ஆளுநரை சந்தித்து புகார் அளித்த இபிஎஸ் ; புறக்கணிக்கப் படுகிறாரா ஓபிஎஸ் ?
அதிமுகவின் சார்பில் தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 20ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று பலரும் சென்று ஆளுநரை சந்தித்து இருக்கின்றனர். இப்படி இன்று ஆளுநரை சென்று சென்று சந்தித்தவர்கள் அனைவருமே எடப்பாடி கே பழனிச்சாமிக்கு மிக விசுவாசமாக இருக்கக்கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகிகள் முறைகேடு செய்ததாக புகார் அளித்து இருக்கின்றனர். மேலும் திமுக அமைச்சர்கள் மீதும் புகார் அளித்து இருக்கின்றனர்.
இன்றைய சந்திப்பு தொடர்பாக அதிமுகவின் மூத்த ரத்தத்தின் ரத்தம் ஒருவரிடம் கேட்டபோது, இந்த சந்திப்பு தற்போது நடைபெறும் ரெய்டுகளை தடுப்பதற்காக மட்டும் கிடையாது என்று சொல்லத் தொடங்கினார்.
தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் சூட்டுவதிலேயே மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்காக நடைபெற்ற வாக்குவாதத்தில் என் தரப்பினர் கூறக்கூடிய எந்தக் கருத்தையும் கேட்க மாட்டீர்களா என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாகவே ஓ பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். இதை அடுத்து தான் ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும் அதிமுக பொன்விழா நிகழ்ச்சிகள் அனைத்திலும் இருவரும் சேர்ந்து இருந்தது, இருவரும் சேர்ந்தே கொடி ஏற்றியது எல்லாம் பாசம் கிடையாது, இருவருக்குமே பயம் தான் யார் யாரை எப்போது விட்டுப் போவார்கள் என்று, மேலும் பொன்விழா நிகழ்வின் மூலம் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிகாரம் இருவரிடமும் இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் என்பதாலும், அதுமட்டுமல்லது கட்சியில் பல சிக்கல்கள் இருக்கக்கூடிய நேரத்தில் இரட்டை தலைமை என்று இருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று பேச தொடங்கியிருக்கின்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் ஓ பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்று இருக்கக்கூடிய நிலையில் அவசர அவசரமாக ஆளுநரிடம் தேதி கேட்கப்பட்டு தற்போது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதுபற்றிய தகவல் ஓபிஎஸ்-க்கு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேசமயம் சசிகலா வருகை அதிமுகவில் எந்த ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விடக்கூடாது, மேலும் கட்சியின் நிர்வாகம் அனைத்தும் எடப்பாடியில் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெளிவுபடுத்தவுமே ஓபிஎஸ் இல்லாமல் இபிஎஸ் அவருடைய ஆதரவாளர்களை கூட்டிக்கொண்டு ஆளுநரை சந்தித்து இருக்கிறார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக் கொண்டனர்.