தமிழ்நாடு ஆளுநர் இரவி அவர்களுக்கு, வணக்கம்.
தமிழக ஆளுநராக ஆர். என். ரவி அவர்களே, செப்டம்பர் 18, 2021 அன்று பதவியேற்று, தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் மோதல்களைச் சந்தித்தது என்பது உங்களின் வாழ்வின் கருப்பு பக்கங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பலமுறை இந்திய உச்சநீதிமன்றம் தலையில் வைத்த கணக்கில் அடங்கா ‘குட்டு’களையும், தாங்கிக் கொண்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் செயல்பட்டு அரசியல் சாசனத்தின் விதிகளைக் காலில் போட்டு மிதித்த உங்களின் மன தைரியத்திற்கு நிகர் நீங்கள் மட்டுமே!
அரசுக்கும் ஆளுநருக்குமான மோதலில் மிக முக்கியமான புள்ளி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கத் தாமதப்படுத்தியது. நீட் (NEET) விலக்கு மசோதா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் என 10-க்கும் மேலான மசோதாக்களை கிடப்பில் போட்டு, தமிழக அரசுக்கு நீங்கள் கொடுத்த குடைச்சல்களின் பட்டியல் நீண்டது.

இதுபோல, மசோதாக்களை நிறுத்தி வைப்பது சட்டவிரோதம் என தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்தே சில மசோதாக்களை பரிசீலித்தீர்கள்.
இது ஒருபுறமிருக்க, கடந்த 2023 ஆம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட மாடல் போன்ற வார்த்தைகள் உள்ளிட்டு சில வரிகளை உங்கள் உரையில் வாசிக்காமல் தவிர்த்தீர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தபோது, சபை மரபுகளை மீறி நீங்கள் பாதியிலேயே சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதெல்லாம், இந்திய அரசியல் வரலாற்றில் மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
இதுவும் போதாதென்று, சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வொன்றில், “தமிழ்நாடு” என்பதை விட “தமிழகம்” என்பதுதான் பொருத்தமான பெயர் என்று நீங்கள் கொளுத்திப்போட்டீர்கள். அது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், “நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை” என நீங்களே விளக்கம் கொடுக்கும் நிலை உருவானது.
ஜூன்-2023 இல் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது, முதல்வர் பரிந்துரை இல்லாமலேயே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீங்குவதாக நீங்கள் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்களே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவை நிறுத்தியும் வைத்தீர்கள்.
ஆளுநராக பொறுப்பில் இருந்துகொண்டே, பொதுமேடைகளில் சனாதன தர்மம் குறித்தும், திராவிட அரசியல் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் நீங்கள் பேசிய அரசியல் நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவே வைத்ததை நீங்கள் உணராமலில்லை.
இந்த மோதலின் உச்சமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைத்ததோடு, “மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செத்துவிட்டது (dead) என்று அர்த்தம்” என நீங்கள் உதிர்த்த கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இவையெல்லாம்தான், ‘ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசால் தொடர்ந்து எழுப்பவும் வைத்தது.
இத்தகைய சலசலப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில், உங்களது 5 ஆண்டுகால பதவிக்காலமும் முடிவுக்கு வந்திருக்கிறது. 2026 – மார்ச் 7, ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலினை நீங்கள் நேரில் சந்திக்க நேரிட்டது. தொடர் மோதல் போக்கை நீங்கள் கைக்கொண்டு வந்தபோதிலும், தனக்குத் துன்பம் தந்த உங்களைப் பிரியும் தருணத்தில் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகத் திருவள்ளுவர் சிலையை உங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
“தமிழ்நாடு எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும்” என்று வாழ்த்து கூற, அதற்குப் பதிலாக நீங்கள் “தமிழக மக்களின் அன்பும், இங்குக் கிடைத்த உன்னதமான அனுபவமும் மறக்க முடியாதவை” என்று நெகிழ்ச்சியுடன் அளித்த பதிலில், தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டை முழுமையாக உணர்ந்து விடைபெற்றீர்கள்.
சர்ச்சைகளையும் தாண்டி, ஏறத்தாழ 5 ஆண்டுகள் உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் மதித்தே செயல்பட்டார்கள் என்பதற்கு முதல்வரின் நயத்தக்க நாகரிகமே அடிப்படை. மேற்கு வங்கம் அப்படி இருக்குமா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம். போய் … வாருங்கள் என்பதற்குப் பதிலாகத் தமிழ மக்களாக நாங்களும் எங்களின் முதல்வரோடு இணைந்து உங்களை வழியனுப்புகிறோம். வளமுடன் வாழ்க.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.