புரளி – சர்ச்சைகளுக்கு மத்தியில் வரலாற்று சாதனை படைத்த பழநி பஞ்சாமிர்தம் !
புரளி – சர்ச்சைகளுக்கு மத்தியில் வரலாற்று சாதனை படைத்த பழநி பஞ்சாமிர்தம் !
அறுபடை வீடுகளில் ஒன்றாக அறியப்படும் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தமிழகத்தில் பிரதிசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுள் ஒன்று. திருப்பதிக்கு லட்டு என்பதைப் போலவே, பழநி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான். பழநி பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. கோயில் பிரசாதத்திற்காக தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பெருமையையும் கொண்டிருக்கிறது.
பஞ்சாமிர்தத்தை பலர் தயாரித்து விற்பணை செய்தாலும், பழநி மலைகளில் விளையும் விருபாக்ஷி மலை வாழைப்பழத்தை கொண்டு, பழநி கோயில் தேவஸ்தான நிர்வாகமே தயாரிக்கும் பஞ்சாமிர்தத்திற்கென்று தனித்த சுவை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பழநி தேவஸ்தானமே தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தில் தரம் குறைந்த பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும்; கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை விற்பதாகவும் சிலர் புரளிகளை கிளப்பிவிட்டனர். மிக முக்கியமாக, பாமகவை சேர்ந்த பிரமுகரும் திரைப்பட இயக்குநருமான மோகன்ஜி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. கருத்தடை மாத்திரைகளை கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதாக அவர் பேசிய சர்ச்சை பேச்சுக்காக திருச்சி மாவட்ட போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டதும் பரபரப்பானது.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், கடந்த ஜூலை – 01 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான ஐந்தே மாதங்களில் மட்டும் 15 கோடியே 86 இலட்சத்து 19 ஆயிரத்து 125 ரூபாய்க்கு பஞ்சாமிர்த விற்பணையில் தனிச்சிறப்பான சாதனையை படைத்திருக்கிறது, பழநி தேவஸ்தான நிர்வாகம். சர்ச்சைகளுக்கு மத்தியிலும், கடந்தாண்டைவிட 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் விற்பணை இலக்கை எட்டியிருப்பதுதான் பலரை ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த சாதனைகளுக்கு பின்னே, பெரும் அரசியலே இருப்பதாக சொல்கிறார்கள் பழநி தேவஸ்தான வட்டாரத்தில். வழக்கமாகவே, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பணியாற்றும் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, பிரதான இடங்களில் கடை போடுவது தொடங்கி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது வரையில் முறைகேடான வகையில் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடையத்துடிக்கும் நபர்கள் சிலர் பழநி திருக்கோயிலிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையராக மாரிமுத்து பொறுப்பேற்றதிலிருந்து அதிரடிகள் ஆரம்பமானதாக சொல்கிறார்கள். எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல், கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து கோயில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான துணிச்சலான மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மிக முக்கியமாக, பழநி கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்பை அகற்றியதை, இவரது சாதனைகளுள் ஒன்றாகவே சொல்லி சிலாகிக்கிறார்கள். இவரது இந்த அதிரடி நடவடிக்கைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இணை ஆணையர் மாரிமுத்துவின் இத்தகைய அதிரடிகளால், பாதிக்கப்பட்டவர்கள், அதுநாள் வரையில் பஞ்சாமிர்த விற்பணையில் கொடிகட்டி பறந்து கோடிகளை குவித்தவர்கள், தங்களது பிழைப்பை கெடுத்துவிட்டார் இந்த ஆணையர் என்ற வெறுப்பிலிருந்துதான், பஞ்சாமிர்தம் குறித்த புரளிகளும் சர்ச்சை கருத்துகளும் உலாவர தொடங்கின என்கிறார்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நில்லாமல், தரமான பொருட்களை கொண்டு உரிய தரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். மேலும், பழநி கோயில் வளாகத்தில் தேவஸ்தானத்தின் சார்பில் வெறும் மூன்று விற்பணை நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவற்றை பழநி மலையடிவாரம் தொடங்கி சுற்றுலா பேருந்து நிலையம் வரையில் 13 விற்பணை நிலையங்களாக விரிவு படுத்தியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, ஐயப்பன் சீசன் மற்றும் திருவிழாக் காலங்களில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்க வழிவகை செய்ததோடு, மிக குறைந்த விலையில் 200 கிராம் பஞ்சாமிர்தம் வெறும் 20 ரூபாய்க்கும் கிடைக்கும் என்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். இதன் காரணமாக, சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக சிறியதும் பெரியதுமாக 20,000 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பணையாகி வந்த நிலையில், சீசன் சமயங்களில் அவை ஒரு இலட்சத்திலிருந்து 1.5 இலட்சம் வரையில் விற்பணையாகும் அளவுக்கு நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பழநி தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் கூட்டுழைப்பால் … இத்தகைய முன்னுதாரணமான முன்னெடுப்புகளால் … புரளி – சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பஞ்சாமிர்த விற்பணையில் சாதனையை எட்டியிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றல் தொடங்கி இதுபோன்ற பக்தர்கள் நலன் சார்ந்த விசயங்கள் முன்னெடுக்கப்படுவதும் முருக பக்தர்களை மகிழ்வில் ஆழ்த்தியிருக்கிறது.
– தி.குகன்.