ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!
‘வி.கே.புரொடக்ஷன்ஸ்’ நிர்மல் சரவணராஜ் & எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வ.கெளதமன் இயக்கத்தில் உருவாகி, வரும் 19—ஆம் தேதி ரிலீசாகிறது ‘படையாண்ட மாவீரா’ படம். வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

படத்தை இயக்கியிருப்பதுடன் குரு கேரக்டரிலும் நடித்துள்ளார் வ.கெளதமன். இவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னடா, சமுத்திரக்கனி, இளவரசு, பாகுபலி பிரபாகர், மதுசூதன்ராவ், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே ‘படையாண்ட மாவீரா’வில் நடித்துள்ளனர். வ.கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் அறிமுகமாகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன், பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து, பாடல்கள் இசை ; ஜி.விபிரகாஷ்குமார், பின்னணி இசை : சாம்.சி.எஸ், வசனம் : பாலமுரளி வர்மா, இணைத் தயாரிப்பாளர்கள் : வ.கெளதமன், குறளமுதன், உமாதேவன், கே.பாஸ்கர், கே.பரமேஸ்வரி, தமிழ்நாடு ரிலீஸ்: சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.அழகர், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.
19—ஆம் தேதி படம் ரிலீசாவதால், படத்தின் மூன்று பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டுவிழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர்.08-ஆம் தேதி இரவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டைரக்டர் தங்கர்பச்சான் ஆகியோர் வந்திருந்தனர். விழாவில் பேசியோர்…
பாலமுரளி வர்மா,
“உங்களுக்கு ஏன் இந்த வேலை? என பலரும் எங்களிடம் கேட்டார்கள். இது ஒரு சாதித் தலைவனைப் பற்றிய படமல்ல. அனைத்து சமூக மக்களின் உரிமைக்காக போராடிய தலைவனின் படம் தான் இது. இதை எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதையெல்லாம் தாண்டித்தான் இப்படம் ரிலீசாகிறது.
இணைத் தயாரிப்பாளர்கள் நால்வருமே படத்திற்கு ஏற்பட்ட தடங்கல்களைக் குறித்தும் காடுவெட்டி குருவின் மக்கள் சேவை குறித்தும் பேசினார்கள்.

நடிகர் இளவரசு,
“கெளதமனின் உண்மையான உழைப்பும் ஆத்மார்த்தமான ஈடுபாடும் கொண்ட இப்படம் பெரிய வெற்றி பெறவேண்டும்”.
கவிப்பேரரசு வைரமுத்து,
“சமகாலத்தில் நான் மிகவும் மதிக்கத்தக்க இயக்குனர் கெளதமன். சமரசம் இல்லாத போராளி, என் இளைய தம்பி அவன். மக்களால் இந்தப் படம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக வாழ்த்த வந்திருக்கிறேன். இந்த ‘படையாண்ட மாவீரா’வைப் பொறுத்த வரை, ரத்தம், கண்ணீர், வியர்வை, மக்களின் துயர் துடைக்க துணை நின்ற ஒரு தலைவனின் கதை.

இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான காரணங்கள். மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தன்காட்டு வீரப்பன் போன்ற வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் இப்படத்தினையும் மக்கள் கொண்டாடுவார்கள்”.
சுரேஷ் காமாட்சி,
“காடுவெட்டி குருவை ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவர் என்றும் அவரைப் பற்றி எனக்கு வேறொருவிதமாகவும் அபிப்ராயம் இருந்தது உண்மை தான். ஆனால் கெளதமன் இப்படத்தின் திரைக்கதையைக் கொடுத்து வாசிக்கச் சொன்னதும் அந்த எண்ணத்தையும் பிம்பத்தையும் துடைத்தெரிந்துவிட்டேன்”

தங்கர்பச்சான்,
”தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அரசியல், வன்முறை, அடக்குமுறை எப்போது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பவர் கெளதமன். காடுவெட்டி குருவைப் பற்றியும் அந்த சமூகத்தைப் பற்றியும் குறிப்பிட்ட சில பத்திரிகைகள், எப்போதுமே விஷத்தைத் தான் கக்கியுள்ளன. காடுவெட்டி குருவுடன் அரசியல்வாதியாக பழகாமல் ஒரு தமிழனாக பழகியிருக்கேன். மிகவும் இளகிய மனம் கொண்டவர் குரு. மனிதர்களையும் மண்ணையும் பெண்ணையும் மதிக்கும் ஒரு தலைவனைப் பற்றிய படம் இது. இதை வெளிவராமல் தடுக்க எவ்வளவோ பேர் சதி செய்தார்கள். அதை முறியடித்துத் தான் இப்போது வெளிவருகிறான் ‘படையாண்ட மாவீரா”.
வ.கெளதமன்,
“தயாரிப்பில் உறுதுணையாக இருந்த எனது நண்பர்களுக்கும் படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என மனமார்ந்த நன்றி. குறிப்பாக பாடல்கள் எழுதிய கவிப்பேரரசுவுக்கு மிகவும் நன்றி.

இந்தப் படத்தை முடக்க எத்தனை பேர் சதிவேலை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் இதுவரை எந்த சமூகத்தினரையும் புண்படுத்தியதில்லை. பிறகு ஏன் அவர்களுக்கு இந்த வேலை? அருவெறுப்பான செயல். நான் பெரிதும் மதிக்கும் தமிழ்ச்சமூகமே எனக்கு வலியையும் வேதனையையும் தந்தது. அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தான் இப்படத்தை எடுத்து முடித்தேன். வரலாறாக நின்ற ஒருவனின், வரலாறைத் தான் சொல்லியிருக்கிறேனே தவிர, எதையும் மாற்றிச் சொல்லவில்லை. தலித் சமூக மக்களை கோவிலுக்குள் மாலை மரியாதையுடன் அழைத்துச் சென்றவர் தான் காடுவெட்டி குரு.
என்னுடைய தந்தையும் குருவின் தந்தையும் ஒன்றாகப் படித்தவர்கள். எனக்கும் குருவிற்கும் இடையே நல்ல நட்பு, புரிதல் உண்டு. பேரன்பு உண்டு. அறம் கொண்டவர்களை சில காலம் மறைக்கலாமே தவிர, வீழ்த்த முடியாது. இந்த ‘படையாண்ட மாவீரா’ என்கிற படைப்பு புனிதமானது. நிச்சயம் வெல்லும்”.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.