பீகாரில் நாகப்பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை!
பீகார் மாநிலம் பெட்டியாவை சேர்ந்த கோவிந்த என்ற ஒரு வயது குழந்தை சக குழந்தைகளுடன் சேர்ந்து தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கும் பகுதிக்கு திடீரென ஒரு நாகப்பாம்பு வந்தது, அதைப் பார்த்த இந்த குழந்தை அது விளையாட்டு பொம்மை என நினைத்து கையில் எடுத்து கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த நாகப்பாம்பு இறந்திருக்கிறது. அப்போது குழந்தையை கூட்டிச்செல்ல வந்த பாட்டி குழந்தை அருகே நாகப்பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இருப்பினும் குழந்தை நன்றாக இருந்ததால் பாம்பு ஏதேனும் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து, அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் ஒருவேளை அந்தப் பாம்பு குழந்தையை தீண்டி இருக்கலாம் என்று முதற்கட்டமாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் உடல் பாம்பு விஷத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக தீவிர சிகிச்சைக்காக பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அதை தொடர்ந்து தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.
இதுகுறித்து பேசியிருந்த குழந்தையின் பாட்டி மாதேஸ்வரி, குழந்தையின் தாயார் வீட்டின் அருகே விறகு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விளையாடி கொண்டிருந்த குழந்தை எப்படியோ அந்த பாம்பை கொன்றது என்றார்.
— மு. குபேரன்.