அங்குசம் பார்வையில் ‘டீன்ஸ்’ – திரை விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘டீன்ஸ்’ – திரை விமர்சனம் !
தயாரிப்பு : கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர். பாலசுவாமிநாதன், டாக்டர். பிஞ்சி ஸ்ரீனிவாசன், ரஞ்சித் தண்டபானி & ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி. உருவாக்கம் [ டைரக்ஷன், பார்த்திபன் பாஷையில் சொன்னால் கருவாக்கம் ] ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஒளிப்பதிவு : கேவ்மிக் ஆரி, இசை: டி.இமான். நடிகர்—நடிகைகள் –ராதாகிருஷ்ணன் பார்த்திபன், யோகிபாபு, தீபேஸ்வரன், ஃப்ராங்கின்ஸ்டன், கே.எஸ்.தீபன், விஷ்ருதா ஷிவ், ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், டி.அம்ருதா, அஸ்மிதா மகாதேவன், உதய் ப்ரியன், பி.கிருத்திகா, டி.ஜான் பாஸ்கோ, ரோஷன், பிரசிதா நசீர். பி.ஆர்.ஓ.-நிகில் முருகன்.
மேலே உள்ள நடிகர்—நடிகைகள் லிஸ்டில் உள்ள ராதாகிருஷ்ணன் பார்த்திபன், யோகிபாபு தவிர உள்ள பதின்மூன்று பேரும் 13—14 வயது பள்ளி மாணவ—மாணவிகள். அதாவது டீன் ஏஜெர்ஸ். ‘என்னடா இது அம்மா-அப்பாவோட இம்சை தாங்க முடியல. எப்பப் பார்த்தாலும் படிபடின்னு உயிரை வாங்குதுங்க” என மண்டை வீங்கித்தனமாக தங்களுக்குள்ளே குமுறிக் கொட்டுகிறார்கள் மேற்படி டீன் ஏஜெர்ஸ்.
அதில் ஒரு மாணவி, ”எங்க கிராமத்துல ஒரு கிணறு இருக்கு. அந்தக் கிணத்துக்குள்ள ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கு. அதைப் பார்க்குறதுக்காக எங்க பாட்டி வீட்டுக்குப் போவோம்” என கிளாஸுக்கு கட் அடித்துவிட்டுக் கிளம்புகிறார்கள் பதிமூன்று பேரும். எல்லாப் பக்கிகளும் கள்ளு குடிக்குதுக. அதுல ஒரு புள்ள ஒரு பையனைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லுது.
அதுக்கப்புறம் அவர்கள் போகும் காட்டு வழியிலேயே சில அமானுஷ்ய சக்தி கிளம்பி பயமுறுத்துகிறது. பதிமூன்று பேரில் சிலர் திடீரென காணமால் போகிறார்கள். மிச்ச பேரோ அலறுகிறார்கள்.இப்படியே இடைவேளை வரை அதுபாட்டுக்கு படம் ஓடுது. நாமும் தேமேன்னு உட்கார்ந்திருக்கோம்.
ஒரு டீ சாப்பிட்டுட்டு போய் உட்கார்ந்த பின் படம் ஸ்டார்ட் ஆகுது. விஞ்ஞானியாக பார்த்திபன் வருகிறார். அவர் போட்டிருக்கும் கண்ணாடி, அந்தக் கண்ணாடியின் வலது பக்கத்தில் மூன்று லென்ஸ்கள்னு டோட்டல் டிஃபெரெண்டாத் தான் தெரியுறாரு பார்த்திபன். படமும் அதுக்குப் பிறகு சையின்ஸ் ஃபிக்ஷனா மாறுது. நமக்கு கிர்ர்ர்…ருன்னு ஏறுது. அதுக்கப்புறம்? அதுக்கப்புறம் நமக்கு எதுவுமே ஏறல, தெரியல, புரியல…
”அப்புறம் என்னதான்யா புரிஞ்ச்சுது…?”
”புதுமைப்பித்தன் பார்த்திபனின் ரொம்ப…ரொம்ப…ரொம்ப.. புதுமையான படம்.”
”அப்பாடா.. இதாவது புரிஞ்சுதே உனக்கு”
“அப்படின்னு நினைக்குறீகளா? அட அதான் இல்ல.”
”அப்புறம் என்னதான்யா புரிஞ்சு தொலைச்சுது உனக்கு?”
”புதுமைப்பித்தன் பார்த்திபனின் ரொம்ப…ரொம்ப..ரொம்ப…”
“ யோவ்…யோவ்… நிறுத்துய்யா. என்னய்யா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்க”
“அட ஆமாங்க… புதுமைப்பித்தன் பார்த்திபனின்…”
“ அட போய்யா நீயும் உன்னோட விமர்சனமும்.. படம் பார்த்து உனக்கு பித்துப் பிடிச்சிருச்சு போல”
“அட எனக்கு பித்தெல்லாம் பிடிக்கலங்க, இப்படியெல்லாம் எழுதுனாத்தான் பார்த்திபனுக்குப் பிடிக்கும்னு சொன்னாக. அப்புறம் இன்னொரு முக்கியமான சேதி, ‘டீன்ஸ்-2’வும் வரப்போகுதாம். அதப் பார்த்துப்புட்டு கெத்தா எழுதுறேன்’
“எதே…”
-மதுரை மாறன்