் பித்துப் பிடித்துக்கொண்டு மாய உலகில் ஆட்டுவிக்கின்றன எனில் அது மிகையல்ல.” என்றார் எழுத்தாளர் கோணங்கி.
“முன்னொரு காலத்தில் கும்பகோணத்தில் இலக்கியக் கூட்டங்களும் உரையாடல்களும் நிறைய நடைபெறும். சற்றே சில காலங்கள் இடைவெளி விட்டு இப்போது, “காவிரி கலை இலக்கியப் பேரவை” முன்னெடுத்து இதுபோன்று இலக்கியக் கூட்டங்கள், உரையாடல்கள் நிகழ்த்தி வருவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. இது தொடர வேண்டும்.” என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.
“தமிழ் மொழியின் கைவரம் பெற்ற எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஒவ்வொரு பருவத்திலும் கொண்டாடுகின்ற சிறு இயக்கமாக “காவிரி கலை இலக்கியப் பேரவை” எங்கள் கும்பகோணம் நகரில் தொடர்ந்து செயல்படும்.” என்று உறுதி தெரிவித்தார் காவிரி கலை இலக்கியப் பேரவை அமைப்பின் தலைவர் ஜி.பி. இளங்கோவன்.
@ ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு