Pomol 650 (பாராசிட்டமால்) – க்கு தடையா? Dr.அ.ப. பரூக் அப்துல்லா விளக்கம் !
பொதுமக்களுக்கும் மீடியோ சகோதரர்களுக்கும் விளக்கம் – காய்ச்சல் / தலைவலி / உடல் வலிக்கு உட்கொள்ளப்படும் பாராசிட்டமால் மாத்திரை தடைசெய்யப்படவில்லை.
மாறாக சில மருந்து கம்பெனிகள் தயாரித்த பேட்ச் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தரமற்றவை என்று கண்டறியப்பட்டதால் அவை தயாரித்த சுமார் பதினைந்து மருந்துகள் தடை செய்யப்பட்டு சந்தையில் இருந்து மீண்டும் பெறப்பட்டுள்ளன. இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான்.
மருந்துகள் தொடர்ந்து சந்தையில் விற்கப்படும் போது, அவற்றின் தரத்தை மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் அவற்றின் தரத்தில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால் அவை மீண்டும் பெறப்படுவதும் தொடர்ந்து நடந்து வரும் நடைமுறை.
பாராசிட்டமால் மாத்திரை காய்ச்சல் / உடல் வலி / தலைவலிக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை கர்ப்பிணிகளுக்குக் கூட பாதுகாப்பான மாத்திரை.
எனவே பாராசிட்டமால் தடை செய்யப்பட்டது என்று செய்தி வெளியிடுவதற்கு மாற்றாக குறிப்பிட்ட கம்பெனியினால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட பிராண்டு பாராசிட்டமால் மாத்திரை “தரக்குறைபாடு” காரணமாக தடை செய்யப்பட்டிருக்கிறது என்று தெளிவாக வெளியிட்டால் பொதுமக்கள் தெளிவடைவார்கள்.
மைசூரைச் சேர்ந்த அபன் ஃபார்ம்ஸ்யூடிக்கல் நிறுவனம் தயாரித்த போமோல்-650 எனும் பாராசிட்டமால் மாத்திரை , மைசூரைச் சேர்ந்த என் ரங்காராவ் & சன்ஸ் தயாரித்த ஓ சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம் ஆகியவற்றுடன் இன்னும் பதினைந்து மருந்துகள் அவற்றின் தரக்குறைபாட்டால் தடைசெய்யப்பட்டுள்ளன. அதிலும் அந்த கம்பெனிகள் தயாரித்த ஒட்டுமொத்த மருந்துகளும் தடை செய்யப்படாது.
குறிப்பிட்ட அந்த பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பின்வாங்கப்படும்.
இந்த நிறுவனங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மருந்து உருவாக்கும் பாதுகாப்பான நடவடிக்கைகளையும் நன் வழிமுறைகளையும் கடைபிடிப்பது உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் தரமான மருந்து உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் உபயோகத்துக்கு வரும்.
காலங்காலமாக மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் சந்தையில் நடந்து வரும் நிகழ்வே. இதற்கு மக்கள் பீதியோ பாராசிட்டமால் குறித்த அச்சமோ படத்தேவையில்லை.
பாராசிட்டமால் தடை செய்யப்படவில்லை போமோல்-650 எனும் ப்ராண்ட் அதன் தரக்குறைபாடு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.
Dr.அ.ப. பரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்