அங்குசம்பார்வையில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’
தயாரிப்பு : ‘ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி’ கேப்டன் எம்.பி.ஆனந்த். இணைத் தயாரிப்பு : ட்ரீம் ஹவுஸ் ஹாரூண், பி.ஜி.எஸ்.புரொடக்ஷன் பி.ஜி.சரவணன். டைரக்ஷன் : பிரசாத் முருகன். நடிகர்—நடிகைகள் : பரத், அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், கனிகா, கல்கி, ராஜாஜி, ஷான், பி.ஜி.எஸ்.மூர்த்தி, அரோல் டி.சங்கர். ஒளிப்பதிவு : கே.எஸ்.காளிதாஸ் & கண்ணா ஆர். இசை : ஜோஸ் பிராங்க்ளின், எடிட்டிங் : ஷான் லோகேஷ், வசனம்& பாடல்கள்: ஜெகன் கவிராஜ், ஆர்ட் டைரக்டர் : வி.கே.நடராஜன். பி.ஆர்.ஓ.க்கள் : கே.எஸ்.கே.செல்வக்குமார் & மணிமதன்.
- கூலிக்கு கொலை செய்யும் பரத்தின் காதல் மனைவிக்கு சிறுநீரகம் செயலிழந்துவிடுகிறது. மாற்று சிறுநீரக ஆபரஷேன் செய்ய வேண்டும் என்றால் 15 லட்சம் செலவாகும் என்கிறார் டாக்டர். இந்தப் பணத்திற்காக பெரிய தலை ஒருவரை, மற்ற இருவருடன் சேர்ந்து கொலை செய்கிறார் பரத். கொலைக்கான கூலியைப் பிரிப்பதில் தகறாரு ஏற்பட, பணம் தர மறுத்தவனையே துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார் பரத்.
- திருநங்கையாவிட்ட தனது மகனை டாக்டராக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக அடாவடி ரவுடி ஒருவனிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அவஸ்தைப்படுகிறார் சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியாளரான அபிராமி. கந்துவட்டிக் கடனைக் கட்ட முடியாத அபிராமியின் மகனை சிதைத்துவிடுகிறார் அந்த ரவுடி. இதனால் ஆத்திரமான அபிராமி, அந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்.
- தனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, புகுந்த வீட்டிற்குப் போகிறார் அஞ்சலி நாயர். அங்கு போன பின்பு.. அதுவும் கர்ப்பமான பிறகு தான் தனது கணவன் ஓரினச் சேர்க்கையாளன் என்பது அஞ்சலி நாயருக்குத் தெரிகிறது. தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது கேடுகெட்ட மாமனார் என்பது தெரிந்ததும் கொந்தளித்து, மாமனார், மாமியார், கணவன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார் அஞ்சலி நாயர்.
- ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் பவித்ரா லட்சுமி, ஒருவனைக் காதலித்து அவனையே கல்யாணமும் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் சாதி வெறி பிடித்த பவித்ராவின் அப்பா தலைவாசல் விஜய்க்கு இது பிடிக்கவில்லை. இதனால் ஆவேசமாகும் தலைவாசல் விஜய், பவித்ராவின் காதலன் என நினைத்து வேறு ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார் .
மேற்கண்ட நான்கு பேரின் கைகளிலும் கிடைத்தது ஒரே துப்பாக்கி தான். அது எப்படி பயணித்து நால்வரின் கைகளுக்கு வந்தது? என்பது தான் இடைவேளைக்குப் பின்பு வரும் படத்தின் பெரிய ட்விஸ்ட்.
ஒன்ஸ் அபான் எ டைம்… அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ராணுவ அதிகாரி ஒருவன் ஏழைச்சிறுவனை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற உண்மைச் சம்பவம் தான் இப்படத்தின் ஒன்லைன். இந்த லைன் அற்புதமான லைன் தான். ஆனால் படத்தின் இடைவேளை வரை காட்சிகள் துண்டு துண்டாக வந்து ரசிகர்களை கொஞ்சம் சோதிப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இடைவேளைக்குப் பின் அந்த ஒரு துப்பாக்கி நால்வரின் கைகளுக்கும் எப்படி வந்தது என்பதை கரெக்டாக கனெக்ட் பண்ணி திரைக்கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டிவிட்டார் டைரக்டர் பிரசாத் முருகன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நடிப்பில் பரத்திற்குத் தான் முதலிடம். அதற்கடுத்து அஞ்சலி நாயரும் பவித்ரா லட்சுமியும் இருக்கிறார்கள். சீனியர் நடிகை என்றாலும் அபிராமியின் நடிப்பு பல சீன்களில் செயற்கையாகவே இருக்கிறது. தலைவாசல் விஜய்யைப் பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஜோஸ் பிராங்க்ளினின் பின்ணனி இசை படத்திற்கு கைகொடுக்கிறது.கொஞ்சம் பொறுமையுடன் பார்த்தால் ‘ஒன்ஸ் அபான் எ டைம்’ ஐ ஒன் டைம் ரசிக்கலாம்.
–மதுரை மாறன்.