அங்குசம் பார்வையில் ‘மிஸ் யூ’ திரைப்படம்
தயாரிப்பு : ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ சாமுவேல் மேத்யூ. தமிழ்நாடு ரிலீஸ் : ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்ஷன் : என்.ராஜசேகர். நடிகர்—நடிகைகள் : சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன், சாஸ்திகா, லொள்ளு சபா மாறன், ஜெயப்பிரகாஷ், அனுபமா, ஆடுகளம் நரேன், பொன்வண்ணன், சரத் லோகித்ஸ்வா, ரமா. ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ், இசை : ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங் : தினேஷ் பொன்ராஜ், வசனம் : அசோக்.ஆர்., நடனம் : தினேஷ். பி.ஆர்.ஓ.ஜான்சன்.
அமைச்சர் சிங்கராயரால் [ சரத் லோகித்ஸ்வா ] கார் விபத்தில் சிக்கி, உயிர் பிழைக்கிறார் வாசுதேவன் [ சித்தார்த் ] . இதனால் ஒரு வகையான மெமரிலாஸுக்குள்ளாகிறார் சித்தார்த். மனம் போன போக்கில் பயணிக்கிறார். அப்படிப் போகும் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் லவ் ஃபெயிலியரான கருணாகரனைச் சந்திக்கிறார். அவருடனேயே காரில் பெங்களூர் போகிறார். அங்கே சுப்புலட்சுமி [ ஆஷிகா ரங்கநாத் ]யைப் பார்க்கிறார், லவ்வில் விழுகிறார், இதை அவரிடமே சொல்லும் போது, அதை சுப்புலட்சுமி தீர்க்கமாக நிராகரிக்கிறார். ஆனாலும் அவரை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக தனது அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா அனுபமாவிடம் சுப்புலட்சுமியின் போட்டோவைக் காட்டி ”இவளைத் தான் காதலிக்கிறேன், இவளையே கல்யாணம் பண்ணப் போறேன்” என்கிறார்.
“இவளைத்தாண்டா காதலிச்ச, இவளைத்தாண்டா கல்யாணமும் பண்ணினே, இவளைத்தாண்டா வீட்டைவிட்டு விரட்டுன” என சித்தார்த்தின் அம்மா, நண்பர்கள் பாலசரவணன், மாறன் ஆகியோர் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல அதிர்ந்து போகிறார் சித்தார்த். அமைச்சரின் கோபத்திற்கு சித்தார்த் எப்படி ஆளாகிறார்? ஆஷிகாவுக்கும் இவருக்கும் கல்யாணம் நடந்தது எப்படி? இதான் இந்த ‘மிஸ் யூ’.
இந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சித்தார்த். ஸ்பெஷலாக அளவெடுத்து தைத்த சட்டை போல ஃபிட்டாகிவிட்டது இந்த கேரக்டர். ஆஷிகாவுடன் இரண்டாவது சந்திப்பிலேயே தயங்காமல் காதலைச் சொல்வது, அதை அவர் ரிஜெக்ட் பண்ணிய பிறகு மைல்டான சோகத்துடன் எழுந்து போவது, பின் அவரையே கல்யாணம் செய்ய தவிப்பது என ஆல் சீனிலும் பாஸாகிவிட்டார் சித்தார்த்.
ஆஷிகா ரங்கநாத். அடி ஆத்தீ…இம்புட்டு நாளா எங்கயிருந்த தாயி…. இந்த நடிப்பை எங்கிட்டு ஒளிச்சு வச்சுருந்த தாயி என கத்தும் அளவுக்கு நடிப்பிலும் அழகிலும் ரொம்ப ரொம்ப… வசீகரிக்கிறார். குளோஸ்-அப் ஷாட்டில் குதூகலிக்க வைக்கிறார் ஆஷிகா. ”உங்களுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சு. ஆனா எனக்கு எதுவுமே மறக்கல” என சித்தார்த்திடம் விரக்தியாக சொல்லும் சீனில் செமத்தியாக பெர்ஃபாமென்ஸ் பண்ணிவிட்டார் ஆஷிகா ரங்கநாத். சித்தார்த்தின் பெங்களூர் நண்பனாக வரும் கருணாகரன், சென்னை நண்பர்களாக வரும் பாலசரவணன், மாறன், ஆகியோர் டைமிங் காமெடி சென்ஸில் அசத்திவிட்டார்கள்.
படத்தில் எந்த ஒரு காட்சியையும் நிராகரிக்கவோ, விமர்சிக்கவோ முடியாமல், அனைத்தையும் ரசிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் என்.ராஜசேகர். காதல் படம் என்றால், சாதி வெறி, கார்களில் துரத்தல், வெட்டுக்குத்து, ரத்தம், கொலை, தற்கொலை இதெல்லாம் இல்லாமல் இருக்காது தமிழ் சினிமா. ஆனால் இதெல்லாம் இல்லாமலேயே 100% ‘குட் ஃபீல்’ லவ் படம் தந்த ராஜசேகருக்கு சபாஷ்..சபாஷ்….சபாஷ்… அதே போல் தமிழ் மறை ஓதுவார்கள் மூலம் நடக்கும் தமிழ் முறைத் திருமணம், அமைச்சர் மகன் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுவது போன்றவை, இயக்குனரின் உள்ளத்தின் உண்மைக்கும் நேர்மைக்கும் சாட்சி.
இயக்குனரின் தோளோடு தோள் நின்று, அவரின் எண்ணங்களுக்கு தனது வசனங்களால் அசோக்.ஆர். புத்தெழுச்சி கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. “நான் சொன்ன அன்யூசுவல்ங்கிறது நெகட்டிவ் வார்த்தை இல்லை”, ”மறதியால அவஸ்தைப்படுகிறவர்களைவிட, நினைவுகளால் அவஸ்தைப்படுவர்கள் தான் அதிகம்” புத்தெழுச்சிக்கு இந்த இரண்டு சீன் வசனங்கள் சின்ன சாட்சி தான். ஆனால் படம் முழுக்க மென்மையாகவும் அழுத்தமாகவும் மனசுக்குள் இறங்குகிறது அசோக்கின் வசனங்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வசனகர்த்தா அசோக்கைப் போலவே இயக்குனருக்கு புத்தெழுச்சி கொடுத்திருக்கும் இன்னொருவர் மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் வைபோதா. படத்தில் எட்டு பாடல்கள் இருந்தாலும் எல்லாமே சூப்பர் ரகம். அதிலும் “கண்ணன் முகம் மறந்ததேனடி” என ஆஷிகா பாடும் அந்தப் பாடலில் இதமும் உண்டு, சோகமும் உண்டு, சுகமும் உண்டு. கேமராமேன் கே.ஜி.வெங்கடேஷின் உழைப்பும் பாராட்டுக்குரியது தான்.
சந்தர்ப்பம் கிடைத்தால்… இல்லல்ல… சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு மிஸ் பண்ணாம இந்த ‘மிஸ் யூ’ வைப் பாருங்க. உண்மையிலேயே குட் ஃபீல் வரும்ங்க.
–மதுரை மாறன்.