கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 17 வயது நர்சிங் மாணவி உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் சாலையைச் சேர்ந்த வீரமணி – ராதா தம்பதியின் மகள் பவானி (17) தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கல்வியில் சிறந்த முன்னேற்றம் பெற்றிருந்த அவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு பழைய வீடில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய பவானி கடுமையாக காயமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பவானி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும், இதைச் சார்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து அரசுத் துறைகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.